Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 18

சேலை கட்டும் பெண்ணிற்குத்தான் வாசம் உண்டா!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிரபல நடிகைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது நான் தமிழ்நாட்டில்தான் தங்கியிருந்தேன். அதுவும் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த் தேசியவாதிகளின் பாசறையில் தங்கியிருந்ததால் அது தொடர்பான மோதல்களை நேரடியாக அறியக் கூடியதாக இருந்தது. அதே தமிழ் தேசியப் பாசறையில் இருந்து அந்த நடிகைக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுப்பப் பட்டன. ஆனால் பெற்றோலில் எரியும் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தால் அதன் வெப்பம் எவ்வாறு தண்ணீரை ஒரு நொடியில் ஆவியாக மாற்றி விடுமோ அந்த நிலைதான் அந்தக் கருத்துக்களுக்கும் ஏற்பட்டது. ஈழத்தமிழர் ஆதரவு, தமிழ் வழிக் கல்வி போன்ற தளங்களில் ஒருமித்து நின்ற அந்தத் தோழர்கள் இந்த இடத்தில் நேருக்கு நேர் முரண்பட்டதையும் அறிய நேர்ந்தது. தமிழ்த் தேசியத்திற்குள்ளேயே இருக்கும் வலதுசாரித் தனத்தையும் இடது சாரித்தனத்தையும் அப்போதுதான் நேரடியாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழீழ விடுதலை, தமிழ் வழிக் கல்வி போன்ற உயர்ந்த விடயங்களை ஆதரித்து போராடும் நீங்கள் இந்த அற்ப விடயத்திற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்ற கேள்வியை அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர் ஒருவரைக் கேட்டேன். எனது கேள்வி அவரை சற்று கோபப் படுத்திவிட்டது என்பதை உணர்ந்தேன். இருப்பினும் ஈழத்தமிழர்களின்பால் அன்பும் மதிப்பும் கொண்ட அவர் போன்றவர்களை எதிர்ப்பதற்கு மனமற்று இருந்ததால் மௌனமாக இருப்பது மேல் என தொடர்ந்து எதுவும் கூறமல் இருந்து விட்டேன் இருப்பினும் அவர்களின் குறிப்பிட்ட அந்தப் போராட்டத்தில் என் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. அதே கால கட்டத்தில்தான் தமிழ் நாட்டிற்குச் சொந்தமான ஒகேனக்கல் என்ற சுற்றுலா மையத்தை கன்னடர்கள் கைப்பற்றும் முயற்சி நடந்தது. இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் அதி முக்கியமான இந்த விடயத்தை விட்டு விட்டு முக்கியமில்லாத வேறு ஒன்றிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்களே என்ற வருத்தமும் எங்களைப் போன்றவர்களுக்கு எழுந்தது.

நீண்ட நெடுங்கதைகளில் கிளைக் கதைகளாக சில குறுங்கதைகள் வருவது போன்று அந்தப் போராட்டத்தில் இன்னுமொரு குறும் போராட்டம் ஓர் இடத்தில் நடை பெற்றது. நடிகைகளுக்கு சேலை வழங்கும் போராட்டம்தான் அது. அந்தப் போராட்டத்திற்கான விளக்கமும் அப்போது அளிக்கப் பட்டது. நடிகைகள் தமிழ் படங்களில் தமிழ் பண்பாடான சேலையை கட்டுவதில்லையாம் அதை உணர வைப்பதற்குத்தான் இந்தப் போராட்டமாம். உடுத்திய ஒரே ஆடையும் கிழிந்த நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு அவைகளை கொடுத்திருந்தால் மனம் மகிழ்ந்திருக்கும். அது மட்டுமல்ல, ஆடை விலக்கல் காட்சிகளுக்கும் பாலியல் பலாத்காரக் காட்சிகளுக்கும் மிக மிக ஏதுவான ஆடை சேலைதான் என இயக்குனர்களான ஆண் திலகங்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் நிலையில் வெறும் நடிகைகளை மட்டும் குறைகூற முடியுமா?

இது போன்ற நிகழ்வுகள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் நான் சந்திக்கும் நண்பர்கள் பலரிடம் சேலை தொடர்பன பண்பாட்டு மயக்கம் இருந்து வருவதைப் பார்க்கிறேன். சேலை கட்டுவது கூடாது என்பது எனது வாதமல்ல. அது அதனைக் கட்டும் பெண்களின் விருப்பம் சார்ந்தது. மற்றிவர்கள் அதில் தலையிடத் தேவையில்லை. அழகுணர்ச்சி காரணமாக சேலையை பரிந்துரைப்பதையும் தவறென்று கூறமுடியாது. இதுதான் தமிழர் பண்பாடு என்று உரைக்கும்போதுதான் இடிக்கிறது. அதிலும் தங்களை வேட்டியிலிருந்து மேற்கத்திய உடைக்குள் மாற்றிக்கொண்ட ஆண்கள் இவ்வாறு பண்பாட்டுக் கூச்சல் போடும்போதுதான் இன்னும் இடிக்கிறது.

இதுதான் தமிழர் உடை என்று நாம் எதையும் வரையறுத்து கூற முடியாது. 'உண்பதும் நாழி உடுப்பதும் இரண்டே (புறநானூறு 189)' என்ற பாடலில் பழந்தமிழரின் உடை எவ்வகையானது எனத் தெரிகிறது. இருபாலருக்கும் பொதுவாகவே அது பொருந்துகிறது. இதன்படி பெண்கள் இடுப்பிலும் தோளிலும் இரு வேறு துண்டுகளை அணிந்து வந்திருக்கிறர்கள் என்றே கருத முடிகிறது. சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் மார்புக் கச்சை அணிந்ததற்கான சான்றுகளும் இல்லை. தற்போது பெண்கள் அணியும் சேலை போன்ற ஒன்றை அணிந்ததாகவும் எந்தச் சான்றுகளும் இல்லை.

அதற்கு பிற்பட்ட காலத்தில் புடவை என்ற நீளமான ஆடை பழக்கத்தில் வருகிறது. பாஞ்சாலி கதையில் வரும் துகில் எனப்படும் நீண்ட ஒற்றை ஆடையையே இது குறிக்கிறது. ஆனால் அதை ஆண்களும் அணிந்திருக்கிறார்கள் என்பதையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு நாயனார் சமண மடத்தை விட்டு வெளியேறும்போது

‘மெய் தருவான் நெறி அடைவார் வெண்புடைவை மெய்சூழ (1326-2)’

என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். இவைகளை தற்போது ஆண்கள் அணிவது கிடையாது. தற்போது பெண்கள் சேலை அணியும்போது உடுத்தும் இரவிக்கை எனப்படும் மேலாடையானது மிகப் பிற்பட்ட காலத்தில்தான் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக 15 ஆம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு உருவாகியது. விஜய நகரப் பேரரசு தெலுங்கர்களின் அரசு. அதன் தாக்கத்தால் தமிழர்களின் உடையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இரவிக்கை எனப்படும் சொல்லும் தெலுங்குச் சொல்லே ஆகும். அதற்குப் பின்னர்தான் இரவிக்கை அணியும் பழக்கம் ஏற்பட்டது. விஜயநகரத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்று பலர் வினவலாம். ஓர் உண்மையை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. ஈழத் தமிழர்கள் மீது நடத்தப் பட்ட இராணுவப் படையெடுப்பு தமிழ் நாட்டுத் தமிழர்களை நேரடியாகத் தக்கியதில்லை. ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மீது நடத்தப் பட்ட பண்பாட்டுப் படையெடுப்புக்களும் பிற மொழித் தாக்கங்களும் ஈழத் தமிழர்களையும் பாதித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் அன்றைய தமிழ் பெண்கள் இரவிக்கை அணிந்ததாக வரலாறு இல்லை. ஈழத்தில் சென்ற நூற்றாண்டின் தொடக்கம்வரை பெண்கள் இரவிக்கை அணியவில்லை. தமிழ் நாட்டின் சில கிராமங்களில் இன்னும் இந்தப் பழக்கம் இருக்கிறது. அதனைப்போன்று உள்ளாடையாக அணியும் பாவடையும் சென்ற நூற்றாண்டின்போதுதான் பழக்கத்திற்கு வந்திருக்கிறது. தெலுங்கர்களின் இறக்குமதியான இரவிக்கையை அணியமால் இருப்பதுதான் தமிழர் பண்பாடு என்ற முட்டாள்தனமான வாதத்தை நாம் இங்கு வைக்கவில்லை, அல்லது உடுப்பது இரண்டே என்ற புறநானூற்று வரிகளை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படைவாதக் கருத்துக்களையும் சொல்லவில்லை. நாம் இங்கு விளக்க முயற்சிப்பது, உடை என்பது காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தை சந்தித்திருக்கிறது என்பதைத்தான். பட்டுச் சேலை என நாம் மங்களகரமாக முழங்குகிறோம் ஆனால் அந்தப் பட்டு கூட சீனர்களின் இறக்குமதிதான்.

அதனைப்போன்று ஆண்கள் வேட்டி உடுத்தும் போது அணியும் தைத்த மேலாடையும் ஐரோப்பியர்கள் மற்றும் அரேபியர்களின் வணிகத் தொடர்புகளால் ஏற்பட்டவையே. இன்று நாம் எதனைத் தமிழர் உடை என்று வரிசைப் படுத்துகிறோமோ அதில் பல அந்நிய கலப்புக்கள் உள்ளதை மறுக்க முடியாது.

காலநிலை வசதிக்கேற்றவாறு மனிதர்கள் உடை உடுத்திக் கொள்வது வழக்கம். தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ஈழமும் தமிழகமும் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள வெப்பமண்டலப் பகுதிகள். அதற்கு ஏற்றவாறு அவர்களின் உடை இருந்தது. வியர்வையை உறிஞ்சக் கூடய பருத்தி ஆடைகளை அவர்கள் அணிந்தார்கள் ‘பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன (125)’ என பெண்கள் பருத்தி நூல் நூற்ற செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. அதைப்போன்று பனிபடர்ந்த வெளி நாடுகளில் அதற்கு ஏற்றவாறு உடுத்துகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் நம் தமிழ்ப் பெண்களும் அதற்கு ஏற்றவாறு ‘ஜீன்ஸ்’ போன்ற உடைகளை உடுத்துகிறார்கள். கோடைகாலங்களில் உடைகளை குறைத்துக் கொள்வதும் காலநிலை வசதிக்கேற்பவே. அதனைக் கண்டு பண்பாடு போகிறது எனப் பதறுவது பத்தாம் பசலித் தனமாக பிற்போக்குத்தனங்களே.

தற்போது சேலைகளிலும் பல கவர்ச்சிகரமான சேலைகள் வந்துவிட்டன. நவ நாகரீகம் கருதி இளம் பெண்கள் அதனை விரும்பி அணிகிறார்கள். அதுவும் அவர்களின் விருப்பம் சார்ந்தது. அதனையும் சிலர் பண்பாட்டு தளத்தில் நின்று குறை காண்கிறார்கள். அதே நேரம் சேலை அணியும் பெண்கள் பிற்போக்கானவர்கள் ஜீன்ஸ் அணியும் பெண்கள் முற்போக்கானவர்கள் என்ற அபத்தமான வாதத்தையும் நாம் இங்கு வைக்கவில்லை. முற்போக்கு, பிற்போக்கு போன்றவையும் பெண்விடுதலை என்பதும் சேலையில் தங்கியிருக்கவில்லை. நாம் இங்கு கூறிக் கொள்ள முனைவது நாகரீகமாற்றத்திற்கும் காலநிலை வசதிக்கும் ஏற்றவாறு உடைகளை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதைத்தான். மேலும் வலியுறுத்திக் கூறிக்கொள்வது என்னவெனில் தமிழரின் மொழிப்பற்று, தேசியப் பற்று, விடுதலைப் பற்று போன்றவைகள் சேலையிலும் வேட்டியிலும் பொட்டிலும் பூவிலும் தங்கியிருக்கவில்லை என்பதைத்தான்.

தமிழ் பற்றாளரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான சுபவீ அவர்கள் இதுநாள் வரையிலும் தான் திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போதுகூட வேட்டி அணிந்ததில்லை என்றும் அதனால் பலர் குறைபட்டுக் கொண்டனர் என்றும் கூறியிருந்தார். தமிழீழத்தில் அரசியல் துறையில் இருக்கும் பெண்கள்கூட அவர்களின் வேலை வசதிக்கு ஏற்றவாறு மேற்கத்திய உடைகளைத்தான் அணிந்து கொள்கிறார்கள்.

இந்த உலகில் உடை, நடை, நாடு, நகரம், கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம் என அனைத்துமே மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டுதான் முன்னேறியிருக்கின்றன. மாற்றம் என்பது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளுக்கும் தேவையான ஒன்று. மத அடிப்படைவாதிகள் கடைப்பிடிக்கும் வெறித்தனமாக கொள்கைகளை நாம் தமிழின் பெயரால் கடைப்பிடிக்கக் கூடாது. தனக்குள்ளேயே பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டதுதான் நம்முடைய தமிழ் மொழி. இலக்கணங்களும் தமிழ் எழுத்துருக்களுமே மாற்றியமைக்கப் பட்டுள்ளன.

பேராசான் கார்ல் மார்க்சின் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஆம், மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது.

No comments:

Post a Comment