Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 3

ஆதியும் அந்தமும் இல்லா இந்து மதம்


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இந்து மதப் பற்று என்னுள் ஒட்டிக் கொண்டு வந்ததாகவே உணர்ந்திருக்கிறேன். புராணங்களும் இதிகாசங்களும் எனக்கு மனப்படமாகி விட்டன. கவியரசர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தை சிறுவயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். வாரியார் சுவாமிகள் எழுதிய கட்டுரைகளையும் சொற்பொழிவுத் தொகுப்புக்களையும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

பழம் பெரும் சமயம் எல்லா மதங்களுக்கும் முதற்தோன்றிய மதம் என்றும் அது எங்களின் மதமாக இருக்கிறது என்பதை நினைத்து பெருமைப் படத் தொடங்கினேன். இன்றோ அந்தக் கோபுரமும் சாய்ந்து நொருங்கிவிட்டது. எவ்வாறு இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட நிர்வாகக் கட்டமைப்போ அதுபோல்தான் இந்து மதமும் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட மதக் கட்டமைப்பு.

இந்து மதத்தின் தோற்றுவாய் எது?

கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியா நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப்பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. நான்கு வேதங்களான ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதால் அதற்கு வேதமதம் என்ற பெயர் வழங்கப் படலாயிற்று. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம்தான் அதன் அடிப்படைத் தத்துவம். அதுவே பிற்காலத்தில் இந்துமதம் எனப் பெயர் பெற்றது.

இந்து மதம் என்றோரு மதம் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. முதன் முதலாக அரேபியர்கள் 13 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கிலிருந்து வந்த ஆரியர்களின் வேதமதத்தைக் குறிப்பதற்காக இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதற்கு முன் வேதங்களிலோ, உபநிடதங்களிலா, புராண இதிகாசங்களிலோ இந்து என்ற சொல் பயன் படுத்தப் படவில்லை.

வராலாற்றை ஆராயும் பொழுது சிந்து நதிக்ககரையை ஒட்டி இருந்த இடங்கள் ஹிந்துஷ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாக கிரேக்க கல்வெட்டுக்கள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அனால் அது ஒரு மதத்தையோ அல்லது பண்பாட்டையே குறிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை. புவியியல் தன்மையுள்ள இந்தச் சொல் இந்தியர்களின் சமையச் சொல்லாக ஆங்கிலேயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காகவும் பிரித்தாளும் தந்திரத்திற்காகவும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கொம்பனியின் நிர்வாகம் ஏற்பட்டவுடன், அவர்களது ஆளுமைக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதியல் வாழ்ந்த மக்களை முஸ்லீம்கள் என்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் என்றும் பிரித்தனர். முஸ்லீம் அல்லாதவர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் அவர்கள் எல்லோருக்கும் பொதுவான சட்ட நெறிகளை உருவாக்கி அதற்கு இந்துச் சட்டம் (Hindu Code). எனப் பெயரிட்டனர். அவர்கள் அவ்வாறு சட்டத்தை உருவாக்க முனைந்தபோது பார்ப்பனர்கள் அவர்களுக்கு மனு தர்ம சாஸ்திரத்தைக் கொடுத்து அதன் அடிப்படையில் சட்டத்தை உருவாக்க வைத்தனர். அது வரைக்கும் அப்படி ஒரு சட்டம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. பார்ப்பனரும் பிரிட்டிஷாரும் சேர்ந்து பல்வேறு வகையான மதக் கருத்துக்களை, சமய மரபுகளை, வழிபாடுகளை ஒன்றிணைத்து அந்தக் கலவைக்கு இந்து மதம் எனப் பெயரிட்டனர்.

மனுதர்மத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதால் இந்து மதம் என்பது முழுக்க முழுக்க பார்பனர்களின் வேத மதத்தின் நீட்சியாக அமைந்து விட்டது.

சைவமும் மாலியம் என்று அழைக்கப்பட்ட வைணவமும் தமிழ் மண்ணில் தோன்றிய சமயங்களாக தோற்றம் பெற்றாலும் பௌத்தம் மற்றும் சமணத்தைப்போல் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டு எழவில்லை. மாறாக அதை நன்றாக உள்வாங்கிக் கொண்டதோடல்லாமல் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் கடுமையாகச் சாடி நின்றன. சைவமும் வைணவமும் பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டதால் அந்தச் சமயங்களை இந்து மதம் தன்னுள் சேர்த்துக் கொண்டது. பௌத்தமும் சமணமும் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்றதால் இஸ்லாம் அல்லாதவை என்ற அடிப்படைக்குள் அவை இந்து மதத்தோடு சேரவில்லை.

வெள்ளைக்காரகளால் உருவாக்கப் பட்ட மதம்தான் இந்து மதம் என்பதை இந்துக்களால் போற்றி வணங்கப் பட்ட காலஞ் சென்ற காஞ்சி சங்கராச்சாரி சந்திரசோரேந்திர சரஸ்வதி தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில்

"வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது"

என்று வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறார்

எனவே எல்லா மதங்களைக் காட்டிலும் மிகவும் பிற்காலத்தில் தோன்றிய மதம்தான் இந்துமதம். அதற்கும் ஆதி, அந்தம் போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

No comments:

Post a Comment