Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 12

உன்னைத் திருத்திக்கொள் உலகம் தானாகத் திருந்தி விடும்

உன்னைத் திருத்திக்கொள் உலகம் தானாகத் திருந்தி விடும் என்ற இச் சொற்றொடர் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் பொருட்டு காலம் காலமாக சொல்லப் பட்டு வருகிறது. தனிமனித ஒழுக்கமும் பண்பு நலன்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் தேவை என்றாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும் அந்த உணர்வுகள் ஒரு போதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. ஏனெனில் அனைவரும் அவ்வாறு நினைத்து விடப்போவதில்லை. ஒருவர் திருந்தி, பின்னர் அவரது குடும்பம் திருந்தி, அதன் பின் சமூகம் திருந்தி, நாடு திருந்தி, உலகம் திருந்தி.... இவை நடக்கக் கூடியதா? வெறும் கற்பனை வாதத்திற்குத்தான் இது உதவுமே தவிர நடமுறை சமூக வாழ்வுக்கு ஒரு போதும் உதவாது. அப்படியானால் சமூகத்தில் உள்ள குறைபாடுகளைத் திருத்த முடியாதா? முடியும் ஆனால் தனி மனித மாற்றத்தால் அது முடியாது, சமூக மாற்றத்தால் அது முடியும் என்பதுடன் அந்த சமூக மாற்றம் தனி மனிதனையும் மாற்றும். தனி மனித மாற்றத்தால் உலகம் மாறியிருக்கிறது என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை. ஆனால் சமூகமாற்றங்கள் தனி மனிதர்களை மாற்றியிருக்கின்றன என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

குறிப்பாகத் தமிழீழத்தை எடுத்துக் கொண்டால் சாதிய ஏற்றத் தாழ்வுகள் பல சமூகங்களில் இருந்தாலும் யாழ்ப்பாணச் சமூகத்தினரிடம் அது சற்று அதிகமாகவே இருக்கிறது. சாதி பார்க்கக் கூடாது அது தவறு என ஆன்மீகப் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தால் அது அவர்களைத் திருத்திவிடாது. காலம் காலமாக வாழையடி வாழையாக அது கற்பிக்கப் பட்டு வருகிறது. சாதியம் தவறு என உணர்ந்து சமரச நோக்கோடு வாழ்பவர்கள் முற்படுத்தப் பட்ட சாதியிலும் இருக்கிறார்கள். அவர்கள் விதி விலக்குகளே தவிர விதிகள் அல்ல. விதி விலக்குகளால் விதிகள் அவ்வளவு எளிதில் மீறப் பட்டு விடுவதில்லை. அவர்களால் தங்கள் குடும்பத்தினைரையே மாற்ற முடியாமல் இருக்கும்போது ஒரு சமூகத்தை நிச்சயம் மாற்றிவிட முடியாது. இறுதியில் குடும்ப அழுத்தங்களுக்கு அவர்களும் பணிந்து போய்விடுகிறார்கள்.

இந்நிலையில் ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தணித்திருக்கின்றன. தமிழீழ அரசு சாதியையும் சீதனத்தையும் சட்டம் கொண்டு வந்தது ஒழிக்க முற்பட்டது நல்ல முயற்சி. இது ஒரு சமூகமாற்றம். புலம் பெயர்ந்த சமூகத்தால் சாதியம் என்பது கட்டிப் பாதுகாக்கப் படுகிறது என்றாலும் ஈழத்தில் முன்பு இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு குறைக்கப் பட்டருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதியத்திற்கு எதிராக, உயர் சாதித் திமிரைக் கட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை ஒரு அரசு கொண்டு வரும்போது சாதி எதிர்ப்பாளர்களை அது மகிழ்விக்கிறது என்பதற்கும் மேலாக மற்றுமொரு நன்மை அங்கே நடக்கிறது. ஆம் சாதியவாதிகள் அச்சப் படுவார்கள் சாதி பார்ப்பது தேசக் குற்றம் என்றொரு நிலைக்கு அவர்கள் தள்ளப் படுவார்கள். ஈற்றில் சாதியம் சமூகத்தில் இருந்து மறைவதற்கும் வழிவகுக்கும்.

பிரன்சுப் புரட்சி நிலவுடமை ஆதிக்கவாதிகளைத் தகர்த்தது ஒரு சமூக எழுச்சியால்தான். கறுப்பின மக்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறி தனிமனித பண்பு நலன்களால் குறைக்கப் படவில்லை. இடைவிடாது நடந்த போராட்டங்களாலும், சிந்திய இரத்தங்களாலும், மார்டின் லூதர் கிங் போன்றவர்கின் உயிர்த் தியாகங்களாலுமே அவை குறைக்கப் பட்டன. அதன் பலனாக மேலை நாட்டு அரசுகள் நிறவெறிக்கு எதிராகக் கொண்டு வந்த கடுமையான சட்டங்களே இன்று பல வெள்ளை இனத்தவர்களையே நிற ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பும் அளவிற்கு மாற்றியிருக்கின்றன. குறிப்பாக Anti Discrimination Commission எனும் மனிதர்களை வேறுபாட்டோடு நடத்துவதற்கு எதிரான ஆணைக்குழு அமுலாக்கப் பட்டு அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கபடுகின்றன.

அதைப் போன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் வணிகத் தொழிலை எடுத்துக்கொண்டால். தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாலோ அல்லது அதில் ஈடுபடும் பெண்கள் மீது வெறுப்பைக் கக்குவதாலோ அவை மறையப் போவதில்லை. அதற்கான சமூகக் காரணிகளை ஆரய வேண்டும். தமிழ் நாடு போன்ற இடங்களில் பாலியல் தொழில் செய்யும் ஏழைப் பெண்களின் கதைகள் கல்லையும் கரைய வைக்கக் கூடியவை. பணக்கார முதலைகளின் பசிக்கு பாவம் அவர்களின் வறுமை பயன்படுகிறது. தனியுடைமைதான் ஒரு குறிப்பிட்ட மக்களை பெரும் பணக்காரர்களாகவும் வேறு சில மக்களை அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாத அளவுக்கு ஏழைகளாகவும் மாற்றுகிறது. அனைவருக்கும் சமமான கல்வி வேலைவாய்ப்பு என நாட்டில் சமவுடமை பூத்துக் குலுங்கினால் நளடைவில் இவையெல்லாம் மறைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளன.

நாம் வாழும் உலகம் எத்தனையோ வகையான அடக்குமுறைகளையும் மனித இழிவுகளையும் சந்தித்திருக்கின்றன. அவைகள் இன்று புதிய வடிவத்தில் தொடர்ந்தாலும் முன்பு நிலவிய ஆண்டான் அடிமை முறை, நிலவுடமை ஆதிக்கங்கள் போன்றவைகள் தற்போது இல்லை. அன்றைய அடிமையுடைமைச் சமூகத்தில் அடிமைகளைக் கொல்வதற்கும் அவர்களின் உடைமையாளர்களுக்கு உரிமை இருந்து வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. 1860 ஆம் ஆண்டு அப்போது அமரிக்காவின் அரசுத் தலைவராக இருந்த அபிரகாம் லிங்கன் அவர்கள் அடிமை முறையை ஒழித்துக் கட்டுவதற்கு கடுமையான சட்டங்களைப் பிறப்பித்தார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து அடிமைகளும் முற்றாக விடுதலையடைய வேண்டும் (Emancipation Proclamation) என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதனை மீறுபவர்கள் சட்ட விரோதிகளாகக் கருதப் பட்டனர். விளைவு அடிமை முறை அதன் பின்னர் முற்றாக ஒழிக்கப் பட்டு விட்டது.

எனவே ஒருவரின் உள்ளம் திருந்துவதால் உலகம் திருந்திவிடாது. மாறாக சமூக, அரசியல் மாற்றங்களே அந்த அந்த ஒருவரையும் திருத்தும் வல்லமை பெற்றவை.

No comments:

Post a Comment