Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 22

வள்ளுவர் ஓர் இந்துவா?

காலஞ் சென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தனது அர்த்தமுள்ள இந்து மதம் இரண்டாம் பகுதியில் 'வள்ளுவர் ஓர் இந்து' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். திருவள்ளுவர் பயன்படுத்திய வேண்டுதல் வேண்டாமை, இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், வானுறையும் தெய்வம் போன்ற சொல்லாடல்களை வைத்து வள்ளுவர் ஓர் இந்து என்ற முடிவுக்கு வருகிறார். இறுதியில் தமிழரான வள்ளுவர் ஓர் இந்து, இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்று அந்தக் கட்டுரையை முடிக்கின்றார். கவியரசர் கண்ணதாசனைப் போன்று பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். மூழ்கிக் கிடப்பதோடு மட்டுமல்லாது, மதச்சார்பற்ற நமது பெருந்தமிழ்ப் புலவர் வள்ளுவரை இந்துவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் ஈடு இணையற்ற தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர். ஆனால் நமது வள்ளுவப் பெருந்தகையோ இந்து மதத்தையும், அதனை இயக்கும் கருவியான பார்ப்பனியத்தையும், இந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் வருணாசிரம தர்மத்தையும், மற்றும் இந்து மதத்தின் மூடப் பழக்கவழக்கங்களையும் தனது குறட்பாக்கள் வழியாக சாட்டையடி கொடுப்பதுபோல் கடுமையாகச் சாடுகிறார்.

இந்து மதத்திற்கு அடிப்படையாக விளங்குபவை ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள். மற்றும் பகவத்கீதை, மனு தர்மம், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவைகள் புனித நூல்களாகக் கருதப் படுகின்றன. இவைகளை அலசி ஆராய்ந்தால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது, பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம். குறிப்பாக பகவத்கீதையும் மனுதர்மமும் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் மனிதப் பிறவிகளில் அவனே உயர்ந்தவன் என்றும் பெண்களும் சூத்திரர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது.
(மனுதர்மம் அத்தியாயம் 1 சூத்திரம் 31 – பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

நமது வள்ளுவரோ இதைக் கடுமையாக மறுத்து

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)


பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையால் மட்டுமே வேறுபாடு காண முடியும். என்கிறார்.

ஆரியர்களின் மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39). இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத்கீதை கொலை செய்வதையும் நியாயப் படுத்துகிறது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக பார்ப்பனரான நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார். இந்து மதம் நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிருக்கிறது.

தமிழர்களின் திருக்குறளோ புலால் உண்பதையும் கொலை செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (குறள் 260)


புலால் உண்ணாதவர்களையும் அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் என்கிறது. மற்றுமொரு குறள்

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் 327)


தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்றுரைக்கிறது.

புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள். புராணங்களில் வரும் கதாபாத்திரங்களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்குகின்றன. புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை என்று கூறும் அளவிற்கு புராணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்புராணங்கள் தேவர்-அசுரர் போராட்டாத்தையே முக்கிய கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. இவற்றை பின்னாள்களில் ஆய்வு செய்த பல வரலாற்று ஆசிரியர்கள் தேவர்-அசுரர் போராட்டங்கள் அந்நாள்களில் நடந்த ஆரியர்-திராவிடர் போராட்டங்களையே குறிப்பதாக எழுதியுள்ளார்கள். புராணங்கள் புனையப்பட்ட அன்றைய காலகட்டத்தில் தென்னாட்டில் வாழ்ந்த தமிழர்களே திராவிடர்களாகக் கருதப்பட்டார்கள். திராவிடம் என்ற சொல் தமிழிலிருந்து திரிபுற்ற ஒன்றே (தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-திரபிட-திராவிட) என்பதை பாவாணர், மு.வரதராசனார் போன்ற அறிஞர் பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கியுள்ளனர். அந்தத் தமிழர்களையே அசுரர்களாகவும் அவர்கள் எதிர்த்த ஆரியர்களைத் தேவர்களாகவும் தங்களின் புராணங்களில் சித்தரித்திருக்கின்றனர். நல்லவர்களான தேவர்களைக் (ஆரியர்கள்) காக்க தீயவர்களான அசுரர்களை (தமிழர்கள்) கடவுள் அழித்தார் என்று பொருள் பட புராணங்களைப் புனைந்தார்கள்.

இவற்றை அறிந்த நமது வள்ளுவர் தனது குறள் ஒன்றின் வழியாக ஆரியர்களின் இனவெறிக்கு சாட்டையடி கொடுக்கின்றார்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் (குறள் 1073)


தேவர்கள் (ஆரியர்கள்) மனம் போன போக்கில் தீய செயல்களைச் செய்யும் கயவர்களுக்குச் சமமானவர்கள் என்கிறார்.

பொதுவாக, உலகத்திற்குத் தேவையான நீதிக் கருத்துக்களை எழுத முன்வந்த திருவள்ளுவருக்கு இது போன்ற குறள் எழுத வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது. ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இன இழிவை தமிழரான வள்ளுவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே எய்யப் பட்ட அம்பை எடுத்து எய்தவன் மேல் எய்வது போல் தேவர் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆரியரைக் கயவர் எனக் கடுமையாகச் சாடுகிறார்.

பொதுவாக அன்றைய காலத்தில் பார்ப்பனர்களுடைய தோற்றம் தமிழர்களிடமிருந்து முற்றிலும் மாறு பட்டிருந்தது. தலைமுடியை முன்புறம் நன்றாக மழித்து பின்புறம் தலைமுடியை நீட்டி குதிரை வால் போன்று வளர்த்திருப்பார்கள். வள்ளுவர் இதையும் மறுக்கிறார்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் (குறள் 280)


உலகம் பழிக்கக் கூடிய தீய செயல்கனை செய்யாமல் விட்டாலே போதும் மழித்தல் நீட்டல் போன்ற புறத் தோற்றங்கள் தேவையில்லை என்கிறார்;. இக்குறளை ஆழ்ந்து நோக்கினால் புறத் தோற்றத்தின் வழியாகத் தங்களை வேறுபடுத்திக் காட்டும் பார்ப்பனர்கள் உலகம் பழிக்கும் செயல்களைப் புரிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்து மத புராண இதிகாசங்களில் வேள்விகளும் யாகங்களும் புனிதச் செயல்களாக விளக்கப் பட்டிருக்கும். வானம் பொய்த்து விட்டால் யாகம் செய்து மழையை வரவழைப்பது போன்ற மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கும். வான் சிறப்பை பாட வந்த வள்ளுவர் இந்த மூட வழக்கத்தை மறுக்கிறார்.

சிறப்போடு புசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (குறள் 18)


வானமே பொய்த்து விடும்போது அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப் படுபவர்களுக்கு வழிபாடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் சொரிந்து உண்ணாமை நன்று (குறள் 259)


எனும் குறளில், நெய் போன்ற பொருள்களை தீயிலிட்டு யாகங்களும் வேள்விகளும் செய்வதை விட உயிர்களைக் கொன்று தின்னாமையையே உயர்ந்தது என்கிறார்.

இந்துத்துவம் என்பது பார்ப்பனியத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும் மதக் கட்டமைப்பு. வேதங்கள் உபநிடதங்கள் முதல் கொண்டு புராண இதிகாசங்கள் வரை அனைத்துமே பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியையே வெளிக்காட்டுகின்றன. பிராமணர்களை உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கும் பகவத்கீதையும் மனுதர்மமும் தனிமனித ஒழுக்கத்தைக் காட்டிலும் வருணாசிரம முறைப்படி பிராமணர்களின் தொழிலான வேதம் ஓதுதலையே முக்கிய கடமையாகக் கூறுகின்றன. பிராமணன் ஒருவன் ஒழுக்கத்திலிருந்து தவறினாலும் வேதம் ஓதுதலில் இருந்து தவறக் கூடாது என்று அவை வெளிப்படையாகவே கூறுகின்றன. என்ன விந்தை! பகவத்கீதையிலும் மனுதர்மத்திலும் சொல்லப் பட்ட கருத்தை திருவள்ளுவர் ஒரு வரி பிசகாமல் அப்படியே மறுத்துரைக்கிறார்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் 134)


பார்ப்பனன் ஒருவன் கற்றதை (வேதம்) மறந்துவிட்டால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒழுக்கத்திலிருந்து தவறினால் அவன் என்றும் இழிமகனே.

வள்ளுவரின் இந்தக் குறளை உற்று நோக்கினால் ஓர் உண்மை தெளிவாகப் புலனாகிறது. தனது 1330 குறட்பாக்களில் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன் படுத்தியுள்ளார். தமிழரான வள்ளுவர் தனது நூலை அகரம் என்ற சொல்லிலிருந்து தொடங்குவதின் வழியாக தன்னைத் தமிழரென வெளிக் காட்டிக் கொள்கிறார். இருந்த போதிலும் தமிழ் தமிழர் போன்ற சொற்களை அவர் எந்த இடத்திலும் பயன் படுத்தவில்லை. நாட்டைப் பற்றி குறள் தீட்டிய அவர் தன்னுடைய நாட்டைப் பற்றி கூறவில்லை. மன்னர்களைப் பற்றிக் குறள் தீட்டிய அவர் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தர்களைப் பற்றிக் கூறவில்லை. தான்னுடைய நூல் தமிழர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உலகளாவிய நோக்கமே அதற்குக் காரணம். அப்பேர்ப் பட்ட உயரிய எண்ணம் கொண்ட வள்ளுவர் தேவர் பார்ப்பான் போன்ற சொற்களின் வழியாக ஆரியக் கருத்துக்களை எதிர்க்கவும் மறுக்கவும் துணிந்திருக்கிறார் என்றால் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான ஆரியர்களுடைய வேதங்களும் புராண இதிகாசங்களும் வள்ளுவருக்கு ஓருவித சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

திருவள்ளுவர் அறவாழி அந்தணன், அந்தணர் என்போர் அறவோர், என்றெல்லாம் அந்தணர்களை உயர்த்திப் பாடியிருக்கிறாரே எனவே பிராமணர்களின் உயர்வை அவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று தமிழர்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை பிராமணர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. இந்து மத நூல்களில் வரும் பிராமணர் என்ற சொல்லை வள்ளுவர் எந்த இடத்திலும் பயன் படுத்தவில்லை. எனெனில் பிராமணர் என்ற சொல்லின் பொருளே பிறவி உயர்வைக் வெளிக்காட்டுகிறது. பிறப்பினால் வரும் உயர்வை வள்ளுவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராமணர்களைக் குறிப்பதற்கு அவர் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர் மட்டுமல்ல வள்ளுவருக்குப் பின் தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான இடத்தைப் பெற்ற இளங்கோவடிகளும் தனது சிலப்பதிகாரத்தில் பிராமணர்களைக் குறிக்கும் இடத்தில்

மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட……………….

என பார்ப்பான் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளார். எனவே பிராமணர்களைத் தமிழ்ப் புலவர்கள் பார்ப்பான் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர அந்தணர் என்று அல்ல. திருவள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை மூன்று குறள்களில் பயன் படுத்தியுள்ளார்.

அறவாழி அந்தணன் தாழ்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை புண்டொழுக லான் (குறள் 30)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (குறள் 543)


இந்த மூன்று இடங்களிலும் வள்ளுவர் அந்தணர் என்ற சொல்லை அறத்தோடு தொடர்பு படுத்தியே கூறியுள்ளார். எனவே நெஞ்சு நிறைந்த அன்போடு மனித சமூகத்திற்கு அரும்பணியாற்றிய அறவோர் அனைவரும் வள்ளுவர் மொழியில் அந்தணர்களே. அந்த வகையில் பார்ப்பனர் அல்லாதவர்களான புத்தர், சோக்ரடீஸ், வள்ளலார், அன்னை தெரசா, நைட்டிங்கேல், பெரியார், அண்ணா, தியாகி தீலீபன், அன்னை பூபதி அனைவரும் அந்தணர்களே. பார்ப்பனச் சமூகத்தில் பிறந்தாலும் பார்ப்பனியத் தன்மைகளை விட்டொழித்து அறநெறிப்படி வாழ்ந்தால் அவர்களை அந்தணர் என்றழைப்பதில் தவறில்லை ஆனால், வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிட்ட பார்ப்பனர்கள் முதற் கொண்டு இருபதாம் நூற்றாண்டிலும் வருணாசிரம தர்மத்தைக் கட்டிக்காத்த காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப் பட்ட காலஞ் சென்ற சந்திர சேகரேந்திர சரஸ்வதி, சங்கர ராமன் கொலைவழக்கில் கைது செய்யப் பட்ட ஜெயந்திர சரஸ்வதி வகையறாக்களை அந்தணர் என்று அழைத்தால் அதைவிடக் கேலிக்கூத்து வேறொன்றும் இல்லை. வள்ளுவர் குறிப்பிடும் அந்தணர் என்ற சொல் குணத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி குலத்தைக் குறிக்கும் சொல் அல்ல.

இந்துப் புராண இதிகாசங்களிலும் துதி பாடல்களிலும் கடவுளர்களின் அற்புதங்கள் கதை கட்டிவிடப்பட்டுள்ளன. மகாபாரதமும் தன் பங்கிற்கு பாண்டவர்களின் வெற்றிக்கு அருச்சுனன், பீமன், அபிமன்யு, போன்றவர்களின் வீரத்தை முக்கிய காரணமாகக் காட்டாமல் கண்ணனின் அருளையே முக்கியமாகக் காட்டுகிறது. தனிமனிதனுடைய வீரமும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் தன்மைகள் முக்கியப் படுத்தப் பட்டிருக்கும். வள்ளுவரின் திருக்குறளோ இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறுகிறது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)


கடவுள் அருளைக் காட்டிலும் முயற்சியுடன் உடலை வருத்தி உழைத்தால் உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் எனப் பொருள் படும் படி வள்ளுவர் தீட்டிய குறளானது கடவுளைப் பின்னுக்குத் தள்ளி முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது.

இந்து மதம் உடலை வருத்தி உழைக்காமல் பிறரிடமிருந்து யாசகம் பெற்று வயிறு வளர்க்க உதவும் புரோகிதத் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுகிறது. திருக்குறளோ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர் புட்டி உழும் உழவர்களின் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுவதுடன் உலக மக்கள் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்கிறது. இதோ அந்தக் குறள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)


தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது. வள்ளுவர் ஏதாவது ஒரு சமயத்தைத் தழுவி இருந்திருப்பாரேயானால் அது பெரும்பாலும் சமண சமயமாகத்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் வள்ளுவரின் ஆரிய எதிர்ப்புக் கருத்துக்களும் அவர் வலியுறுத்திய அறக் கோட்பாடுகளும் சமணம் மற்றும் பௌத்தக் கருத்துக்களோடு ஒன்றியே காணப்படுபின்றன. பௌத்தத்தைக் காட்டிலும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழோடு அதிகம் தொடர்பு கொண்டிருந்த சமயம் சமணமாகவே கருதப் படுகிறது. திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப் படும் நீதி நூலான நாலடியாரை எழுதிய நூற்றுவரும் சமணத் துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி என்பது சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படிக்கும்போது தெரிகிறது. ஆனால் வள்ளுவப் பெருந்தகையோ தன்னை ஒரு சமணராக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மதச்சார்பற்றவர். மனிதர், மானுடம் போற்றியவர் அதுவே அவரது சிறப்பு.

No comments:

Post a Comment