Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 14

தமிழ்த் தேசியத்திலும் அடிப்படைவாதம்

தமிழ் தமிழ் என்று உச்சரிக்கும் நீங்கள் இப்படி உணவருந்தலாமா? நான் உணவருந்துவதைப் பார்த்த நண்பர் ஒருவர் என்னிடம் இப்படிக் கேட்டார். காரணம் என்னுடன் கூட இருந்தவர்கள் கையால் உணவருந்திக் கொண்டிருந்தபோது நான் கத்தியையும் முள்ளுக் கரண்டியையும் பாவித்து இயல்பாக உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்படிச் சாப்பிடுவதுதான் நாகரிகம் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. எனக்கு அது பிடித்திருப்பதால் பொதுவாகவே நான் அப்படிச் சாப்பிடுவதுதான் வழக்கம். இருப்பினும் அதனை தமிழுடன் தொடர்பு படுத்தி கேட்டவரின் கருத்தில் துளியும் உடன் பாடில்லை. இது போன்ற பல கேள்விகள் என்னிடம் கேட்கப் பட்டிருக்கின்றன.

தமிழனுக்கு மீசைதானே அழகு அதை ஏன் மழித்து விட்டுச் செல்கிறாய் என்பார் ஒருவர். புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் நாகரிக உடைகளையும் அதிலும் குறிப்பாக பொட்டு வைப்பதை அவர்கள் தவிர்ப்பதையும் கூந்தலை குட்டையாக வெட்டி அழகு படுத்துவதையும் தமிழர்களுக்கு ஏற்பட்ட பெரும் குறையாக வருணிப்பார் இன்னெருவர்.

நாகரிகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறும் தன்மையுடையது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் அந்த நாகரிக மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அன்றியும் அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? இன்று தங்களின் தாய் மொழியை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டிருக்கும் ஆங்கிலேயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் அணிந்த உடைகளையா தற்போதும் அணிகிறார்கள்?

பண்பாடு என்பது வேறு மரபுப் பழக்கவழக்கங்கள் என்பது வேறு. சேலை, தாலி, பொட்டு போன்றவைகள் உண்மையாகவே தமிழர்களின் மரபுகளா என்பதில் நம்மைப் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்து உண்டு. அப்படியே அவைகள் தமிழர்களின் மரபுகளாக இருப்பினும் சேலை அணிவதையும் தாலி கட்டுவதையும் பொட்டு வைத்து பூ முடிப்பதையும் நாம் பண்பாடாக வகைப் படுத்த முடியாது. அப்படியானால் தமிழ்ப் பண்பாடுகள் எவை? தமிழ் இலக்கியங்களே அவற்றை தெளிவுற விளக்குகின்றன. விருந்தோம்பல், இனியவை கூறல் இவைகள்தாம் பண்பாடுகள். இவை தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தேவையானவை. பண்பாடு என்பது பகுத்தறிவின் பாற்பட்டது. பகுத்தறிவுக்கு உடன்படாத எதுவும் பண்பாடு அல்ல.

கால மாற்றம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் தேவையானது. மொழி என்பது கடவுளோ மதமோ அல்ல. வெறும் சொற்களின் கூட்டமும் அல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வளர்த்தெடுக்கப் படவேண்டியது.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

என நன்னூல் எனும் இலக்கண நூலை எழுதிய பழந்தமிழ்ப் புலவரான பவாணந்தி முனிவரே மாற்றங்களுக்கு இடமளித்து கொடுக்கவில்லையா? தமிழ் மொழி இவ்வளவு காலம் நீடித்து நிலைத்து நிற்கிறதென்றால் அது பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டதாலயே! எடுத்துக் காட்டாக தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தந்தை பெரியாரால் கொண்டுவரப் பட்டதாலேயே கணினியில் அதனைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. தொல்காப்பியத்தில் சொல்லப் பட்ட இலக்கண வடிவங்களுக்குள் அடக்க முடியாமல் புதுப் புதுப்புது யாப்பு வடிவங்கள் பின்னாளில் தோன்;றியதாலயே அதனை விளக்க யாப்பெருங்கலம் போன்ற இலக்கண நூல்களை படைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தமிழ் இலக்கணங்கள் மட்டுமல்ல தமிழ் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் மாற்றங்களைச் சந்தித்தே வந்திருக்கின்றன. அந்த மாற்றங்களால் தமிழ் செழித்திருக்கின்றதே தவிர குன்றிப் போய்விடவில்லை. அதே நேரம் தமிழில் ஏற்பட்ட ஏல்லா மாற்றங்களும் அதற்கு நன்மையை ஏற்படுத்தி விடவில்லை.

குறிப்பாக மணிப்பிரவாள நடை என்ற பெயரில் தமழிழுடன் வட மொழியைப் பயன்படுத்தும் பழக்கம் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழக்கம் பெறலாயிற்று. மணியும் பவளமும் சேர்த்துக் கோர்த்தது போல் தமிழையும் வடமொழியையும் சேர்த்துக் கோர்த்து அந்த நடை தொடங்கியது. அதிலும் தமிழைப் பார்க்கிலும் வடமொழியின் சொற்களே அதிகமாகக் காணப்பட்டன. இதனால் அழகான தமிழ்ச் சொற்கள் புறந்தள்ளப் பட்டு வாயில் நுழைய முடியாத வடமொழிச் சொற்கள் கலந்தன. தமிழின் இனிமை இதனால் கெட்டதேயன்றி வளம் பெறவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டது.

1916 ஆம் ஆண்டு வடமொழியை முற்றாக தமிழிலிருந்து நீக்கும் பொருட்டு தமிழ்க் கடல் மறைமலையடிகள் அவர்கள் தனித்தமிழ் இயக்கம் என்ற ஓர் அமைப்பையே தோற்றுவித்தார். அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழ் இனிமையும் எளிமையும் கலந்து புத்துணர்வு பெற்றது. தமிழ் மொழியில் ஏற்படும் மாற்றங்கள் அதனிலிருந்து பெறுவதுதான் சிறந்தது.

எடுத்துக் காட்டாக சங்க காலத்தில் உண என்ற சொல் பின்னர் நாயன்மார் காலத்தில் ஊன் என்றாகி தற்போது உணவு என்று மாற்றம் பெற்றுள்ளது. இது போன்று பல்லாயிரக் கணக்கான சொற்கள் மிக அழகாக மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் மணிப்பிரவாள காலத்தில் தமிழுடன் கலந்த உணவைக் குறிக்கும் சொற்களான போஷனம், ஆகாரம் போன்ற வடமொழிச் சொற்கள் தமிழனுக்குத் தேவையில்லை. பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கி தன்னை பூர்த்திசெய்து கொள்ளும் தேவை தமிழுக்கு ஒரு போதும் இல்லை.


தற்போது ஏற்பட்டு வரும் தமிங்கிலமும் முற்றாகப் புறக்கணிக்கப் படவேண்டும். மொழிக் கலப்பு என்பது மொழிச் சிதைவிற்கும் பிற மொழியின் ஆதிக்கத்திற்கும்தான் வழிவகுக்குமே தவிர நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. தமிழ் பண்பாடு என்ற பெயரில் மரபு வழி மடமைகளைக் கட்டிக் காப்பதை விட இயன்ற வரை தனித் தமிழை வளத்தெடுத்து அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதே சிறந்தது.


இலக்கண இலக்கியங்களே மாற்றங்களைச் சந்தித்திருக்கும்போது மரபுகளில் மாற்றங்கள் வரக்கூடாதா?

No comments:

Post a Comment