கஷ்மீர் யாருக்குச் சொந்தம்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த இரு பெண்களும் அறிமுகமானார்கள். அதில் ஒருவரை தமிழ்ப் பெண் என ஊகிக் முடிந்தாலும் வழக்கமாக எல்லோரும் கேட்கும் எந்த நாடு என்ற கேள்வியைக் கேட்டேன். அவர் சிறிலங்கா என்றார். அவருடைய தோழியாக இருக்கும் மற்ற பெண்ணிடம் வட இந்தியச் சாயல் இருந்ததால் இந்தியாவா எனக் கேட்டேன். அவர் இல்லை என்று தலை ஆட்டினார். பாகிஸ்தான்... என இழுத்தேன் அதற்கும் இல்லை என்றார். உங்களால் ஊகிக்கவே முடியாது என்றார். நானும் விட்டுக் கொடுக்காமல், ஒரு வேளை ஆபிரிக்க நாடுகளில் புலம் பெயர்ந்த இந்தியராக இருக்கலாம் என நினைத்து கென்யா, தென்னாபிரிக்கா, உகண்ட.... என என் பட்டியலை நீட்டினேன் அவர் ஒவ்வொன்றையும் மறுத்தார். நானும் ஒரு வித குழப்பமான எதிர்பார்ப்புடன் நீங்களே கூறிவிடுங்கள் என்றேன். கஷ்மீர் என அவரிடமிருந்து பதில் வந்தது. ஒரு கணம் அதிர்ந்தேன். கஷ்மீர் சிக்கலைப் பற்றி ஏற்கனவே ஓரளவிற்கு அறிந்து கொண்டிருந்தாலும் அது ஒரு மதம் சார்ந்த போராட்டம் என்று பலர் கருதுவதைப் போலவே நானும் எண்ணியிருந்தேன்.
அதற்கு இந்தியச் சார்பு ஊடகங்கள் விதைத்து விட்ட கருத்தும் ஒரு காரணமாகும். கஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் அதற்குள் பாகிஸ்தான் புகுந்து அத்து மீறுகிறது என்ற கருத்து நம்மவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. இயக்குனர் மணிரத்தினத்தின் ரோஜா, உயிரே போன்ற திரைப்படங்களும் இது போன்ற இந்தியத் தேசியவாதக் கருத்தை விதைக்கும் விதமாகவே அமைந்திருந்தன.
அந்தப் பெண்ணுடனான நீண்ட உரையாடலுக்குப் பின் அது தொடர்பான செய்திகளைத் தேடிப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அந்தப் பெண்ணின் பதில் எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணின் பதிலில் இருந்த தெளிவு தனது நாட்டைச் சிறிலங்கா என்று கூறய அவரின் தோழியாகிய அந்தத் தமிழச்சிக்கு இல்லையே என்ற வருத்தமும் மேலிட்டது.
கஷ்மீர் யாருக்குச் சொந்தம்? நிச்சயமாக அது இந்தியாவுக்குச் சொந்தமில்லை, அப்படியானால் பாகிஸ்தானுக்குச் சொந்தமா? அதுவும் இல்லை. அது கஷ்மீர் வாழ் மக்களுக்குச் சொந்தம். தாங்கள் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா இல்லை பாகிஸ்தானோடு சேர்ந்திருப்பதா அல்லது பிரிந்து சென்று தனியரசை அமைப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் கஷ்மீர் மண்ணின் மக்கள்தானே தவிர வல்லாதிக்க அரசுகள் அல்ல.
இந்தியா என்பதே வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப் பட்ட ஒரு செயற்கையான பூகோளக் கட்டமைப்பு, ஆனால் கஷ்மீரோ அந்த வெள்ளையர் காலத்தில்கூட இந்தியாவோடு சேர்ந்திருக்கவில்லை என்பதுதான் அடிப்படை உண்மை. அது மட்டுமல்ல இன்று இந்தியத் தேசியவாதிகளாலும் இந்து அடிப்படைவாதிகளாலும் கஷ்மீர் பிரச்சனையானது இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் என்றும் மலினப் படுத்தப் பட்டு வருகிறது. உண்மையில் கஷ்மீர் பிரச்சனையானது மத நல்லிணக்கத்தோடுகூடிய சுயநிர்ணைய உரிமைப் போராட்டமாவே தோற்றம் பெற்றது.
1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. பாகிஸ்தான் என்ற புதிய நாடும் அன்றுதான் உருவாகியது. அப்போது கஷ்மீரானது இரு நாடுகளுடன் சேராமல் தனியாகவே இருந்தது. கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்களாக இருப்பினும் அவர்களுள் இந்துக்களும் இருக்கின்றனர். ஏன் அவர்களில் பௌத்தர்களும் இருக்கின்றனர். இவ்வாறு முஸ்லீம், இந்து, பௌத்தம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் கஷ்மீரிகள் என்ற உணர்வுடனேயே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
தன்னை அடக்கி வைத்திருந்த பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா அந்த ஈரம் காய்வதற்குள் இன்னொரு தேசிய இனத்தின் நாடான கஷ்மீரை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்தது. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் படைகள் கஷ்மீருக்குள் நுழைந்து முன்றில் இரண்டு பகுதியை தனது வசமாக்கின. இதனைக் கண்டு பொறுக்க முடியாத பாகிஸ்தான் எஞ்சியிருந்த மூன்றிலொரு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. விளைவு கஷ்மீர் இரண்டாகத் துண்டாடப் பட்டது. கஷ்மீரிகள் என்ற உணர்வோடு வாழ்ந்த அந்த மக்கள் இந்தியார்கள் என்றும் பாகிஸ்தானியர்கள் என்றும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டனர். இரு நாட்டு எல்லைகளுக்குமிடையில் LOC (Line of Control) எனப்படும் எல்லைக் கோடு கஷ்மீரில் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் நடந்தது என்ன தெரியுமா? குடும்ப உறவுகளே பிரித்துத் தள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக, நினைத்தவுடன் கால் நடையாகவே போய்வரும் தூரத்திலிருந்த அண்ணனின் குடும்பம் இந்தியர்கள் என்றும் தங்கையின் குடும்பம் பாகிஸ்தானியர்கள் என்றும் மாறின. கூப்பிடும் தொலைவிலிருக்கும் தன் தங்கையைப் பார்க்கவேண்டும் என்றால் அண்ணன் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்தியத் தலைநகருக்குச் சென்று விசா எடுத்து பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கஷ்மீர் தனக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொள்ளும் இந்தியா அதை நியாயப் படுத்துவதற்காக அப்போது (1947 இல்) கஷ்மீரின் மன்னராக இருந்த ஹரிசிங் என்பவர் கஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் நோக்கோடு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தை காரணம் காட்டுகிறது. உண்மையில் இந்த இணைப்பு தற்காலிகமானது. கஷ்மீர் மக்கள் இதைத் துளியளவேனும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பெற்றன் இந்த இணைப்பைத் தற்காலிகம் என்று ஒத்துக் கொண்டதுடன் கஷ்மீர் மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வாக்கெடுப்பு (Pடநடிளைஉவைந) நடத்தி இந்தியாவுடன் சேர்ந்திருப்பதா இல்லையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் வரையறுத்தார். அன்றைய இந்தியத் தலைவர்களான காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு போன்றவர்களும் இதனை ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த ஆண்டில் அதாவது 1948 இல் இந்தப் பிரச்சனை ஐ.நா. மன்றம் வரை சென்றது. ஐ.நாவும் உலக நியதிக்கேற்ப வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் இன்றுவரை அந்த வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மேலை நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற வாக்கெடுப்புக்களை இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறுவதில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். அதிலும் உண்மை இல்லை அதே கால கட்டத்தில் நடந்த ‘யுனகத் பிரச்சனைக்கு’ இந்தியாவே முன்னின்று வாக்கெடுப்பை நடத்தியது.
‘யுனகத்’ என்பது தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியாகும். அதன் அப்போதைய மன்னர் நவாப் அதனை பாகில்தானோடு இணைத்தார். இந்த இணைப்பை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியா தனது படைகளை அனுப்பி அதே 1947 இல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதனைக் கண்டு பாகிஸ்தான் வெகுண்டது. யுனகத்தில் உள்ளவர்கள் இந்தியச் சார்பு கொண்ட இந்துக்கள் என்பதைத் தெரிந்து கொண்ட இந்தியா தாமாகவே முன்வந்து வாக்கெடுப்பை நடத்தியது. முடிவுகள் இந்தியா எதிர்பார்த்த வண்ணம் அதற்குச் சாதகமாகவே அமைந்தன. ஆனால் கஷ்மீரிலோ அதற்கு நேர் எதிராக இன்றுவரை நடந்து கொள்ளுகிறது. பல உள்நாட்டு வெளிநாட்டு சிக்கல்களில் தலைக்கொரு சியாக்காயையும் தாடிக்கொரு சியாக்காயையும் பூசிக் கொள்ளும் இந்தியா கஷ்மீர் யுனகத் பிரச்சனைகளிலும் அவ்வாறே நடந்து கொண்டது.
