தனிமைத் துயரில் வாடிய போது
தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன்
தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள்
தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன
அரசியல், வரலாறு, இலக்கியம்,அறிவியல்
அனைத்தையும் பகிர்ந்தேன்
ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை
அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று
பருகப் பருக பாலும் புளிக்குமாம்
பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு
படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம்
பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு
சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு -
என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம்
சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு
சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன்
காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில்
காலங்கள் செல்கையில் காயங்கள் மாறும்தான்
காலையும் மாலையும் காணும் வாய்ப்பினால்
காயத்தின் ஆழங்கள் கண்களை நனைக்கின்றன
பிழைகள் செய்ததாய் எனக்குத் தெரியவில்லை
பிணைப்பு ஒரு நாள் வருமோ தெரியாது
பிரிவினைவாதம் தனிமையிலும் கொடியது எனஉணர்ந்தேன்
பிரியும்போதாவது நண்பர்களாய் பிரிவோம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment