அனைத்துலக மொழியா ஆங்கிலம்?
தமிழர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் மோகம் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட ஒரு ஆங்கிலேயனுக்குக் கூட இருக்குமோ தெரியாது என்று சில ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூறினார். அவர் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் குறிப்பாக சொல்லியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் பலருக்கும் அவர் கூறிய வரி பொருந்தாமல் இல்லை.
ஆங்கிலம் சிறு பருவத்திலேயே தமிழ் சிறார்கள் மீது திணிக்கப் படுகிறது. அதற்கு நம்மில் பெரும்பாலானோர், ஆங்கிலம் அனைத்துலக மொழி (International Language), அதைக் கற்பதால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு காரணத்தை முன்வைப்பார்கள்.
காலம் காலமாக முன்னிறுத்தப் படும் இந்தக் கருத்தால் ஒருவரது கல்வித் தகமையை ஆங்கிலம் நிர்ணயிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. தமிழில் அதியுர் கல்வி கற்ற ஒரு பேராசியருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காவிட்டால் அவர் படிக்காதவர் என்றும் அதே நேரம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஒருவர் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால் அவர் படித்தவர் என்ற நினைப்பும் தமிழ் சமூகத்தில் இருந்து வருகிறது. தமிழ் நாட்டுத் திரைப் படங்களும் ஆங்கிலம் பேசும் திறனை வைத்தே படித்தவனையும் படிக்காதவனையும் வேறு படுத்திக் காட்டும் வழக்கத்தை தொடர்ந்து செய்கின்றன.
சிறு வயதிலிருந்தே ஆங்கிலக் கல்வி எனக்கு திணிக்கப் பட்டதை உணர்ந்திருக்கிறேன். அந்தத் திணிப்பிற்கு கூறப்பட்ட காரணங்களால் ஆங்கிலம் மீது ஒரு வித மோகம் ஏற்பட்டது. அந்தச் சிறு வயதில் ஆங்கிலப் புத்தகங்கங்களைப் படிப்பதை ஒரு பெருமையாகவும் நினைத்திருந்தேன். இன்றோ ஆங்கிலம் அனைத்துலக மொழி என்பது ஒரு அனைத்துலகப் பொய் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டேன்.
உலக மக்கள் தொகை கணக்கின்படி, அதிக அளவு மக்களால் பேசப் படும் மொழி சீன மொழிதானே தவிர ஆங்கிலம் அல்ல. ஆங்கிலேயர்கள் குடியேறின நாடுகளான அமரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, மற்றும் அதன் கொலனியாதிக்கத்தில் இருந்த இந்தியா, இலங்கை மற்றும் கென்யா, டன்சானியா, சிங்கப்பூர் இன்னும் ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் ஆங்கிலம் பேசப் படுவதில்லை. இன்றைய உலகமாயமாக்கள் சூழலில் அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களால் வணிக அளவில் அதன் வளர்ச்சி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும் ஆங்கிலம் இல்லாத பல நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப் படும் சுவிற்சலாந்தில் ஜேர்மன், பிரஞ்ச், இத்தாலியன், ரோமன் ஆகிய நான்கு மொழிகளும்தான் அலுவல் மொழியாக இருக்கின்றன. ஆங்கிலத்திற்கு அங்கு இடம் இல்லை. இத்தனைக்கும் ஐ.நா. மன்றத்தின் இரண்டாவது தலைமைச் செயலகம் அங்குதான் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘The Hindu’ என்ற ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தியைப் படித்தேன். அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை பரிந்துரை செய்வதற்கு ஜப்பான் நாட்டு அரசாங்கம் விரும்புகிறது என்று அதில் செய்தி வெளியாகி இருந்தது. அப்படி என்றால் இது வரை காலமும் அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாகக் கூட ஆங்கிலம் அங்கு இருந்ததில்லை என்பது புலனாகிறது. ஜப்பான் நாடு இரண்டாவது உலகப் போரின் போது அமரிக்காவால் சின்னா பின்னமாக்கப் பட்ட நாடு, ஆனால் இந்த அரை நூற்றாண்டு காலத்தில் அவர்கள் தங்கள் தாய் மொழி வழியாகவே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்று பொருளாதாரத்தில் அமரிக்காவையே விஞ்சி நிற்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும் சீனாவில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது.
பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் தாய் மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. பிரான்ஸ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கே ஆங்கிலம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய ஆங்கில அறிவு பிரான்ஸ் போன்ற நாடுகளில் எந்த அளவிற்கு பயன்படும் என்பதை எனக்கு ஏற்பட்ட சிறு அனுபவத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன். பாரிசில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளர் வேலைக்கான நேர்முகத் தெரிவுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு வெளிநாட்டு நிறுவனம். எனக்கு ஆங்கிலமும் பிரஞ்சும் தெரிந்திருக்கும் காரணத்தால் வேலை எளிதில் கிடைக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்களோ எனக்கு ஸ்பானிஷ் தெரியாத காரணத்தால் நிராகரித்து விட்டார்கள். காரணம் அது ஒரு ஸ்பெயின் நாட்டு நிறுவனம். இதுவே அது ஒரு இங்கிலாந்து நிறுவனமாக இருந்திருந்தால் என்னை ஒரு வேளை எடுத்திருப்பார்கள். ஆங்கிலமும் ஸ்பானிசும் ஒரே அளவில்தான் அங்கு மதிப்பிடப் படுகின்றன. அதற்கு மேல் ஆங்கிலத்திற்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. இரு மொழிகள் தெரிந்தவர்கள் இந்த அளவில்தான் அங்கு பலனடைகிறார்கள்.
மொழியியல் தன்மையுடன் பார்த்தால் ஆங்கிலம் ஒரு வளமான மொழி அல்ல. பல மொழிகளிலிருந்து கடன் வாங்கித்தான் தன்னுடைய சொற் பஞ்சத்தையே அது தீர்த்துக் கொண்டது. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆங்கிலம் இலத்தினிலிருந்து நேரடியாக வந்த மொழி அல்ல. இலத்தினிலிருந்து ஜேர்மன் உருவாகி அதிலிருந்து ஆங்கிலோ சக்சன் என்ற ஒரு மொழி உருவாகி அதிலிருந்து வந்த மொழிதான் இங்கிலிஷ் என்று அழைக்கப் படும் ஆங்கிலம். இன்றளவும் ஆங்கிலேயர்களால் கொண்டாடப்படும் ஒரே ஒரு இலக்கியவாதி என்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியர்தான். ஆங்கில மொழியை குறைத்து மதிப்பிடுவது எனது நோக்கமல்ல. தாய் மொழியை நேசிக்கும் அதேநேரம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான் முற்றிலும் நியாயமனது.
எங்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப எத்தனை மொழிகளையும் நாம் கற்கலாம் அதற்கு ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இங்கிலாந்து போன்ற நாட்டில் வாழும் தமிழர்கள் ஆங்கிலத்தைக் கற்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மற்ற மொழிகளுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்குக் கொடுப்பதும் எல்லாவற்றுக்கும் மேலாக தாய் மொழியைக் காட்டிலும் அதற்கு முன்னுரிமை கொடுப்பதும் ஏன்???
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment