காலை புலர்ந்தவுடன் - தோழி என்
கண்ணில் நீ நிற்கின்றாயே!
காதல் மயக்கமல்ல - தோழி என்
இதயத்தின் நட்பு அன்றோ!
வானில் தெரியும் நிலா - தோழி உன்
குளிர் முகப் புன்னகையோ!
பாலும் முக்கனியும் - தோழி உன்
கனிவுப் பேச்சும் ஒன்றோ!
தாயாய் அரவணைப்பாய் - தோழி உன்
சேயாய் நான் மாறிடுவேன்!
இனிதாய் பேசும் பேச்சை - தோழி நீ
எங்கு கற்றுக்கொண்டாய்!
கோபமும் வருவதில்லை - தோழி உன்
நல் நட்புக் கிடைத்ததினால்!
பாடும் குயில் தன் குரலை - தோழி உன்னிடம்
கடன் வாங்கியதோ!
கொட்டும் அருவி போலே - தோழி என்னிடம்
பரிவை நீ காட்டுகின்றாய்!
மாறாப் பற்றுக்கொண்ட - தோழி நீ
என் நெஞ்சின் நீரூற்று!
நன் செய் நிலம் விளையும் - தோழி நீ
என் வாடா அன்புப் பயிர்!
ஏதனால் ஈடு செய்வேன் - தோழி நான்
உன்னிடம் பெற்ற அன்பை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment