Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 8

கீதை காட்டும் பாதை

நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று.

அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத்தனை வீடுகளிலும் அந்த வரிகள் தொங்க விடப்பட்டுள்ளன. அது ஏதோ உலகமகா தத்துவங்களில் ஒன்று என நம்மவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கீதையைப் படிக்கும் முன், நானும் அது போன்ற ஒரு மயக்கத்தில்தான் ஆழ்ந்திருந்தேன். மிகுந்த ஆர்வத்தோடு அதனைப் படிக்கத் தொடங்கினேன். இறுதியில், மனித வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன் தராத உளுத்த வேதாந்தங்களின் தொகுப்புத்தான் கீதை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மகாபாரதம் என்பது கண்ணனின் வாழ்க்கையையோ அல்லது அவனது சிறப்புக்களையோ பெருமைப் படுத்த எழுதப் பட்ட இலக்கியம் அல்ல. துஷ்யந்தன், பரதன், (துஷ்யந்தனின் மகனாகிய பரதனின் பெயரிலிருந்துதான் பாரதம் என்ற பெயர் உருவாகியது) யயாதி, குரு, சந்தனு, போன்ற சந்திர வம்சத்து அரசர்களைப் பற்றிய தொகுப்பு நூல்தான் அது. அதன் பெரும் பகுதி அந்த வம்சத்தில் தோன்றிய பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இறுதியில் அபிமன்யுவின் பேரனும் பரீட்சித்து மன்னனின் மகனுமாகிய ஜனமேயனுடன் அந்தப் பெருங்கதை முடிவடைகிறது. இதில் கண்ணன் பாத்திரமானது பாண்டவர்களின் நண்பனாக இடையில் வரும் ஒன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது. கதைத் தன்மையின்படி மகாபாரதத்தின் முக்கிய கதா பாத்திரம் பீஷ்மரேயன்றிக் கண்ணன் அல்ல.

எனவே கண்ணனை முதன்மைப் படுத்துவதற்காகவும் மகாபாரதத்தில் வி;ட்ட குறை தொட்ட குறையாக சொல்லப் பட்ட வருணாசிரம தர்மத்தை வலியுறுத்துவதற்காகவும் இடையில் வந்தவர்கள் மகாபாரதத்தோடு இணைத்த ஒரு இடைச்செருகலே பகவத் கீதை. பதினெட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய பகவத் கீதையின் பெரும் பகுதி, கண்ணன் தன்னைத்தானே தன் பெருமைகளை பறை சாற்றிக் கொள்வதாகவே அமைந்திருக்கிறது.

எடுத்துக் காட்டாக, சிவன், காளி, போன்ற மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் சிற்றறிவு படைத்தவர்கள் என்றும் தன்னை (கண்ணனை) வணங்குபவர்களே உண்மையானவர்கள் என்றம் சொல்லப் பட்டிருக்கிறது. (பகவத் கீதை அத்தியாயம் - 7, சுலோகம் 20,21,22,23).

இதில் இன்னொரு வேடிக்கையையும் நாம் பார்க்கலாம். மகாபாரதத்தைக் குறிப்பிடும் போது வியாசர் அருளிய மகாபாரதம் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கீதையைப் பற்றி குறிப்பிடும் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது என்று குறிப்பிடுகிறார்கள். கீதை போர்க்களத்தில் உபதேசிக்கப் பட்டதென்றால் அப்போது கூட இருந்து எழுதியது யார்? கீதையின் முழுச் சுலோகங்களைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நாளாவது தேவைப் படும். அந்த நாளில்தான் முதல் நாள் போரும் நடை பெறுகிறது. அப்படியானால் இது எவ்வாறு சாத்தியம்? இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்ததை எதிரில் இருந்த கௌரவப் படை வாய் பார்த்துக் கொண்டிருந்ததா?. எனவே கீதை போர்க்களத்தின் நடுவில் உபதேசிக்கப் படவும் இல்லை. அதை உபதேசித்தது கண்ணனும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு இடைச் செருகலே.

கீதையானது கற்பனையான ஒன்று, அது போர்க்களத்தின் நடுவில் உபதேசிக்கபடவில்லை என்பதை இந்துத் துறவியான விவேகானந்தரும் ஒப்புக் கொள்கிறார். (சுவாமி விவேகானந்தர் எழுதிய கீதை பற்றிய சிந்தனைகள் - பக்கம் 1-6)

எஞ்சி இருக்கும் பகுதிகளில் மானுட இழிவைச் சுமக்கும் வருண பேதம் விளக்கப் பட்டிருக்கிறது. அடுத்து கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்றும் ஆன்மா அழிவற்றது என்றும் சொல்லப் பட்டிருக்கிறது இதைத் தவிர வேறு எதுவும் அதில் சொல்லப் படவில்லை.

No comments:

Post a Comment