Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 15

தீபாவளி

தீபாவளி வெறும் சமய விழா மட்டுமல்ல ஓர் இனத்தை இழிவு படுத்தும் விழா!

முன்னொரு காலத்தில், எந்தக் காலத்தில் என்று கேட்காதீர்கள் கி.மு. என்றோ கி.பி. என்றோ எதுவும் இல்லாத ஒரு விசித்திரமான காலத்தில் இரணியாட்சதன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பூமியைப் பாயாய்ச் சுருட்டி….. பூமிதான் உருண்டை வடிவமாய்ச்சே அதை எப்படி பாயாய் சுருட்ட முடியும் என்று கேட்காதீர்கள். அவன் ஏதோ சுருட்டிவிட்டான். சுருட்டிய பூமியை கடலுக்கு அடியில் கொண்டுபோய் ஒளித்து வைத்தான். பூமியில் கால் பகுதி நிலம் முக்கால் பகுதி நீர் இந்தப் புதுக் கடல் எங்கிருந்து வந்தது என்று கேட்காதீர்கள்.

உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று அசுரனைக் கொன்று பூமியை மூக்கின் மேலே வைத்து துக்கிக் கொண்டு வந்தார். அவர் முக்கின் மேலே வைத்து துக்கிக் கொண்டு வருவதற்கு பூமி என்ன முக்குத்தியா என்று கேட்காதீர்கள். உடனே தன்னைக் காப்பற்றிய பன்றி மேல் பூமிக்குக் காதல், விவகாரம் முற்றி அவர்களுக்கு பிள்ளையும் பிறந்து விட்டது. அவன்தான் நரகாசுரன். மகாவிஷ்ணுதான் தேவமகா குலத்தில் தோன்றிய புண்ணியவான் ஆயிற்றே அவருக்குப் பிறந்த நரகாசுரன் எப்படி அசுரன் ஆனான் என்று கேட்காதீர்கள். நரகாசுரன் கடும் தவம் இயற்றி தனது தாயைத் தவிர மற்ற எவரும் தன்னைக் கொல்ல முடியாது என்றொரு வரத்தை பிரம்மாவிடமிருந்து வாங்கி விட்டான். ஆதன் பின் அவன் தீய செயல்களின் ஈடுபடத் தொடங்கினான்;. அது என்ன தீய செயல்கள்?!

பிரம்மாவைப் போல் பரமசிவன் மனைவி பார்வதிமேல் ஆசைப் படவில்லை, இராமனைப் போல் தவம் செய்து கொண்டிருந்த சூத்திரனின் தலையை வெட்டவில்லை, இந்திரனைப்போல் பிறன் மனையாளை மயக்கி உறவு கொள்ளவில்லை அவன் செய்த தீங்கு இந்திரனையும் அவன் கூட்டத்தையும் பிடித்து சிறையில் அடைத்ததுதான். அப்போதும் அவன் இந்திரனின் மனைவி சசிதேவியையோ அல்லது பிற தேவ குலப் பெண்களின் மீதோ கை வைக்க வில்லை அங்கு அவன் தேவர் கூட்டத்தைப் போல் அல்லாது கண்ணியமாக நடந்து கொண்டதால்தான் அவனை அசுரர் கூட்டத்தில் சேர்த்தனரோ? என்னவோ

நரகாசுரன் செய்ததில் என்ன தவறு? நரகாசுரன் போன்ற வீரர்கள் இந்திரனைப் போன்ற கோழைகளை அடக்கியாள்வது அவாள்களின் சத்திரிய தர்மம்தானே! ஆனால் பெருந்தெய்வங்களான விஷ்ணுவும் சிவனும் இந்திரனைப் போன்ற புல்லர்களைக் காப்பாற்ற வீரர்களான அசுரர்களை அழித்தார்கள். நரகாசுரனும் இறுதியில் அழிக்கப்பட்டான் எப்படி? அவன் பெற்ற வரத்தின் படி அவனது தாய் பூமாதேவி கண்ணனின் மனைவி சத்தியபாமாவாக அவதரித்தபோது சத்தியபாமாவால் கொல்லப்பட்டான்.

நரகாசுரன் இறந்த நாளே தீபாவாளி அதை எல்லோரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என புராணப் புழுகர்கள் கதை கட்டிவிட்டனர்.

அறிவுக்கு பொருத்தமற்ற இந்தக் கதை ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் நரகாசுரன் யார்? புரணங்களில் அசுரர்கள் ராட்சதர்கள் அரக்கர்கள் எனப் பட்டம் கட்டிவிட்டவர்கள் வேறு யாருமில்லை பண்பாட்டுப் படை எடுப்பாளர்களான ஆரியர்களை எதிர் கொண்ட தமிழ் மன்னர்கள்தாம் தமிழ்க் கடல் மறைமலையடிகள் தனது வோளார் நாகரிகம் எனும் நூலில் வேள்வித்தியில் உயிர்களைப் பலியிட்டு வெறியாட்டம் ஆடிய ஆரியர்களை எதிர்த்த இராவணன் நரகாசுரன் போன்றவர்களே அரக்கர்களாகவும் இராட்சதர்களாகவும் சித்தரிக்கப் பட்டு இழிவு படுத்தப் பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், சோம சுந்தரப் பாரதியார் (சுப்பிரமணிய பாரதியார் அல்ல) போன்ற பல தமிழறிஞர்களும் தீபாவளி தமிழர்களை இழிவு படுத்தும் விழா எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தென் பகுதியில் வாழ்ந்தவர்களையே இராமாயணம் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் சித்தரித்திருக்கின்றது என்பதை தமிழரல்லாத விவேகானந்தரே குறிப்பிட்டுள்ளார். அப்போது ஈழத்தில் சிங்களமோ தென்னாட்டில் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளே தோன்றியிருக்கவில்லை அப்படியானால் அவர்கள் யார்? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்தானே

சமய விழாக்களை கொண்டாடுவது அவரவர் உரிமை இதை எதிர்ப்பதுதான் பகுத்தறிவா என பலர் நினைக்கலாம். உண்மைதான் சமய விழாக்களில் நம்மைப் போன்றவர்களுக் நம்பிக்கையற்று இருக்கலாம் அதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தீபாவளி வெறும் சமய விழா மட்டுமல்ல ஓர் இனத்தை இழிவு படுத்தும் விழா!

சற்று எண்ணிப் பாருங்கள் உலகில் எந்த இனமாவது தன் இனத்துக்காரன் அழிக்கப் பட்ட நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடக் கேள்விப் பட்டு இருக்கின்றோமா? ஆனால் நம்மவர்களோ நரகாசுரன் எனும் தமிழன் இறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பலர் ஒன்று கூடி மகிழ்வதற்கு விழா தேவை என்றால் நமக்கு தைப்போங்கல் இருக்கிறது. இயற்கையோடு இயைந்த விழா. வேறு திருநாட்கள் தேவையாயின் நாட்டிற்காவும் மொழிக்காகவும் தங்களை ஈர்ந்த பெருமக்களின் பிறந்த நாட்களை நாம் விழாவாகக் கொண்டாடலாம்.

தமிழனை இழிவு செய்யும் இந்த விழா நமக்கு எதற்கு?!

No comments:

Post a Comment