Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 23

கோடம்பாக்கத்தின் ஒஸ்கார் கனவு

தமிழ் சினிமாவிற்கு ஒஸ்கார் விருது கிடைக்காதா என்ற ஏக்கம் கோடம்பாக்கத்து குருவிகளுக்கு தீராதா தாகமாகவிருக்கிறது. பல படங்கள் அனுப்பப் பட்டுள்ளன ஆனால் ஒன்றுக்கும் விருது கிடைக்கவில்லை. இந்திய அளவில் பார்க்கப் போனால் 1957 ஆம் ஆண்டு வெளியாகிய ‘மதர் இந்தியா’ என்ற ஒரேயொரு இந்திப் படம் மட்டும்தான் ஓஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. தமிழ் திரையுலகத்தை எடுத்துக் கொண்டால் முதன் முதலாக ஏ.சி. திரிலோகச்சந்தர் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகனை அனுப்பினார்கள். பொதுவாக ஏதார்த்தப் படங்கள், மக்களின் சமூக நிலைகளை, அவர்களின் வாழ்க்கை அவலங்களை இயல்பான கதையம்சம் மற்றும் நடிப்பில் வெளிக்காட்டி நிற்கும் படங்களே உலக சினிமா வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன. மிகை நடிப்பும் கூடவே ‘காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழிபோகும் என்று யாரோ சொன்னார்’ போன்ற ஆடல், பாடல், மசாலாக்களுடன் கூடிய தெய்வ மகனை அனுப்பினார்கள். படம் விருதைத் தட்டவில்லை.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஷங்கரின் அக்மார்க் மிட்நைற் மசாலாவான இந்தியனை அனுப்பினார்கள். அதுவும் வெறும் கையோடு திரும்பி வந்தது. இந்தியனைப் பார்த்து விழிகளை விரித்த நம்மில் பலருக்கோ வியப்பும் ஏமாற்றமும். இந்தியனே பெற முடியவில்லையே வேறு எந்தப் படம்தான் பெற முடியும் என நம்மவர்களில் பலரே அப்போது பேசிக்கொண்டார்கள். ஒரு விதத்தில் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஓஸ்கார் விருதை நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல துறைகளுக்கும் கொடுப்பார்கள். ஆனால் அந்த விருதுகள் அமரிக்க அதாவது ஹொலிவூட் திரைப்படங்களுக்கு மட்டும்தான் கொடுப்பார்கள். அத்தோடு சிறந்த பிற மொழித் திரைப்படமாக வருடத்திற்கு ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து விருது கொடுப்பார்கள். அப்படிப் பார்க்கும் போது அங்கு போட்டிக்கு வந்திருக்கும் பிற மொழிப் படங்களோடு ஒப்பிடுகையில் கோடம்பாக்கம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இங்கு ஒரு முக்கியமா விடயம் என்னவெனில் உலக அளவில் திரைப்படங்களுக்காக கொடுக்கப்படும் உயரிய விருது ஒஸ்கார் அல்ல. அது பிரான்சு நாட்டில் நடைபெறும் கேன்ஸ் விருதாகும். இது பலருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் அண்மையில் இயக்குனர் அமீரின் பருத்தி வீரன் கேன்ஸ் வீருதைப் பெற்றிருக்கிறது.

தமிழில் சிறந்த எதார்த்தப் படங்கள் வரவேயில்லையா எனக் கேட்கலாம் வந்திருக்கின்றன. மிக நல்ல திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன ஆனால் அவற்றுள் பல உலக அளவில்கூட அல்ல தமிழர்கள் மத்தியில் கூட அறிய முடியாமல் போய்விட்டன. ‘ஏழை படும் பாடு’ என்றொரு படத்தை கே.ராம்நாத் எடுத்திருந்தார். 1951 இல் வெளியாகியது. புகழ் பெற்ற பிரன்ச்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோவின் கதையை தனது நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி மிக அற்புதமாக எடுத்திருந்தார் ராம்நாத். மரபை மீறிய ஒரு திரைப்படமாக அது வெளிவந்தது. அதே ராம்நாத் 1954 இல் மனிதன் என்று ஒரு படத்தைக் கொடுத்தார் (ரஜினியை வைத்து எஸ்.பி. முத்துராமன் இயக்கிய மனிதன் வேறு. அந்தப் படம் இந்தப் பட்டியலுக்குள் வராது). அன்றைய காலத்தில் கூட எத்தனைபேர் இவற்றைப் பார்த்திருப்பார்கள் எனத் தெரியாது.

வீணை வித்துவான் எஸ். பாலச்சந்தர் (கே.பாலச்சந்தர் அல்ல, அவர் வேறு இவர் வேறு) அந்த நாள் என்றொரு படத்தைக் கொடுத்தார். சிவாஜி கணேசன் பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் தொடக்கத்தில் துப்பாக்கி ஒன்று வெடித்து கதாநாயகன் இறந்து விடுவான். அந்த நிகழ்வு எப்படி நடந்தது என பலரது பார்வையில் படம் நீளும். பாடல்கள் எதுவும் இல்லாது வெளிவந்த முதல் தமிழ் திரைப் படம் இதுவாகும்.

