குங்குமம் ஏன் வரவில்லை?!!!!
இந்தப் பதிவு ஒரு விசித்திரமான மனிதரைப் பற்றியது. அவர் மீது நம் ஈழத் தமிழ்க் குடிப் பெருமக்கள் சிலருக்கு ஒரு வேளை பலர் என்றுகூட சொல்லலாம் அளவு கடந்த ஒரு விசித்திரமான பக்தி இருக்கிறது. ஒரு காலத்தில் அவர் மீது எனக்கும் ஒரு வித பக்தி மயக்கம் இருந்து வந்தது. அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு ஆடிப் பாடித்திரிந்த அந்த நாள்களில் பக்தி அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் இருவர் என் மனதில் ஆழப் பதிந்திருந்தனர். ஒருவர் ஆறுமுக நாவலர் மற்றவர் அந்த விசித்திரமான மனிதர். சாய்ந்த கோபுரங்கள் என்ற இந்தப் பதிவில் நாவலரைப் பற்றி எழுத வேண்டிய தேவை எனக்கிருக்கவில்லை. ஏனெனில் நாவலரைப் பற்றி ஒரு கோபுரத்தை நான் என் மனதிற்குள் கட்டி எழுப்பவில்லை. அவர்மீது ஒரு வித மதிப்பு இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அதில் கீறல்கள் விழுந்து விட்டன. நாவலர் சமயவாதி என்பதால் அந்தக் கீறல்கள் விழவில்லை. சமயவாதியாக இருப்பினும் தமிழ்க் கடல் மறைமலையடிகள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு எள்ளளவும் குறையவில்லை. காரணம் அவருடைய விரிந்து பரந்த ஆழமான தமிழ்ப் புலமையும் தனித் தமிழ்ப் பற்றும்தான். நாவலரின் தமிழ்ப் புலமையும் அவ்வாறு வியந்து போற்றத் தக்க ஒன்றே. ஆனால் அவரது சாதி ஆணவமும் ஒடுக்கப் பட்ட மக்களின் மீது அவர் காட்டிய காழ்ப்புணர்ச்சியும் அவரைக் கீழான இடத்திற்குத் தள்ளி விட்டது. இதற்கு மேல் நான் நாவலரைப் பற்றி எழுதப் போவதில்லை. ஆனால் சிறுவயதில் நான் மனத்திற்குள் கோபுரமாகக் கட்டி குடமுழுக்குச் செய்து கும்பிட்ட அந்த குறிப்பிட்ட மனிதரைப் பற்றி எழுதுவதற்கு பல இருக்கின்றன. தமிழர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு அற்றவராயினும் வாழும் தெய்வமாக நம்மவர்கள் மத்தியிலும்கூட பெருவிருட்சமாக வளர்ந்து நிற்பவர் அவர். இத்தனைக்கும் அந்த மனிதர் சுவாமி விவேகானந்தர் போல் எழுச்சி மிக்க பேச்சாளர் அல்ல. ஓஷோவைப் (ரஜ்னீஷ்) போன்று ஆழ்ந்த தத்துவ ஞானியும் அல்ல ராமகிருஷ்ண பரமஹன்சரைப் போல் முற்றும் துறந்த ஒருவரும் அல்ல. ஆனால் இவர்கள் யாருக்கும் கிடைக்காத பேரும் புகழும் பணமும் பகட்டும் அந்தஸ்தும் அரசியல் செல்வாக்கும் அந்த மனிதருக்கு மலைபோல் கிடைத்திருக்கின்றன. புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன் அவர்தான் பகவான் அருள்மிகு சத்திய சாயி பாபா.
1988 அல்லது 1989 என்று நினைக்கின்றேன். அந்தக் கால கட்டத்தில் அவர் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். யாழ் நகரில் நான் வாழ்ந்த வீட்டிற்கு அருகாமையில் சாயிபாபா பக்தர் ஒருவரின் வீட்டிற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனை பாடுவதற்காகச் செல்வதுண்டு. சில வேளைகளில் அறுசுவை விருந்தும் தடபுடலாக அங்கு நடைபெறும். திடீரென்று ஒரு நாள் அந்தப் பக்தர் எங்கள் எல்லாரையும் அவசர அவசரமாக அழைத்தார். மாபெரும் அதிசயத்தைக் காட்டப்போவதாகக் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அவரது விட்டுக்குள் சாயிபாபாவின் படங்கள் பல உள்ளன. கை, கால்கள் என சாயிபாபாவின் உறுப்புக்களுக்கும் தனித் தனியே படங்கள் இருந்தன. ஓடிச் சென்று அந்தப் படங்களைப் பார்த்தால் எங்களால் வியப்பை அடக்க முடியவில்லை. திருநீறும் குங்குமம் அந்தப் படங்களில் இருந்து வெளிவந்திருந்தன.
அடுத்த நாள் ஒரு பொதுக் குழுக் கூட்டம் அந்த வீட்டில் ஏற்பாடாகியது. சிறப்புரையாற்றுவதற்கு வேட்டியும் வண்ண மயமான சால்வையும் அணிந்த ஒரு பெரிய மனிதர் வந்திருந்தார். குங்குமம் வெளிவந்ததற்கான காரணத்தை அவையோர் முன் விளக்கினார். எங்களுக்குத் தெரியாமல் சாயிபாபாவே நேரில் வந்து குங்குமத்தையும் திருநீற்றையும் தூவி விட்டுச் சென்றுவிடுகிறாராம். அம்மாடி! தலை சுற்றாத குறை. ஏனக்கோ பக்தி முன்பை விட பல மடங்கு கூடியது. அப்போது நான் மிகவும் சிறுவன். சிறுவனுக்கு எதற்கு பெரிய படம் என நினைத்தேனோ என்னவோ என் வயதிற்கு ஏற்றவாறு சாய் பாபாவின் ஒரு சிறிய படத்தை வாங்கி எங்கள் வீட்டுச் சாமி அறையில் வைத்திருந்தேன். நாள் தவறாமல் கும்பிட்டேன் எதற்காகத் தெரியுமா குங்குமத்தை வரவழைப்பதற்காக! வரவேயில்லை. எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி நெருங்கிய உறவினர் ஒருவரின் விடு உள்ளது. அவர்கள் பெரியவர்கள் பெரிய சாயிபாபா படத்தை வைத்திருந்தனர். அங்கு போய்ப் பார்த்தேன் அங்கேயிருந்த படத்திலும் குங்குமமோ திருநீறோ வரவில்லை. அங்கேயிருந்தவர்களைக் கூப்பிட்டு காரணத்தைக் கேட்டேன். நமது பக்தியில்தான் குறை. நாம் நம்மை மறந்து கும்பிட வேண்டும் அப்பத்தான் குங்குமம் வரும் என்றார் அவர். கூடவே குங்குமம் வந்த வீட்டுக்காரரான அந்த பக்தரை உதாரணமாகக் காட்டினார். நான் அதை மெய்யாகவே நம்பினேன். மனத்தை ஒரு முகப் படுத்தி, அம்மம்மா விட்டிற்கு வரும்போதெல்லாம் செய்து கொண்டுவரும் எள்ளுருண்டையை நினைக்காமல், அம்மா ஆசையாய் செய்து தரும் இராசவள்ளிக் கிழங்கை நினைக்காமல் பக்கத்து வீட்டு அக்கமார் ஆசையாய் வாங்கித்தரும் ஐஸ்கிரீமை நினைக்காமல், எனக்கு சிறுவயதில் பாடம் சொல்லித் தந்த எங்களின் வகுப்பு டீச்சரை நினைக்காமல் சாயி பாபாவை நினைத்துக் கொண்டு கும்பிட்டேன். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய என மாணிக்கவாசகர் சிவபெருமானை வேண்டி நின்றது போல் நானும் சாயிபாபாவை வேண்டி நின்றேன். அந்தோ பரிதாபம்! குங்குமமோ திருநீறோ வரவேயில்லை. நான் நம்பிக்கை இழக்கவில்லை தினம் தினம் பக்தியால் உருகினேன் கடைசி வரை வரவேயல்லை. அந்த வயதில் இதற்கான காரணம் தெரிந்திருக்குமா என்ன? என் பக்தியில்தான் குறையோ என எண்ணி அழுதவாறே இருந்து விட்டேன்.
சாயிபாபா என்ற அந்தக் கோபுரம் எனக்கு இறைநம்பிக்கையும் சமய நம்பிக்கையும் இருந்த காலத்திலேயே சாய்ந்து விழுந்து விட்டது. 1993 என்று நினைக்கிறேன். சாயிபாபாவின் ஆசிரமத்திலிருந்த நான்கு பேர் சாயிபாபாவைக் கொல்ல கத்தியுடன் நுழைந்திருக்கிறார்கள். காவல் துறையினர் அவர்களை சுட்டுக் கொன்றது. அப்போது ஏன் அந்த நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது.
90 களின் இறுதிப் பகுதியில் ஒரு நாள் பிரான்சிலுள்ள புத்தகக் கடை ஒன்றில் ‘The Dark Side of Sai Baba’ என்ற ஆங்கில நூலை பார்க்க நேரிட்டது. சாயிபாபாவின் முன்னாள் சீடர் ஒருவர் எழுதியது. சாயிபாபவைப் பற்றி பல விடயங்கள் எழுதப் பட்டிருந்தன. குறிப்பாக ஓரினச் சேர்க்கையில் அவருக்கு இருந்த அதீத மோகம் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஒரு வேளை புரட்டாக இருக்கலாம் என எண்ணினேன். இருப்பினும் மனம் அமைதி கொள்ளவில்லை. அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டத்தொடங்கியபோது அதிர்ச்சியளிக்கும் பல விடயங்கள் தெரியத் தொடங்கின.
சத்திய நாரயணன் ராஜு என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் கால் பதிக்க முயன்றார். அப்போது பகுத்தறிவுவாதியும் மனோதத்துவ மருத்துவருமான ஆபிரகாம் கோவூர் இவரை கருத்துப் போருக்கு அழைத்தார். சாயி பாபா போகவில்லை. கோவுரும் விடவில்லை. இந்த விடயத்தில் கோவூர் ஈவிரக்கமற்ற பகுத்தறிவுவாதி. சாயிபாபாவை ஓட ஓட விரட்டினார். தமிழ் நாட்டில் கால் பதிக்க முயன்ற சாயிபாபா கோவூருக்குப் பயந்து ஆந்திராவிலுள்ள புட்டபர்த்தியில் நிரந்தரமாகத் தங்கி ஒர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார்.
இன்று சாயிபாபா எதனால் இமாலயப் புகழைப் பெற்றாரோ அவரது அந்த அற்புதச் சித்து விளையாட்டுக்களை அவருக்கே தெரியாமல் படம் பிடித்து வெளி உலகத்திற்கு அம்பலப் படுத்தியுள்ளது http://www.exbaba.com/ என்ற இணையத்தளம். மேலும் அவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகள் குறிப்பாக வெளிநாட்டுப் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதை எல்லாம் சான்றுகளுடன் வெளிக்காட்டியுள்ளது மேற்படி இணையத்தளம். குன்றக்குடி அடிகளார், விவேகானந்தர், வள்ளலார் போன்று அன்பையும் மனித நேயத்தையும் வளர்த்த இறையியலாளர்களுடன் ஒப்பிடும்போது சாயிபாபா என்பவர் அவர்களிடமிருந்து வெகு தூரம் தள்ளி நிற்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். வெறும் மந்திர வித்தையைக் காட்டி மக்களை ஏய்க்கும் ஒருவராகவே அவர் தென்படுகிறார். உண்மையான ஓர் ஆன்மீகத் துறவி எதற்காக சித்து விளையாட்டை கற்க வேண்டும் என்பதுதான் அப்போது எழுந்த அடுத்த கேள்வி.
2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி வியாழக்கிழமை சாயிபாபாவின் ஆசிரமத்திலிருந்து அந்த அறிவிப்பு வந்தது. மாலை 6 மணியிலிருந்து 7 மணிவரை நிலவில் சாயிபாபாவின் முகம் தெரியப்போகிறதாம் பல்லாயிரக்கணக்கான சாயிபாபா பக்தர்கள் ஐதராபாத் விமான நிலயத்திற்கு அருகில் திரண்டனர். சாயிபாபாவின் அற்புதங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமையப் போகும் அந்த மாபெரும் அதிசயத்தைக் காண்பதற்காக. இறுதியாக மேகம் நிலவை மறைக்க ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் பக்தர்கள். ஒரு வேளை முகில் மறைத்திருக்காவிட்டால் பகவான் காட்சியளித்திருந்திருப்பா போலும். அந்த நேரம் சீடர் சத்திய சாயிபாபா தனது குரு சீரடி சாயி பாபாவை அழைத்திருக்கவேண்டியதுதானே அவர் வந்து முகிலை விலத்தியிருப்பார். அல்லது குடியரசுத்தலைவர் ஆனதும் தன்னிடம் வந்து ஆசி பெற்றுச் சென்ற அப்துல் கலாமை கூப்பிட்டிருந்தால் ரொக்கற்றை விட்டு முகிலைக் கலைத்திருப்பார்.
இறுதியாக ஒரு கேள்வி எழுந்தது. அன்று நான் வைத்திருந்த படத்தில் குங்குமம் வரவில்லை மாறாக சாயிபாபாவின் தலைமைப் பக்தர்கள் என்போரின் வீட்டில் குங்குமமும் திருநீறும் கொட்டோ கொட்டென்று கொட்டின. இதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் காரணம் எதுவாக இருக்க முடியும்? சாயிபாபாக்களின் ஈழத்து ஏஜண்டுகள் யாருக்கும் தெரியாமல் கடையிலிருந்து பொட்டலத்தை வாங்கித் தூவி விட்டு நமது காதில் பூவை அல்ல பூசணிக்காயையே சுற்றி இருக்கிறார்கள். இதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment