Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 21

கற்பு

கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் பதம் வன்புணர்ச்சியே (பாலியல் வல்லுறவு) தவிர கற்பழித்தல் அல்ல. கற்பழித்தல் என்ற சொல்லாடல் முழுக்க முழுக்கத் தவறானது. கற்பை எது வரைக்கும் அழிக்கமுடியும் என்று கேட்டால் யாரிடமும் தெளிவான பதில் இல்லை. பெண்ணின் கன்னித்தன்மையை பலவந்தமாகப் பறிப்பதற்குப் பெயர்தான் கற்பழித்தல் என்றால் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்த பெண்ணைப் பலவந்தப் படுத்துவதை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அல்லது பெண்ணின் உடலியல் ஒழுக்கம்தான் கற்பு என்றால் ஒரு பெண் அவளது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால் அப்பெண்ணை கற்பிழந்த பெண் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? எனவே ஒரு பெண்ணை, அவள் மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் அவளது விருப்பத்திற்கு மீறி பலாத்காரப் படுத்தி உடலுறவு கொண்டால் சட்டப்படி குற்றமாகும் என்பதுடன் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும். அதே சமயம் ஒரு பெண் பாலியல் வல்லுறவு என்ற மிருகத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதற்காக வாழ்வை முடித்துக் கொள்ளாமல் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறந்து ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதே வரவேற்கத்தக்கதாகும்.


தமிழர்களின் கற்பு நிலை பற்றி பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் வியப்பை அளிக்கின்றன. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றன. இருப்பினும் காதல் சுதந்திரமும் காதலுக்கு அடுத்த களவியலும் மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் மனத்தைப் பறிகொடுத்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்க முன் உறவு கொள்வதை, (Premarital Sex)) இக் காதலும் களவொழுக்கமும் நியாயப் படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் உள்ள களவியலில் திருமணத்திற்கு முந்திய உடலுறவுச் சுதந்திரம் விளக்கப் பட்டிருக்கிறது. திருக்குறளில் உள்ள காமத்துப் பாலில்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்


என்ற குறள் காதல் சுதந்திரத்தை நியாயப் படுத்துகிறது. அதே காமத்துப் பாலில் உள்ள கற்பியல் தொடர்பான குறட்பாக்கள்; காதல் துணையின் பிரிவால் ஏற்படும் உளம், உடல் சார்ந்த விரகதாபத்தையும் தலைவன் தலைவிக்கிடையே இருக்கும் ஆழமான அன்பையும் விளக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றனவே தவிர பிறவிப் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லை. பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப் படும்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை


என்ற குறளுக்கு, பரிமேலழகர் போன்றவர்கள் "தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்" என்ற கருத்துப்படி பிற்போக்குத் தன்மையுடன் உரை தீட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மைப் பொருள் பாhவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் உரை எழுதியதைப்போல் "தொழு என்ற சொல் பின்பற்றுதல்” என்றும் “பெய்யனப் பெய்யும் மழை என்றால் பெய்த இடத்தில்" என்றும் பொருள்படும் எனவே பெண்ணானவள் மழையைப் போன்றவள். மழை எவ்வாறு பூமியை வளப்படுத்துகிறதோ அவ்வாறு தன் வாழ்க்கைத் துணைவனை வளப்படுத்துபவள் பெண் என்பதே அக்குறளின் பொருள். இங்கே வள்ளுவரும் ஒரு பெண்ணியவாதியாகவே தென்படுகிறார். அடுத்து வள்ளுவர் கூறும் அடக்கம் என்பது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கனம் கொள்வது தவறு என்று சொல்கிறதே தவிர பெண்மீதான சமூக ஒடுக்குமுறையை நியாயப் படுத்திக் கூறவில்லை. வள்ளுவர் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தவில்லை. ‘பிறனில் விழையாமை’ என்ற அதிகாரத்தில் ஆண்களுக்கும் வலியுறுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் உள்ள குறுந்தொகை, அகநாநூறு போன்றவற்றிலும் திருமணத்திற்கு முந்திய உறவு பல இடங்களில் கூறப் பட்டுள்ளன. மனத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழும் முறையை தமிழிலக்கியங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணும்போது பண்டைய தமிழ் இனம் எந்தளவிற்கு காதல் சுதந்திரத்துடன் வாழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆண் புலவர்கள் மட்டுமல்ல சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், வெள்ளி வீதியார் போன்றவர்களும் ஆண்களுக்கு நிகராக அரசியல் சமூகக் கருத்துக்களுடன் காதல், களவியல் செய்திகளை எல்லாம் தங்கள் பாடல்களில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர்

தமிழர்கள் மத்தியில் இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்டதுதான் பிறவிப் பெண்ணடிமைத்தனம் அதை நாம் பிடித்துவைத்துக் கொண்டு பெண்களின் கற்பை எடைபோடுகின்றோம். ஆண் சம்பந்தப் படாமல் தவறு நடக்குமா? அப்படி நடந்தால் அதில் தங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற நியாயமான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? படுக்கை அறையில் இரத்தக் கறையைத்தேடும் ஆண்களுக்கு, பெண்கள் உடற்பயிற்சி, நீச்சல், கராத்தே போன்றவற்றில் ஈடுபடுவது ஏமாற்றத்தையே தருகிறது. கற்பு உடல் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் அல்லது உள்ளம் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் கற்பு என்பது பாரதி எழுதியைப் போல்

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்" எனும் நிலைப் பாடே சரியானது,”


அதே நேரம் மனித வாழ்வில் ஒழக்கம் இன்றியமையாததாக இருப்பினும் சூழ்நிலை காரணமாக தவறு ஏற்பட்டு ஒருவேளை சம்பந்தப் பட்ட ஆணும் பெண்ணும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டி வந்தால் நடந்ததை மறந்து விட்டு இன்னொரு வாழ்க்கையைத் தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பாலியல் கல்வியும், பாதுகாப்பான உறவுக்கான கருத்தடை முறைகளும் பாலியல் நோய்களைத் தடுப்பதற்கு இன்றியமையாதவை. பத்தாம் பசலித்தனமான பல்லவிகளைப் பாடி பிற்போக்குத் தனங்களை விதைத்தால், விதைப்பவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்க உதவுமே தவிர, அதிகரித்து வரும் பால்வினை நோய்களைத் தடுக்க நிச்சயம் உதவப் போவதில்லை.

தமிழ் பண்பாட்டைக் காட்டிப் பெண்கள் மீது மதவாத ஆதிக்கத்தையும் மரபு வழி மடமையையும் திணிப்பதற்கு, நமது தமிழ்தாய், பிரம்மா உருவாக்கிய சரஸ்வதியோ, சிவனார் கொண்டையில் செருகிக் கொண்ட கங்கா தேவியோ, ஆதாமின் விலா எலும்பில் இருந்து உருவான ஏவாளோ அல்ல. அவள் எத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களைத் தாண்டி மொழி ஆதிக்கங்களை எதிர் கொண்டு நமக்கு முகத்தையும் முகவரியையும் தந்தவள்.

No comments:

Post a Comment