கிறிக்கெற்
உலகக் கோப்பை கிறிக்கெற் போட்டிகள் தொடங்கி இறுதியாட்டம் நெருங்கி விட்டது. நம் தமிழ் உறவுகளும் வெகு உற்சாகத்துடன் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்கு முன் சரண் அடைந்து விட்டார்கள். நமது தமிழ் இரசிகப் பெருமக்களின் அபிமான அணியான இந்தியா இதில் படு தோல்வி அடைந்து தொடக்கத்தில் வெளியேறி விட்டது.
தொடர்ந்து முன்னேறி வரும் இலங்கை அணியின் ஆட்டத்தை ஈழத் தமிழர்களில் சிலர் வெகுவாக இரசிப்பதுடன் உலக கோப்பைக் கனவுகளிலும் மிதக்கத் தொடங்கி விட்டனர். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தாயகத்தில் நடக்கும் அரசியல் போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கவலையுடனும் ஈடுபாட்டுடனும் என்னுடன் விவாதிப்பார். இந்த உலகக் கோப்பை தொடங்கியதுடன் அவரது விவாதத்தின் கருப் பொருளாக கிறிக்கெற் வந்து விட்டது.
விளையாட்டையும் அதனால் ஏற்படும் நன்மையையம் புரிந்து கொள்பவர்கள் கிறிக்கெற்றை ஒரு விளையாட்டாகவே கருத மாட்டார்கள். கிறிக்கெற் உலக அளவில் செல்வாக்குப் பெற்ற ஒரு விளையாட்டு அல்ல. கிறிக்கெற் இங்கிலாந்தில்தான் தொடங்கப்பட்டது, ஆனால் இங்கிலாந்து நாட்டவர்களே அதில் ஈடுபாடு காட்டுவதில்லை. இத்தகைய விளையாட்டைத்தான் நம்மவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறார்கள். 8 மணி நேரம் என்பது ஒரு நாள் முழு வேலை நேரத்தின் கணக்கு. அதை கிறிக்கெற்றில் செலவழித்து விடுவதால் பார்ப்பவர்களுக்கு சோம்பேறித்தனம்தான் அதிகரிக்கிறது.
கிறிக்கெற் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளால் நமது தமிழ் சிறார்களும் இளைஞர்களும் நமது தமிழ் மண்ணின் மரபுசார் விளையாட்டுக்களான சிலம்பம், சடுகுடு, கிளித்தட்டு, இளவட்டக் கல், உரி மரம் ஏறுதல், ஆடு புலி ஆட்டம், வண்டி ஓட்டம் போன்றவற்றை எல்லாம் மறந்து கிறிக்கெற் மட்டையை தூக்கிக்கொண்டு அலைகின்றனர்.
இந்த அலைச்சலுக்கு நானும் விதிவிலக்காக இருந்ததில்லை. சிறுவயதிலிருந்தே ஒரு கிறிக்கெற் பற்றாளனாகவே வாழ்ந்திருக்கிறேன். 1992 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் நான் முதன் முதலாக பார்க்கத் தொடங்கிய கிறிக்கெற் போட்டிகள். அன்றிலிருந்து கிறிக்கெற்றின் இரசிகனாக, அதிலும் இந்திய அணியின் தீவிர ஆதரவாளனாக மாறினேன். 1999 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறிலங்கா அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் சௌரவ் கங்குலியின் விளாசலைத் தொடர்ந்து கங்குலியின் போஸ்டரை எனது அறைச் சுவரில் ஒட்டும் அளவுக்கு எனது கிரிக்கற் மோகம் எல்லை மீறிப் போனது. நாளடைவில் எனது கிரிக்கெற் கோபுரமும் சாய்ந்து விட்டது.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தின் எச்சங்களில் ஒன்றுதான் இந்தக் கிறிக்கெற். இன்றும் அதன் கொலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் மட்டும்தான் கிறிக்கெற் உள்ளது வேறு எந்த நாட்டிலும் இது இல்லை. ஆசியாவை எடுத்துக் கொண்டால் கொலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்தான் உள்ளதேயன்றி ரஷ்யா, சீனா, ஜப்பான், வியட்னாம் போன்ற பிற ஆசிய நாடுகளில் விளையாடப் படுவதில்லை. ஆபிரிக்காவை எடுத்துக் கொண்டால் தென்னாபிரிக்கா கென்யா போன்ற ஓரிரு நாடுகளில்தான் விளையாடப் படுகிறது.