இந்திய அரசினால் வஞ்சிக்கப் பட்ட கஷ்மீர் மக்கள் கொரில்லாப் போர் வழியாக தங்கள் நாட்டை மீட்டெடுக்க முடிவுசெய்தனர். இதன் அடிப்படையில்தான் கஷ்மீரின் முக்கிய பிரிவினைவாத அமைப்பான JKLF (Jammu Kashmir Liberation Front) எனப்படும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி தோற்றுவிக்கப் பட்டது. 1977 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்கத்தில் அமானுல்லா கான் மற்றும் மக்பூல் பாத் என்பவர்களால் இது தோற்றுவிக்கப் பட்டது. இதன் அடிப்படை நோக்கம் இந்தியாவாலும் பாகிஸ்தானாலும் கைப்பற்றபட்ட கஷ்மீர் நிலப்பரப்புக்களை மீட்டெடுத்து அவற்றை ஒன்றாக இணைத்து 1947 இற்கு முன்பு இருந்த கஷ்மீரை உருவாக்குவதே. இந்த இயக்கம் தோற்றம் பெறும் போதே தங்களின் நோக்கம் தேசிய விடுதலையேயன்றி இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்ல என்பதையும் தெளிவு படுத்தியிருந்தது.
மதச் சார்பின்மையையும் தேசிய இனவிடுதலையையும் முன்வைத்த கஷ்மீர் மக்களின் கோரிக்கையானது இந்தியாவுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கேட்டது ஒட்டு மொத்த கஷ்மீரின் விடுதலை. இந்தியாவைப் போன்று கஷ்மீரை தன் வசமாக்கிக் கொள்ளவே அதுவும் விரும்பியது. போதையில் இருப்பவர்களுக்கு கள்ளை ஊற்றிக் கொடுப்பது போல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து இந்தியாவுக்கு எதிராகக் களமிறக்கி விட்டது. இதன் உச்சக் கட்டமாக 1989 ஆம் ஆண்டு ‘ஹிஸ்புல் முஜாஹிடின்’ என்ற இராணுவ அமைப்பை பாகிஸ்தான் தோற்றுவித்தது. மத அடிப்படைவாதம் கொண்ட இந்த அமைப்பானது மதநல்லிணக்கம் கொண்ட ‘JKLF’ போன்ற விடுதலை அமைப்புக்களை ஓரம் கட்டி இன்று சுயநிர்ணைய உரிமைப் போரை ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப் போராக மாற்றி வருகிறது.
அதை எதிர்க்கிறோம் என்ற பெயரில் செயல் படும் இந்திய இராணுவத்தினரின் அடக்கு முறையால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டு வருகின்றனர். இது ஒரு வகை அடக்கு முறை என்றால் அங்கு காலுன்றியிருக்கும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மதவாதிகளின் அடக்கு முறை வேறு வகையாக உள்ளது. இஸ்லாமிய சட்டத்தை மீறுபவர்கள் ஈவிரக்கமின்றி நடத்தப் படுகின்றனர். ஆக இந்தியாவின் இந்து அடிப்படைவாதிகளால் வளர்த்துவிடப் பட்ட இந்தியத் தேசியவாதத்திற்கும் பாகிஸ்தான் வளர்த்துவிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் நடுவில் கஷ்மீர் மக்களின் வாழ்வு தொடரும் துயரமாக நீள்கிறது.
மக்களின் நலனை முன்வைக்காத அல்லது அதனை புறக்கணிக்கும் தேசியங்கள் எத்தகையவையாக இருப்பினும் வறட்டுத்தனமாக போலித் தேசியங்களே. அத்தகைய தேசியவாதங்கள்தாம் பிற இனங்கள் மீது படை எடுத்து தங்கள் அதிகார வெறியை நிலை நாட்ட முயற்சிக்கின்றன. இந்திய ஆளும் வர்க்கத்தின் அத்தகையே ஒரு தேசியமே இன்று கஷ்மீரை மயான பூமியாக மாற்றி வருகிறது. பாகிஸ்தானின் பங்கு இருந்தாலும் அதனைத் தொடக்கி வைத்த பெருமை இந்தியாவையே சேரும். உலகில் மதவாதம் காவு கொண்ட மனித உயிர்களைக் காட்டிலும் தேசியவாதம் காவு கொண்ட மனித உயிர்கள் அதிகமாகவே தெரிகின்றன.
மதவெறி அருவருப்பானது என்பதை உணர்ந்திருக்கிறோம் ஆனால் தேசியவெறி அதனைக் காட்டிலும் அருவருப்பானது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment