Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 16

இந்தியாவின் ஈழ ஆதரவு

இந்தியா ஏன் தமிழீழத்தை ஆதரிக்க மறுக்கிறது என்ற குழப்பம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் இந்திய ஆளும் கும்பல்களின் இரட்டை அரசியலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனித் தமிழீழத்திற்காக நாங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களையும் போராளிகளையும் பறி கொடுத்ததற்குப் பின்பும் ஒன்று பட்ட இலங்கை, இறையாண்மை என்றே இந்திய அதிகார வர்க்கத்தின் குரல்கள் ஒலிக்கின்றன.

கொசோவோவை ஆதாரிக்கும் இந்தியா செக்கோஸ்லோவாக்கியா பிரிந்ததை ஆதரிக்கும் இந்தியா தனக்குப் பக்கத்தில் தினம் தினம் மனித அவலத்தை சந்திக்கும் தமிழர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை.

பாகிஸ்தானோடு போரிட்டு வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா வங்காளிகளைக் காட்டிலும் பல மடங்கு மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்காக ஏன் ஒரு தனி நாட்டை உருவாக்கித் தரவில்லை. இந்திய அரசின் நயவஞ்சகமும் இரட்டை வேஷமும் இதிலிருந்து தெரிகிறது.

1962 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் மூண்டபோது ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள் வீதி வீதியாக நிதி சேகரித்து அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்ளால் நேரு அவர்களிடம் சேர்ப்பித்தார். அதே போன்று 1971 இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். அந்த பெருந்தன்மைகளுக்கு இந்தியா எங்களுக்கு செய்த பரிகாரங்கள் விலை மதிக்க முடியாதவை.

நம்மவர்களுக்கோ இன்னும் இந்திய மயக்கம் தீர்ந்த பாடில்லை. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் டில்லியின் துரோக அரசியல் உங்களுக்கும் புரியும்.

தமிழீழம் தோன்றி விட்டால் தமிழ் நாட்டிலும் பிரிவினைவாதம் தொடங்கும் என்ற இந்திய மேலாதிக்கவாதிகளின் நச்சுப் பரப்புரைகளில் நம்மவர்கள் மயங்கி நிற்கிறார்கள்.

தமிழீழம் என்று ஒரு நாடு தோன்றிவிட்டால் இந்தியாவில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை வலுவடையைச் செய்து விடும், என்ற கருத்து பொய்யானது மட்டுமல்ல வரலாற்று முரணானதும் கூட. ஈழத்தில் தனி நாட்டுக் கோரிக்கை 1970 களின்; தொடக்கத்தில்தான் எழுப்பப் படுகிறது. அது வரைக்கும் சமஷ்டி முறையிலான தீர்வையே தமிழர்கள் எழுப்பி வந்தார்கள், அதுவும் 1949 இல்தான் சமஷ்டிக் கட்சி தொடங்கப் படுகிறது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் 1938-ம் ஆண்டு தந்தை பெரியார், சோமசுந்தரப் பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களால் "தமிழ்நாடு தமிழருக்கே|" என்ற விடுதலைக் குரல் தமிழக மண்ணில் எழுப்பப் பட்டு விட்டது. அதாவது 1941 ஆம் ஆண்டு முகமத் அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினையைக் கேருவதற்கு முன்னமே தமிழ் நாட்டு விடுதலைக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் இறுதிவரைக்கும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இவர்கள் யாரும் ஈழத்தைப் பார்த்து தங்கள் விடுதலைக் கோரிக்கையை எழுப்பவில்லை. எனவே தனி ஈழம் மலர்ந்தால் தமிழ் நாடும் பிரிவினைக் கோரிக்கையை எழுப்பும் என்று கூறுவது பொருத்தமற்றது.

வங்கதேசம் பிரிந்தவுடன் அதனோடு ஒட்டி இருந்த மேற்கு வங்காளம் பிரிந்து சென்றுவிடவில்லை. தமிழீழம், தமிழகம் போன்றே வங்கதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் இருப்பவர்கள் ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டு விடுதலைப் போராட்டம் வேறு. தமிழீழ விடுதலைப் போராட்டம் வேறு. இரண்டுமே வேறு வேறு தளங்கள். தமிழ் நாட்டுப் பிரிவினைக்கு தமிழீழம் ஒரு போதும் காரணமாக இருக்காது.

தமிழீழ எழுச்சி சிங்களப் பேரினவாதத்தின் இராணுவ அடக்கு முறையால் எழுந்தது. தமிழ் நாட்டு விடுதலை எழுச்சி இந்திய வல்லதிக்கத்தின் சமூக, பொருளாதார, மற்றும் பண்பாட்டு அடக்கு முறையால் எழுந்தது. ஒன்றைப் பார்த்து ஒன்று எழவில்லை.

ஆனால் இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதுடன் நூற்றுக்கு நூறு நியாமானவைகளே!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மிக அழகாக இப்பச் சொல்லுவார்

« சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு கொடுத்தது சாட்டையடி அதன் வலியை அவர்கள் நேரடியாகவே உணர்ந்து கொண்டதால் அதை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் இந்தியம் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு கொடுத்தது மயக்க ஊசி. அதனால் அவர்கள் போராட வேண்டும் என்ற உணர்வே அற்று மயங்கிக் கிடக்கிறார்கள். »

இந்திய அரசின் இரட்டை நிலை அரசியலுக்கு இன்னும் ஒன்றை உதாரணமாகக் கூறலம்.

கொலனித்துவ ஆதிக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு மட்டும்தான் விடுதலை வேண்டும் ஆனால் ஒரு நாட்டில் இருக்கும் தேசிய இனங்களுக்கு விடுதலை தரவே கூடாது என ஐ.நா. அளவில் பிதற்றும் இந்தியா, திபத் சீனாவிலிருந்து பிரிவதை விடாப்பிடியாக ஆதரித்தது.

இவ்வாறு தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் தடவிக்கொண்டு தன்னை ஜனநாயக நாடாக காட்ட முனைகிறது.

எங்களைப் போன்றவர்கள் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்யும்போது தங்களை இந்தியர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் அதற்கு ஒத்தூதும் நம்மவர்களில் சிலரும் நாம் ஏதோ தமிழீழ விடுதலையையும் தமிழ் நாட்டு விடுதலையையம் ஒரே அலகால் அளக்க முற்படுவதாக புதுக் கரடி விடுகிறார்கள்.

நாம் எங்கே ஒரே அலகால் அளக்க நினைக்கிறோம்

இரண்டும் வேறு வேறு தளங்கள்!

நாளை தமிழீழம் மலர்ந்தால் அது ஒரு போதும் தமிழ் நாட்டு விடுதலைக்கு வழி சமைக்காது. அதேநேரம் தமிழ் நாட்டு விடுதலையின் நியாயங்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. அதற்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை. இந்திய அடக்கு முறை, காவேரிச் சிக்கல், பொருளாதார சமநின்மை இப்படி பல்வேறு சமுக பொருளாதார காரணிகள் உள்ளன. பிரிவினைக் கோரிக்கையை கைவிட்ட அறிஞர் அண்ணா அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 80 களில் தமிழீழத்தை ஆதரிக்க முற்பட்ட இந்தியா தற்போது அதை எதிர்ப்பது பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஒரு வித குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையும் சுருக்கமாக விளக்க விரும்புகிறோம்

1980 களில் இந்தியவின் அயலுறவுக் கொள்கை வேறு. பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. அப்போது சோவியத் யூனியன் உலக வல்லரசாக விளங்கியது. இந்தியா தன்னை அணிசேரா நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்திராகாந்தி தன்னை அணிசேரா நாடுகளின் தலைவி என்று கூறிக் கொண்டிருந்தாலும் இந்தியா சோவியத் யூனியனின் தயவோடுதான் இயங்கியது. ஜெயவர்தனே அரசு அமரிக்கச் சார்பாக இருந்ததால் துணிந்து சிங்கள அரசிற்கு எதிரான முடிவை இந்தியா எதிர்த்தது.

தற்போது நிலைமை வேறு.

இந்தியா தற்போது எப்படி மாறிவிட்டது தெரியுமா? முழுக்க முழுக்க ஒரு அமரிக்க அடிவருடியாக.

அதாவது அமதிரிக்காவிலுள்ள மாநிலங்களான அரிசோனா, கலிபோர்னியா, மிஸிஸிப்பி போன்று இந்தியாவும் ஒரு மாநிலம்தான். அமரிக்கா எந்தப் பக்கம் கையைக் காட்டுகிறதோ அந்தப் பக்கம் கையைக் கட்டிக்கொண்டு திரும்பிப் பார்க்கும் ஒரு நாடுதான் இந்தியா.

இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டு. பாரதி பாடியது போல் “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” என்ற அடிப்படையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் மதிப்புக் கொடுத்து அதில் ஒரு தேசிய இனமான தமிழினத்தின் உரிமைகளை மதித்து. கடல் கடந்த ஈழத்தை ஆதரித்து உண்மையான ஜனநாயகத்தை அது பேணியிருந்தால் நாம் இந்தியாவை நேசித்திருப்போம். பாரதியோ, வ.உ.சியோ நேதாஜியோ, பகத்சிங்கோ கனவு கண்ட இந்தியா அல்ல தற்போது இருப்பது. மாறாக திலகர், அரவிந்தர், மதன் மோகன் மாளவிகா, சாவர்க்கர் போன்ற இந்து வெறியர்களின் கனவுத் தேசமாகத்தான் இன்று உருவாகியுள்ளது.

அதனால்தான் இவர்கள் மொழிவழித் தேசியத்தை எதிர்க்கிறார்கள். தமிழீழத்தை எதிர்ப்பதற்கும் இதுதான் காரணம்.

தேசிய இனங்களின் ஒட்டு மொத்த எழுச்சியும் அவர்களுக்குள் ஏற்படும் கூட்டுறவும்தான் ஏகாதிபத்தியத்தை விழுத்தும் வல்லமை படைத்தவை.

No comments:

Post a Comment