நான் பிரான்சில் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். எல்ல விளையாட்டுகளும் உள்ள பிரான்சில் இதற்கு சிறு இடம் கூட இல்லை. இதை எனது விளையாட்டு ஆசிரியரிடம் (பிரஞ்சு நாட்டவர்) கேட்டபோது அவர் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது. "அதை விளையாடுபவர்களும் முட்டாள்கள் அதைப் பார்ப்பவர்களும் முட்டாள்கள்" என்றார். அவர் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டிருப்பதால் விளையாட்டுக்கள் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருபவர். கிறிக்கெற்றை இவ்வளவு மட்டமாக திறனாய்வு செய்தவர் இந்தியாவில் விளையாடப் படும் ‘கபடி’ எனும் ஆட்டத்தை மனம் திறந்து பாராட்டனார். இந்தக் கபடி வேறொன்றுமில்லை தமிழர்களின் மரபுசார் விளையாட்டுக்களில் ஒன்றான சடுகுடுதான். ஆனால் நம்மவர்களோ தமிழர்களின் விளையாட்டுக்களை அறியாமலே காலத்தை ஓட்டுகிறார்கள். இவர்கள் இவ்வவு தூரம் உயர்த்திக் பிடிக்கும் கிறிக்கெற் எப்படிப் பட்டது?
ஒருவர் பந்தை ஏறிவார் இன்னொருவர் அதை அடிப்பார் மற்றவர்கள் அதைப் பிடிக்க ஓடுவார்கள். இதன் தன்மையை அறிந்துதான் ஐரிஷ் நாட்டு நாடக மேதை ஜோர்ச் பேர்னாட்ஷா அவர்கள் "22 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 22 ஆயிரம் முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டு" ("Cricket is a game played by 22 fools and watched by 22,000 fools") என்றார்.
ஆங்கிலேயர்களின் பூர்விக நாடான இங்கிலாந்திலேயே செல்வாக்கு இழந்து விட்ட இந்த விளையாட்டிற்கு அதன் கொலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காட்டப் படும் முக்கியத்துவம் மலைக்க வைக்கிறது. புராணக் கதாபாத்திரங்களைக் கடவுளாக வணங்குவதுபோல் இவர்களையும் கடவுளாகவும் அவதார புருஷர்களாகவும் நினைக்கத் தொடங்கி விட்டனர். இவர்கள் காட்டும் பேராதரவால் கிறிக்கெற்றின் செல்வாக்கு ஏனைய விளையாட்டுக்களை பின் தள்ளி விட்டதுடன் அரசியல் கழிவுகளும் இதில் கலந்து விட்டன.
இன்று தங்களின் நாடு தமிழீழம் என்பதை மறந்து சிறிலங்கா அணிக்கு ஆதரவு காட்டும் ஈழத் தமிழர்கள் அந்த அணிக்குள்ளும் சிங்கள இனவாதம் இருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் அதன் அணியில் விளையாடுபவர்கள் யார்? அனைவரும் சாதி அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் உயர்ந்தப் பட்ட மேல் தட்டுப் பிரிவினரே!
கிறிக்கெற் வருமானத்தைக் காட்டிலும் மிக அதிகமாக விளம்பரப் படங்களில் நடித்து கோடிக் கணக்கில் பணத்தைக் குவிக்கின்றனர் கிறிக்கெற் அணியினர். ஆனால் அந்த கிறிக்கெற்றைப் பார்த்து விட்டு தென்னம் மட்டையை எடுத்துக்கொண்டு வயல் வெளிகளில் அலையும் ஏழைச் சிறுவர்களும் இளைஞர்களும் இன்று வரை அன்றாடங் காய்ச்சிகளாகவே இருக்கின்றனர்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியையும் வலிமையையும் தருவதுதான் விளையாட்டு. ஆனால் நம் தமிழ் உறவுகளோ கிறிக்கெற் மோகத்திற்கு பலியாகி தொலைக் காட்சி பெட்டிகளின் முன் தங்களது முழு நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பம், சடுகுடு, கிளித்தட்டு, இளவட்டக் கல், உரி மரம் ஏறுதல், ஆடு புலி ஆட்டம், வண்டி ஓட்டம் போன்றவை உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் விளையாட்டுக்கள். நமது மண்ணும் அது சார்ந்த மரபுகளும் மதிக்கப் படவேண்டும்.
மரபுகளில் பிற்போக்குத் தன்மைகள் இருந்தால் நாம் அதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக தமிழகத்தில் அலங்க நல்லுரில் நடைபெறும் ஜல்லிக் கட்டு எனப் படும் ஏறுதழுவுதல் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஆனால் அதனால் தேவையற்று உயிரிழப்புக்களும் இரத்தக் களரிகளும் ஏற்படுகிறது. தமிழீழத்தில் அது இல்லை என்றாலும் இது போன்ற உயிராபத்து நிறைந்த விளையாட்டுக்களை தமிழர்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் ஆனால் ஏனைய நமது மரபு சார் விளையாட்டுக்களை காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து அவற்றை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதுதான் நமக்கு அழகு, அதை விடுத்து கிறிக்கெற் மோகத்திற்கு இரையாகி மட்டையோடு அலைவது அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment