தமிழர் திருமணத்தில் தாலி!
பி.வாசு இயக்கிய சின்னத்தம்பி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். உலக விபரம் தெரியாத கதாநாயகனை மடக்கிப் பிடித்து தனது கழுத்தில் முன்று முடிச்சு போட வைத்து விடுவாள் கதாநாயகி. அதைக் கலியாணம் என்று அறியாமல் விட்டிற்கு வந்து தாயாரிடம் விளக்கம் கேட்பான் கதாநாயகன். பந்தல் வைக்காமல் மேளம் கொட்டாமல்கூட கலியாணம் நடக்கும் ஆனால் தாலி கட்டாமல் அது நடக்காது என்பார் தாயார்.
இதைவிட உச்சக் கட்டம் ஒன்று கே. பாக்கியராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் திரைப் படத்தில் வரும். படத்தின் கதாநாயகியை அவளது காதலனிடமிருந்து பிரித்து வேறு ஒருவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள். அவனோடு வாழப் பிடிக்காத கதாநாயகி நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்று தப்பி விடுவாள். தன் காதலனைத் துறந்து கணவனோடு வாழப் பிடிக்காத நாயகி கணவன் தாலியை அறுக்க முற்படும்போது மட்டும் கதறித் துடித்து, அழுது ஆராற்றி, விம்மி வெதும்பி இறுதியாக கணவனுக்காக அல்ல அந்த கயிறு ஒன்றுக்காகவே கணவனோடு வாழத்தொடங்குவாள்.
காதலைக் காட்டிலும் இந்தத் திரைப் படங்கள் தாலிக்குக் கொடுக்கும் மகத்துவம் கொஞ்ச நஞ்ச மல்ல. திரைப் படங்களில் குறைந்த அளவு குழந்தைகள் ஆடைகளோடு கதாநாயகிகளை நடிக்க வைக்கும் இயக்குனர்கள் தாலி விடயத்தில் மட்டும் மகா புண்ணியவான்களாக மாறி விடுகிறார்கள்.
நான் அறிந்தவரை ஒளிப்பதிவாளர் ஏ.வின்சன்ட் இயக்கிய ‘துலாபாரம்’ என்ற திரைப் படத்தில்தான் தாலியில்லாமல் தமிழ் மறையான திருக்குறளை ஓதி மாலை மாற்றி நடைபெறும் திருமணம் காட்டப் படுகிறது. தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ போன்ற திரைப் படங்களில் கூட புரோகிதம் தவிர்க்கப் பட்டாலும் தாலிகட்டுவது தவிர்க்கப் படவில்லை.
திரைப் படங்களில் மட்டுமல்ல தமிழர்களின் அன்றாட வாழ்க்கையிலும் தாலி பிரிக்கப் படமுடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. தாலியோடு கூடவே பக்க வாத்தியங்கள் போன்று ஏராளமான மூடநம்பிக்கைகள் அதோடு இணைக்கப் பட்டுவிட்டன. தாலியில் போடப் படும் மூன்று முடிச்சுக்களானது முதல் முடிச்சு கணவனுக்கு அடங்கியவள் என்றும் இரண்டாம் முடிச்சு கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் என்றும் மூன்றாம் முடிச்சு கடவுளுக்கு அடங்கியவள் என்றும் விளக்கமளிக்கப் படுகிறது. நம்மவர் திருமணங்களிலோ முடிச்சு நட்டாக மாறிவிட்டதால் முதல் திருகல் கணவனுக்கு அடங்கியவள் என்றும் இரண்டாம் திருகல் கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் என்றும் மூன்றாம் திருகல் கடவுளுக்கு அடங்கியவள் என்றும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
எல்லாம் சரி தாலி ஓர் அடையாளச் சின்னம் என்றால் ஆண்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது?! தாலி கட்டாமல் இறுதிவரைக்கும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழும் தம்பதிகள் இருக்கின்றனர். ஒழுக்கமும் கட்டுப்பாடும் உண்மையான அன்பிலும் நேர்மையிலும்தான் தங்கியிருக்கிறதே தவிர தாலியில் அல்ல.
இல்வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் அறங்கள் எவ்வளவோ இருக்க வெறும் மஞ்சளும் தங்கமும்தான் ஆணையும் பெண்ணையும் பிணைத்து வைத்திருக்கிறது என்பது பகுத்தறிவற்ற விதிகளேயன்றி வேறல்ல.
தவிரவும் தற்போதெல்லாம் விழாக்களுக்கு செல்வதற்குத்தான் பெண்கள் அடைபட்டுக்கிடக்கும் தாலிக்கு விடுதலை அளிக்கிறார்கள். தாலிதான் பெண்களுக்கு வேலி என்பார்கள் ஆனால் அதை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் பெண்கள் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. யாராவாது கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுவார்களா என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். இங்கு தாலி பெண்களுக்கு வேலி என்பது போய் பெண்கள்தான் தாலிக்கு வேலியாக மாறுகிறார்கள்.
இந்தளவு தூரம் தமிழர் வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட தாலிக்கும் தமிழர் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சங்க இலக்கியங்களை ஆராயும் பொழுது தாலி என்ற சொல் பெண்ணுக்கு அணிவிக்கும் ஒன்றாக எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை.
சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் தமிழர் திருமணத்திற்குச் சான்றாக இரண்டு படல்கள் உள்ளன.
‘உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை’ என்று தொடங்கும் 86 ஆவது பாடலும் ‘மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு’ எனத் தொடங்கும் 136 ஆவது பாடலும் எது தமிழர் திருமணம் என்பதை நமக்கு தெரியப் படுத்துகின்றன.
இவ்விரு பாடல்களையும் ஆராயுங்கால், தற்போது தமிழர் வீட்டுத் திருமணங்களில் நடைபெறும் மூடச்சடங்குகள் எதுவும் இல்லை. பெண்களை இழிவு படுத்தும் மந்திரங்களோ, கன்னிகாதானம் என்ற பெயரில் பெண்களை தாரைவார்க்கும் காட்சிகளோ இல்லை. குறிப்பாகத் தாலி என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. மாறாக அன்பும் அறமும் உற்றார் பெற்றாரின் நல்வாழ்த்தும் இயற்கை அழகும்தான் அங்கு அங்கம் வகிக்கின்றன.
தாலி என்ற சொல் பழந் தமிழர் இலக்கியங்களில் வருகிறது ஆனால் அவை திருமணத்தோடு தொடர்பு படுத்தி வரவில்லை. தவிரவும் அது பெண்கள் அணியும் ஒன்றாக எந்த இடத்திலம் குறிப்பிடப் படவில்லை.
‘முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி, (அகநானூறு 54)’
‘அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே (புறநானூறு 77)’
போன்ற பாடல்களில், தாலி என்ற சொல் ஆண்குழந்தைக்கு அணிவிக்கும் ஒன்றாகவே கூறப்பட்டிருக்கிறது. இதனை ஐம்படைத்தாலி என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியங்களை மேலும் ஆராயும்பொழுது
‘புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு 54)’
‘புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு 374)’
போன்ற பாடல்களில் தாலியானது ஆண் அணியும் ஒன்றாகவே குறிப்பிடப் பட்டிருக்கிறது. தாலி இடம் பெற்ற சங்கப் பாடல்களை உற்று நோக்கும்போது தாலி என்ற சொல்லானது போர்க்களக் காட்சிகளை விளக்கும் போது பயன் படுத்தப் பட்டிருக்கின்றனவே தவிர திருமணக் காட்சிகளில் அல்ல. குறிப்பாக புறநானுற்றின் 77 ஆவது பாடல், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகைவரை வீழ்த்தி விட்டு நின்ற காட்சியை விளக்கும் போது பாடப் பட்ட பாடலாகும். சிறுவயதில் கட்டிய ஐம்படைத்தாலியை இன்னும் களையாமல் இருக்கிறானே என்பது போல் அமைகின்றது அந்தப் பாடலின் வரி.
12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரல் எழுதப்பட்ட பெரிய புராணத்திலும்
‘இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து’
என்ற பாடல் வரியில் தாலி என்பது ஆண் இடுப்பில் அணியும் ஒன்றாகவே கூறப்பட்டுள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றாகப் பாடும் ஆண்டாளின் பாடல்களில் கூட தாலியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
இன்னும் ஒரு வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால் தமிழர்கள் மத்தியில் பிராமணர்களால் நடத்தி வைக்கப் படும் புரோகித் திருமணம் வழக்கத்தில் வந்த பின்பும் தாலி முறை வரவில்லை. தமிழர் முறைக்கு மாறாக பார்ப்பனரின் நால் வருண முறைப்படி செய்யப் படும் புரோகித திருமண முறை முதன் முதலாக சிலப்பதிகாரக் காப்பியத்தில்தான் குறிப்பிடப் படுகிறது. ஆனால் அதில் கூட தாலி என்ற சொல் இடம் பெறவில்லை. தாலி கட்டும் பழக்கம் இளங்கோவடிகள் காலத்திலும் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.
சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும் ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியிலும் தமிழர் திருமண முறைக்கு மாறான வைதீகத் திருமண மரபுகள் சொல்லப் படுகின்றன ஆனால் தாலியைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை.
1954 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தனது தென்றல் இதழில் தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்ற கருத்துப் போரைத் தொடக்கினார். பல தமிழறிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், பெரும்புலவர் மதுரை முதலியார், ஆய்வறிஞர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பழந் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இல்லை என அடித்துக் கூறினர்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் மொகாலயர்களின் படை எடுப்பு நடைபெற்ற பொழுது அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பெண்கள் தாலி அணியத் தொடங்கினார்கள் என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவேளை திருமணமாகத பெண்கள் கூட தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்படி ஒரு கயிற்றை வெளியில் தெரியும் விதமா போட்டிருக்கலாம் என்ற ஐயமும் இங்கு எழுகிறது. எது எப்படி இருப்பினும் திருமணத்தின்போது பெண் கழுத்தில் தாலி கட்டுவது என்பது மிக பிற்பட்ட காலத்தில், புகுத்தப்பட்ட ஒர் அடையாளமே. அதற்கும் தமிழர் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment