இந்து மதத்தின் கொல்லாமை
ஈழத்தில் நான் வாழ்ந்த சின்னஞ்சிறு வயதில் கிழமைக்கு ஒரு தடவைதான் அசைவம் உண்பதற்கு வழி கிடைக்கும். எனது குடும்பமும் பக்தியில் ஊறிய வைதீகக் குடும்பம் என்பதால் விரதங்களுக்கும் குறைவில்லை. நவராத்திரி, அல்லது எங்கள் ஊர்க் கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் தொடர்ந்து 10 அல்லது 15 நாட்கள் அசைவ உணவு முற்றிலுமாக தவிர்க்கப்படும். அந்தச் சிறிய வயதில் நானும் பக்தியில் திளைத்திருந்ததால் அவற்றை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தேன்.
அதே நேரம் இந்த சைவக் கட்டுப்பாடு பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களிடம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். இதற்கான காரணத்தை எனது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டபோது, இந்து மதம் கொல்லாமையை வலியுறுத்தும் அளவிற்கு மற்ற மதங்கள் வலியுறுத்துவதில்லை, இந்து மதம் மட்டுமே மச்சம் மாமிசம் உண்பதைக் கண்டிக்கிறது என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது. இதை எண்ணிப் பார்க்கும் போது எனது மனம் இனித்தது. என்ன இந்து மதத்தின் தன்மை என எண்ணினேன். அதுவும் என் மனதில் கோபுரமாக உயர்ந்தது. ஆனால் இன்றோ இந்து மதத்திற்கும் கொல்லாமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இந்து மதத்தின் எந்த நூல்களுமே கொல்லாமையை வலியுறுத்தவில்லை. மாறாக உயிர்க் கொலை செய்வதை அவை நியாயப் படுத்துகின்றன. உயிர்களைக் கொன்று யாகத் தீயில் பலியிடும் வழக்கம் பண்டைய ஆரியர்களின் மரபில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வளவு ஏன் இந்து மதத்தின் புனிதச் சின்னமான பசுவைக் கொலை செய்வதையே இந்து மதத்தின் புனித நூல்கள் நியாயப் படுத்துகின்றன.
இந்து மதத்தின் மிக முக்கிய நூலான மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. அத்துடன் வேள்வி சிரார்த்தம் போன்றவற்றில் தரப் படும் இறைச்சியை உண்ண மறுக்கும் பிராமணன் இருபத்தியொரு முறை விலங்ககாப் பிறப்பான் என்றும் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).
இந்து மதத்தின் முக்கிய முனிவர்களான தேவகுரு பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், பிரஜாபதி போன்றவர்கள் பசு இறைச்சி உண்பது பாவமல்ல என்று கூறியிருக்கின்றார்கள். கந்த புராணம், தேவி புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம் போன்ற புராணங்களும் பசு இறைச்சி உண்பதை நியயப் படுத்துகின்றன.
இந்து மதத்தில் கடவுள்களகக் கருதப்படும் சிவன், விஷ்னு, போன்றவர்கள் மது மாமிசம் போன்றவைகளை விரும்பி உண்டதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் இந்திரன், அக்னி, யட்சன், சோமா, அஸ்வினிகுமாரர்கள் போன்றவர்கள் மாட்டிறச்சியை விரும்பி உண்டாதாக பார்ப்பனரின் புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதிகாசக் கதாபாத்திரங்களான இராமன், சீதை, பாண்டவர்கள், திரௌபதி போன்றவர்கள் பசு இறைச்சியை விருந்தாகப் படைத்துத் தாங்களும் உண்டாதாக இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் நஞ்சு தடவப் படாத அம்புகளால் மான்களை வேட்டையாடி அவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்த பின் தாங்களும் உண்டதாகவும் ஜெயத்திரதனுக்கும் அவனது படைவீரர்களுக்கும் பாஞ்சாலி ஐம்பது மான்களைக் கொன்று விருந்து படைத்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது.. மகாபாரதத்தின் பதினெட்டு பர்வங்களில் ஒன்றான அனுசான பர்வத்தில் நாரதர் பிராமணர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் போன்றவற்றை வழங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். வால்மீகியின் இராமாயணத்தில் இளம் கன்றின் இறைச்சியை அரச குரு வசிஷ்டர் சுவைத்து உண்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதே இராமாயணத்தில் தசரதன் தனக்கு வாரிசு வேண்டி 'புத்திர காமேஷ்டி' யாகம் செய்த போது பல நூற்றுக் கணக்கான விலங்குகளை வெட்டி யாகத்தில் பலியிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
இந்து மதத்தின் அணிவேராக விளங்கும் பகவத்கீதை உயிர்களைக் கொன்று உண்பது பாவம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியயாயப் படுத்துகிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மனைவியானவள் தனது கணவனுக்கு செய்யும் பணிவிடைகளிலிருந்து தவறினால் அவளை வேட்டை நாய்களால் கடிக்கவிட்டு கொல்ல வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8 சூத்திரம் 371 - 372 ).
வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதம் கணவன் இறந்தால் மனைவி தீக்குள் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது (ரிக். 10, 18.7)
வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்த புகழ் பெற்ற இந்திய ஆய்வாளர்களான ராகுல் சங்கிருத்தியாயன், ராஜேந்திர லால் மித்ரா, லட்சுமண சாஸ்திரி, மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஹெச்.டி.சங்காலியா போன்றவர்கள் உயிர்களை யாகத்தில் பலியிடுவதும் அவற்றை இறைச்சியாக உண்பதும் வேதகால இந்தோ-ஆரியர்கள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது என்பதையும் பிராமணர்களின் தர்ம சாஸ்திர நூல்கள் அவற்றை நியாயப் படுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாத சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது கொல்லாமைக்கும் இந்து மதத்திற்கும் எந்த வித தெடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் உயிர்க் கொலைகளைக் மிகக் கடுமையாக கண்டித்தவர்கள் பௌத்தத்தைத் தோற்றுவித்த புத்தரும் சமணத்தைத் தோற்றுவித் மகாவிரரும்தான். வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிடுவதை தீவிரமாக எதிர்த்தார்கள். மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையான அறக் கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, நடக்கும் பொழுது பூச்சி, புழு, எறும்பு போன்ற உயரினங்கள் காலில் மிதிபடக் கூடது என்பதற்காக நிலத்தைப் பெருக்கிக் கொண்டோ அல்லது பாதங்களில் மெதுவான பஞ்சு போன்றவைகளை கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்றார்கள். அதிலும் மகாவீரர் பல படிகள் மேலே போய் பச்சைத் தாவரங்களைத் தவிர்த்து காய்ந்து போன சருகுகளை உண்ணுமாறு வேண்டினார். பௌத்தமும் சமணமும் வலியுறுத்திய கொல்லாமை என்ற அறக் கோட்பாட்டிற்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment