Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 7

மதம் மாறுவது பாவம்

நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன் ஆனால் இறக்கும்போது நிச்சயம் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன் - அண்ணல் அம்பேத்கர்


பேரறிஞர் அண்ணா எழுதிய சந்திரமோகன் நாடகத்தில் ஒரு காட்சி :

ஒரு தாழ்த்தப்பட்ட இந்து வீதியோரமாக நடந்து போய்க்கொண்டிருக்கிறான். எதிரிலே பிராமணர் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். அவன் வருவதைக் கண்ட பிராமணர் ஐயோ! அம்மாவாசை வருகிறான் தீட்டாகிவிடும் எனக் கூறி வீதியின் அடுத்த பக்கத்திற்கு மாறி திரும்பிப் பார்க்காமல் நடந்து போகிறார். பிராமணரின் இந்தச் செயலைக் கண்ட அந்த தாழ்த்தப்பட்ட இந்து கூனிக்குறுகி தலை கவிழ்ந்து செல்கிறான். அடுத்த சில நாள்களுக்குள் அந்த தாழ்த்தப்பட்ட இந்து ஒரு முஸ்லீமாக மதம் மாறி தொப்பி தாடியுடன் அதே வீதியோரமாக நடந்து வருகிறான் எதிரில் அதே பிராமணர் வருகிறார். என்ன பாய் சௌக்கியமா? என வினவுகிறார் பிராமணர். உடனே அவன் "என்ன ஐயர்வாள் நம்மள உமக்கு அடையாளம் தெரியலையா நான்தான் உங்கள் அம்மாவாசை" எனப் பதிலளித்து விட்டு, அவன் திரும்பிப் பார்க்காமல் கம்பீரமாக நடந்து செல்கிறான்.

மதம் மாறுவதில் உள்ள நியாயத்தை மேற் கண்ட அண்ணாவின் நாடகக் காட்சி கட்டியம் காட்டி நிற்கிறது. இதை எழுதுவதால் இஸ்லாத்தை ஆதரிக்கிறேன் என்று பொருள் அல்ல. இந்துத்துவம் பிழை என்றால் இஸ்லாமிய அடிப்படைவாதமோ கிறிஸ்தவ அடிப்படைவாதமோ சரியானது என்று பொருளல்ல. மதங்கள் அனைத்துமே பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழமைக் கழிவுகளே. ஆனால் கிறிஸ்தவமோ இஸ்லாமோ கடவுளின் தலையிலிருந்து பிறந்தவன் உயர்ந்தவன் என்றும் காலில் இருந்து பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் கற்பித்து சக மனிதனை இழிவு படுத்தவில்லை.

இந்து மதத்தின் புண்ணிய நூல்கள் அனைத்தும் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த சூத்திரனின் உயிரானது பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்த பிராமணனின்; மயிருக்குச் சமம் என்றே வருணிக்கின்றன. இந்துக்களால் போற்றி வணங்கப் படும் பகவத்கீதையானது சூத்திரன் என்பவன் இறைவனின் பாவயோனியிலிருந்து பிறந்தவன் என்றும் அவனும் விலங்குகளும் ஒன்று என்றும் உரைத்து பச்சை வருணாசிரம தர்மத்தைக் கக்குகிறது. (பகவத் கீதை, அத்தியாயம் 9 சுலோகம் 32,33). இராமயணத்தில் சம்புகன் என்ற சூத்திரனின் தலை இராமனால் வெட்டப் படுகிறது. அதற்கு இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள நியாயம் சம்புகன் பிராமணர்கள் செய்ய வேண்டிய தவத்தை தானே செய்ததான் என்பதுதான்.

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள முன் மதம் மாறுவது மாபெரும் பாவங்களில் ஒன்றென்று எண்ணியிருந்தேன். சைவ சமயப் பாடப் புத்தகத்தில், சமணத்திற்கு மாறியதால் திருநாவுக்கரச நாயனாருக்கு சூலை நோய் ஏற்பட்ட கதையைப் படித்ததால் அப்படி ஒரு எண்ணம் சிறு வயதில் எனக்குள் ஏற்பட்டிருக்காலம். இன்று மதம் மாறுவது சில மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். இந்துமதம் கற்பித்த சாதியாலும் தீண்டாமையாலும் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், உயர்த்தப்பட்ட சமூகத்தினரின் மேலாதிக்கக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்கு மதம் மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. மதத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் அவற்றை நீக்கி விட முயற்சிக்கலாம், ஆனால் பிறவி ஏற்றத் தாழ்வுகளையே கோட்பாடாகக் கொண்டு ஒரு மதம் இயங்குகிறது என்றால் அதிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

சாதியம் எவ்வளவு கொடுமையானது என்பதை அம்பேத்கரின் வாழ்க்கை வராலாற்றைப் படிக்கும் போதுதான் உணர்ந்து கொண்டேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்த ஒரே ஒரு காரணத்தால் மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர் "நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன் ஆனால் இறக்கும்போது நிச்சயம் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்" என மனம் நொந்து கூறினார். அதன்படி தான் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் 54 ஆயிரம் தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் இந்து மதத்தை விட்டு விலகி பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார்.

இந்து மதத்தின் சாதியக் கொடுமை தாங்காமல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 இலட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து விலகி பௌத்தத்திற்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் நடை பெறும் இதுபோன்ற நியாயமான மதமாற்றங்களை அப்படியே ஈழத்தோடு தொடர்பு படுத்தி பார்த்து விட முடியாது. அதே நேரம் இது போன்ற மதமாற்றங்கள் பண்டைய காலங்களில் ஈழத்தில் நடைபெறவில்லை என்று கூறிவிட முடியாது. ஈழத்தில் ஆதிக்க சாதியினராக இருப்பவர்கள் பெரும்பாலும் சைவ சமயத்தினராகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்தினராகவும் இருப்பதில் இருந்து இந்த உண்மையை ஓரளவிற்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் அதனால் பெரு வீச்சுடன் எழுந்த தமிழ்த் தேசிய உணர்வும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை களைந்து அனைத்து தமிழர்களையும் ஒன்று படுத்தி வைத்திருக்கிறது. இன்று ஈழத்தமிழர்களிடம் சாதிய உணர்வு இல்லை என்பது மிகைப்படுத்தப் பட்ட ஒன்றாக இருந்தாலும் போராளிகள் மத்தியில் அது அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மலரப் போகும் தமிழீழத்தில் சாதிக்கு இடமிருக்காது என்பது உறுதி. எனவே இது போன்ற மதமாற்றங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை தேவையில்லை.

அதே வேளை ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பம் காரணமாக தான் சார்ந்திருந்த மதத்தை விட்டு இன்னாரு மதத்தைத் தழுவுவது எந்த வகையிலும் பிழையில்லை. அது அவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அந்த வகையில் சைவ சமயத்தைச் சார்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மாறலாம் பின் கிறிஸ்தவம் பிடிக்கவில்லை என்றால் மறுபடியும் சைவத்திற்கு திரும்பலாம் அல்லது வேறு எதையாவது தழுவிக் கொள்ளலாம் அதில் எந்தத் தவறும் இல்லை. அல்லது மதமே தேவையில்லை என அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எங்களைப் போன்று நாத்திகர்களாகவும் வாழலாம், அதுவும் தவறில்லை. அப்படியானால் எது தவறு?

தனிப்பட்ட நம்பிக்கை என்ற அளவைத் தாண்டி அரசியலிலும் சமூகத்திலும் தங்களின் மதங்களைப் பரப்புவது, அடுத்தவர் மீது தங்களின் மத நம்பிக்கைளை திணிக்க முயற்சிப்பது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றத்தையும் அறிவியல் உண்மைகளையும் வரவேற்காமல் அடிப்படைவாத வெறியுடன் திரிவது போன்ற முடை நாற்றம் வீசும் மூடக் கொள்கைகள்தான் தவறு.

எல்லாவற்றுக்கும் மேலாக மதத்தின் பேரால் மனிதத்தைப் படு குழியில் தள்ளுவதுதான் மாபெரும் தவறு. ஏனெனில் அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்கு மட்டும்தான் உரியன ஆனால் அன்பும் அறமும் அனைவருக்கும் உரியன

No comments:

Post a Comment