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் தி. ஜானகி ராமன் எழுதிய ‘நாலு வேலி நிலம்’ என்ற கதையை நடிகர் சகஸ்ரநாமம் திரைப் படமாகத் தயாரித்தார். முத்துராமன் தேவிகா ஆகியோர் நடித்திருந்தனர். அதுவும் கையைச் சுட்டுக் கொண்டது. இயக்குனர் சிறிதரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஏ.வின்சன்ட் ‘துலாபாரம்’ என்றொரு படத்தைத் தந்தார். முழுக்க முழுக்க யதார்த்தப் படம் எனக் கூறாவிட்டாலும் அதற்கான பாதையை கோடிட்டுக் காட்டியது. பலரது மனத்தை நெகிழ வைத்த திரைப் படம் அது. ஓரளவிற்கு நன்றாக ஓடினாலும் இது போன்ற திரைப்படங்கள் தொடந்து வரவில்லை. கோடம்பாக்கம் வழக்கம் போல் எம்.ஜி.ஆர் பாணி சிவாஜி பாணி எனத் தன்னை குறுக்கிக் கொண்டது.

1964 ஆம் ஆண்டு ஜெயகாந்தன் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்றோரு படத்தை எடுத்தார். சேரி மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. உலகப் புகழ் பெற்ற வங்காள இயக்குனர்கள் சத்யஜித்ரே மிருணாள் சென் போன்றவர்கள் வியந்து பாராட்டிய தமிழ்த் திரைப்படம் இது. ஆனால், அந்தக் காலத்தில் ஒரு விழுக்காடு தமிழர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்களோ தெரியாது.

இந்த நிலைமை எழுபதுகளின் இறுதியில் சற்று மாற்றம் பெற்றது. அப்போதிருந்த காலம் ஓரளவிற்கு யாதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்ட காலமாகையால் மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டன. கவிதையை கமராவாலும் வடிக்கமுடியும் என்பதை மகேந்திரன் மெய்ப்பித்துக் காட்டினார். ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ தமிழில் வெளி வந்த மிகச் சிறந்த படங்களுள் ஒன்று. து. ராமமூர்த்தியின் கதையை ஜெயபாரதி குடிசை என்ற திரைப் படமாக எடுத்தார். பிச்சைக் காரர்களின் வாழ்க்கையை வைத்து பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் ‘எச்சில் இரவுகள்’ என்றொரு படத்தை எடுத்தார். மற்றும் துரையின் ‘பசி’, எண்பதுகளின் இறுதியில் பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற படங்கள் வெளி வந்தன. இந்தப் பட்டியலில் இடம் பெறாத இன்னும் சில திரைப் படங்கள் உள்ளன. வாழ்வியலை மிக அழகாகக் இவை படம் பிடித்துக் காட்டியிருந்தன. இருப்பினும் அரசியல் கோமாளித்தனங்களும், நம்ப முடியாத கதையமைப்புக்களும், மிகைப் படுத்தப்பட்ட கதாநாயத் தன்மைகளும், கதா நாயகர்களின் விடலைத் தனமான பேச்சுக்களும் தமிழ் திரையை விழுங்கிக் கொண்டன. கூடவே தாம்தூம் எனக் குதிப்பதும், கோணங்கிச் சேட்டைகள் செய்வதும், கீழ்த்தரமான சொற்களால் அடுத்தவனைத் திட்டுவதும் நகைச் சுவை என்ற பெயரில் அரங்கேறின. கமரா நெறியாள்கை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் மேடை நாடகத்தை படம் பிடப்பதுபோல் நடிக நடிகையர்களை படம் பிடத்துத் தள்ளினார்கள். விளைவு கோடம்பாக்கமும் இது போன்ற படங்களை வைத்து தனது சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்கிக் கொண்டது.

தமிழ் சமூகத்தில் கதைகளுக்கு பஞ்சமில்லை, கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் மிகச் சிறந்த நடிக நடிகையர்கள் பலர் இருக்கின்றார்கள். மிகை நடிப்பிலே தூள் பறக்க விட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதார்த்த நடிப்பு தெரியாமலிருக்கவில்லை.

ஒரு தடைவை சிவாஜி கணேசன் நடித்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நகைச்சுவை நடிகருக்கு எரிச்சல் வந்தது. ஏன் தேவைக்கு அதிகமாக மிகைப் படுத்தி நடிக்கின்றீர்கள் என சிவாஜிகணேசனிடமே அலுத்துக் கொண்டார் அந்த நகைச்சுவை நடிகர். உடனே சிவாஜி கணேசன் அதே காட்சியை மிக இயல்பாக நடித்துக் காட்ட அந்த நகைச்சுவை நடிகருக்கோ வியப்பை அடக்க முடியவில்லை. இவ்வளவு எதார்த்தமாக அற்புதமாக நடிக்கும் நீங்கள் ஏன் அவ்வாறு செய்வதில்லை எனக் கேட்ட போது அதற்கு சிவாஜி கணேசன் என்னிடம் இருந்து மிகை நடிப்புத்தான் எதிர் பார்க்கப் படுகிறது அதைக் கொடுக்க வேண்டியது எனது கடமை எனப் பதிலளித்தார்.

எனவே இங்கே தவறு நடிகர்களில் இல்லை. இது போன்ற செயற்கையான கற்பிதங்களாலேதான் உலகம் எதிர்பார்க்கும் எதார்த்த சினிமா தமிழ் சூழலில் வளர முடியாமல் போய்விட்டது. மலையாள இயக்குனரான அடூர் கோபால கிருஷ்ணன் போன்றவர்கள் உலகப் புகழ் பெற்ற அளவிற்கு சிறிதரோ, பாராதிராஜாவோ, மகேந்திரனோ புகழ் பெற முடியாமல் போனதற்கும் இதுதான் காரணம்.

இங்கே நம்மில் பலருக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஈழத்தில் ஆயரிரமாயிரம் கதைகள் குவிந்து போயிருக்கின்றன. குறிப்பாக போராட்டம் தொடர்பான கதைகளும், அந்த மண்ணில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வுகளும் ஏராளம் இருக்கின்றன. இது போன்ற போராட்டங்கள் நடை பெற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த இயக்குனர்கள் எடுத்த படங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன. நாமும் அவ்வாறு செய்யலாம் அவ்வாறு செய்யும்போது நாம் ஒரு விடயத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆம் கோடம்பாக்கத்து பாணியை நிராகரிக்க வேண்டும். ஏனெனில் கோடம்பாக்கம் பிதாமகன், அழகி, பருத்திவீரனை நோக்கிப் போகவில்லை மாறாக சிவாஜி, போக்கிரி குருவி எனக் கரடி விட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு இரு திலகங்களின் ரசிகர்களின் அடிபாடுகள் கமல்-ரஜினி எனத் தொடர்ந்து தற்போது சுப்ரீம் ஸ்டார், அல்டிமேற் ஸ்டார், கொன்கிறீற் ஸ்டார், கிறினைற் ஸ்டார் எனப் புறப்பட்டிருக்கின்றன. அவர்கள் கோடியில் புரள இவர்கள் அவர்களுக்காக கொடிக் கம்பம் நட்டு சில்லறையாகிறார்கள். நாம் அவர்களின் பாணியைத்தான் நிராகரிக்க வேண்டும் அவர்களையே அல்ல. எங்களது பாணியில் அவர்களைப் பயன் படுத்த முயலவேண்டும். அவர்களின் நட்பும் பக்க பலமும் தேவை என்பதை மறந்து விட முடியாது. முக்கியமாக இன்றைய இளம் நடிகர்களின் கோமாளித்தனங்களுக்கு ரசிகர்களாக இருப்பதை முதலில் நிறுத்தவேண்டும். இவர்களின் படங்களைப் பார்க்கும் போது ஒன்று மட்டும் நினைவிற்கு வருகிறது. இவர்களை கொண்டு போய் உண்மையான களத்தில் இறக்கினால் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவருவார்கள். புலத்தில் வாழும் ஈழத் தமிழரது கலைப்படைப்புக்களைப் பார்க்கும்போது கோடம்பாக்கம் போன்றே இவர்களும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டும் துவைத்த துணியைத் துவைத்துக் கொண்டும்தான் அவர்களைப் போலவே ‘பஞ்ச் டயலொக்’ விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் அதே பாணி ஒரு வேறுபாடும் இல்லை.

1960 வரை இலங்கையில் சிங்கள சினிமா தமிழ்நாட்டைச் சார்ந்தே இயங்கி வந்தது. மிஸ். மாலினி (நடிகர் ஜெமினி கணேசனின் முதல் படம்) போன்ற திரைப்படங்கள் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சக்கைபோடு போட்டிருக்கின்றன. அதன் பின்னர் சிங்கள திரையுலகம் விழித்துக் கொண்டு தனக்கென தனிப் பாணியை வரித்துக் கொண்டது. 1964 ஆம் ஆண்டு மார்ரின் விக்கிரமசிங்காவின் 'கம்பெரலிய' (தமிழில் கிராமப் பிறழ்வு) எனும் கதையை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்பவர் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். சிங்களத் திரைப் பட வரலாற்றில் பெரும் மைல்கல்லாக அது அமைந்தது. அந்த நேரத்தில் இந்தியத் திரைப்படங்களுக்கே கிடைக்காத உலகப் புகழ் இதற்குக் கிடைத்தது. பல விருதுகளை அள்ளிக் குவித்தது. இதை எதற்கு இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் இந்தியப் பாணியை பின்பற்றாமல் ஈழத் தமிழர் நாம், நமக்காக ஒரு பாணியை நல்ல முறையில் வரித்துக் கொண்டோம் என்றால் இன்று ஈரானியப் படங்கள் உலகப் புகழைப் பெற்றது போல் எதிர்காலத்தில் நாமும் பெற வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment