சாய்ந்த கோபுரங்கள்
சிறு வயதில் நம்மில் பலருக்கு பல விதமான கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் மனிதில் உருப் பெறுகின்றன. நாளடைவில் அந்தக் கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் எங்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி பலமான கோட்டைகளாகவும் கோபுரங்களாகவும் வலுப்பெற்று விடுகின்றன. அதே வாழ்க்கைப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கும் போது நம்மில் சிலரின் தேடலும் அந்த தேடலின் விளைவாக நாம் அறிந்து கொள்ளும் உண்மைகளும் நாங்கள் கட்டிய மனக்கோட்டைகளை தகர்த்து கோபுரங்களையும் சாய்த்து விடுகின்றன.
ஜேர்மன் நாட்டு தத்துவமேதை ஆர்தர் ஸ்கோபென்கார் உண்மை தொடர்பாக கூறிய வாரிகள் நினைவுக்கு வருகின்றன. உண்மை முன்று நிலைகளைக் கடக்கிறது. முதலில் அது நகைப்புக்கிடமாகவும் அடுத்து அது மிகத் தீவிரமான எதிர்ப்புக்குள்ளாகும் விதமாகவும் இறுதியில் தெளிந்த மனதுடன் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைகிறது. நம்மில் பலருக்கோ உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதில்லை. காரணம் உண்மை என்றும் கசப்பானது. இருப்பினும் உண்மை உண்மைதான். சிறு வயதில் என் மனதில் ஆழமாகப் பதிந்து கோபுரமாக உயர்ந்து நின்றவைகள், பின்னர் உண்மைகளை அறிந்து தெளிந்தவுடன் மண்ணோடு சாய்ந்து விட்டன. அவற்றைத் தொடராக பதிவு செய்கிறேன்.
இந்தியா
பாரத நாடு பழம் பெரும் நாடு - சிறு வயதில் இந்தியாவை இப்படித்தான் என் மனதில் வரித்துக் கொண்டேன். சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த புராணக் கதைகளும் இதிகாசக் கதைகளும் அப்படி ஒரு எண்ணத்தை என் மனதில் வரித்து விட்டிருந்தன. தருமன் பிறந்த மண், கண்ணன் அவதரித்த இடம், அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாழ்ந்த புண்ணிய பூமி என்றெல்லாம் இந்தியாவைப் பற்றி ஒரு மாபெரும் கோபுரத்தை என் மனதில் எழுப்பியிருந்தேன். அந்தப் புண்ணிய பூமியில் நான் கால் வைக்கவேண்டும் என்ற ஆசை அந்தச் சின்னஞ் சிறு வயதில் எனக்குள் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை. வெகு விரைவில் எனது ஆசை நிறைவேறியது அதுவும் எப்படி?
1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்தது. நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் எனது குடும்பத்தாருடன் ஓர் அகதிச் சிறுவனாக அந்த நாட்டில் காலடி வைத்தேன். தற்போது இருக்கும் தமிழீழப் பற்றும் தமிழ்த் தேசிய உணர்வும் அந்தச் சின்னஞ் சிறு வயதில் எனக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பாரத தேசத்துப் புண்ணியக் கதைகள் இந்திய மயக்கத்தை மிக அதிகமாக என்னுள் ஏற்படுத்தியிருந்தன. அதே மண்ணில் நான் என் கல்வியைத் தொடரத் தொடங்கியபோது அந்த மயக்கம் இன்னும் அதிகமாகியது. வரலாற்றுப் பட நூல்களிலும் இதிகாசக் கதைகள் இடம்பெற்றிருந்தன. தனியார் பாடசாலைகளிலோ சத்துணவுக்குப் பதிலாக ஊட்டப் பட்டது இந்த இந்திய உணர்வுதான். 1993 இல் இந்தியாவை விட்டு பிரான்ஸ் வரும்போது எனது தாய் நாடான தமிழீழத்தை விட்டு பிரியும் போது ஏற்படாத வலியும் வேதனையும் ஏற்பட்டன. பிரான்சிலும் எனது மயக்கம் தொடர்ந்தது. அந்த வயதில் பலருக்கு ஏற்படும் திரைப்பட மயக்கமும் சேர்ந்து கொண்டது. அப்போது வெளிவந்த ஐ லவ் இந்தியா, ஜெய்ஹிந்த் போன்ற திரைப் படங்கள் எனது இந்திய மயக்கத்தை மேலும் அதிகரிக்க வைத்தன.
ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் எனது இந்தியக் கோபுரம் சரியத் தொடங்கியது. எப்படி?
இந்திய வரலாற்றின்பால் ஏற்பட்ட ஆர்வமிகுதியினால் அது தொடர்பான நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு மிகப் பெரிய வரலாற்று உண்மையை என்னால் உணர முடிந்தது. பண்டைய காலத்தில் கலிங்க நாடு, அங்க நாடு, மகத நாடு, என்று தனித் தனி நாடுகள் இருந்ததே தவிர இந்தியா என்ற பெயரில் இருக்கவில்லை. சந்திரகுப்தன் காலத்தில் மௌரியப் பேரரசு உருவானபோதும் சரி பாபர் காலத்தில் மொகாலயப் பேரரசு உருவானபோதும் சரி இந்தியா என்றொரு நாடு ஒரு கொடியின் கீழ் என்றைக்குமே இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான பூகோளக் கட்டமைப்புத்தான் இந்தியா. அதற்குமுன் இந்தியா என்றொரு நாடு வரலாற்றில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. என்ற வரலாற்று உண்மையை அறிந்து கொண்டேன். பாரத நாடு பழம் பெரும் நாடு என்ற கருத்து சுக்கு நூறாக நொருங்கி விட்டது.
1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்திய உணர்வுக்கு தீனி போடும் விதாமாக தமிழக இதழ்களும் செய்தித்தாழ்களும் செய்திகளை விதைத்துக் கொண்டிருந்தன. அப்போது நந்தன் இதழில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கார்கில் போரும் கச்ச தீவும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். கார்கிலை விட்டுக் கொடுக்காத இந்திய அரசு கச்ச தீவை சிங்கள அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது தமிழன் சொத்து அவ்வளவு இளக்காரமா என அவர் எழுப்பிய கேள்வி என்னை வேறு கோணத்தில் சிந்திக் வைத்தது. அந்தக் கட்டுரையில் இந்தியத் தேசியத்தின் போலித்தனத்தை பேரசிரியர் தோலுரித்திருந்தார். கூடவே என்னுள் ஏற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வு ஈழப் போராட்டம் தொடர்பான வரலாற்று நூல்களின்பால் எனது பார்வையைத் திருப்பியது. சிங்களப் படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு தமிழீழ மண்ணில் இந்தியப் படைகள் நடத்திய வேட்டைகளை அறிந்தபோது இரத்தம் கொதித்தது.
அனிதா பிரதாப், ராஜினி திரணகம போன்றவர்களின் அனுபவப் பதிவுகளை படித்தபோது இந்தியா மீது நான் வைத்திருந்த கருத்து தலைகீழாக மாற்றம் பெற்றது. அது மட்டுமல்ல ஈழத்தில் நடத்தியது போன்று தங்கள் சொந்த மாநிலங்களாக இந்தியா கருதிக் கொள்ளும் அஸ்ஸாம் நாகலாந்து கஷ்மீர் போன்ற இடங்களில் இந்தியப் படைகள் நடந்து கொண்ட விதத்தையும் அந்த மக்கள் மீது திணிக்கப் படும் அடக்கு முறைகளையும் அறிய நேர்ந்த போது இந்தியா என்பதே தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்பதுடன் தேசிய இன விடுதலைக்கு எதிரான வல்லாதிக்க அரசே என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.
சிறு வயதில் நான் எழுப்பிய அந்தக் கோபுரம் சாய்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாக மாறியது.
Subscribe to:
Post Comments (Atom)

very interesting article! ur way of conducting the article is simply superb!
ReplyDelete//காரணம் உண்மை என்றும் கசப்பானது// என்றதுடன் நான் உடன்படவில்லை, உண்மை பல வேளைகளில் புரிந்து கொள்ளப்பட கடினமானவை என்பது எப்போதும் கசப்பானது என்பதை விட பொருந்தக்கூடியது!
எனக்கும் இதே போன்ற காரணங்களால் இந்தியாவில் ஒரு தனி விருப்பம்!
ஒரு முதுமொழி> தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்! என்பர்.
தானமே தனக்கு மிஞ்சித்தான் என்றால் சுதந்திரம் எந்த மட்டில்? அவர்கள் தன் மாநிலங்களிற்கோ ஊர்களிற்கோ முன்னுரிமை கொடுத்து போராடியது தவறாக எனக்கு தோன்றவில்லை, பிறந்த மண்(ஊர்)பிறந்த நாட்டை விட அதிகம் உணர்வுபூர்வமாக தொடர்புடையது. இல்லாவிடின் எங்கள் அறிவை கொஞ்சம் விரித்து நாம் பிறந்த உலகம் என்றே பார்க்கலாம் அல்லவா? பிரபஞ்சத்தின் எத்தனையோ அதிசயமான பூமி கிரகம் முதலில், பிறகுதான் நாடோ, ஊரோ என்று! (உண்மையில் அப்படி ஒவ்வொரு மனிதனும் பார்க்க தொடங்கினால் உலகின் பொற்காலம், நடைமுறையில் சாத்தியகூறு குறைவானது) எனவே இவர்கள் தம் ஊர் என்று போராடியதற்காய் தெசப்பற்று அற்றவர்கள் என்று சொல்லமுடியாது என்று நான் கருதுகிறேன்.
Thanks Lavanya
ReplyDeleteஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து போராடிய போது, அவர்களுக்கு ஏற்பட்ட, இந்திய உணர்வை நான் குறைத்து மதிப்பிடவில்லை! அந்த உணர்வு சரியானது! இப்போது நிலைமை அப்படி அல்ல! பிற இனங்களை மிக மோசமாக அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவாமாகவே அது இருக்கிறது! செப்பு மொழி 18 இருந்தால் சிந்தனை எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும் என்று விழித்துக் கொண்ட தமிழன் கேட்கும் கேள்விக்கு நாம் பாரதியைப் பொறுப்பாக்க முடியுமா!
சுவிஸ் நாட்டு அரசியலமைப்பு உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும். அதுதான் உண்மையான சுயாட்சி! இவர்கள் விரும்புவது United இந்தியகூட அல்ல ஒரு Uniform இந்தியா!
1956 ஆம் ஆண்டு தட்சிணா பிரதேசம் என்றொரு திட்டத்தைக் கொண்டுவந்து தமிழ் நாட்டின் இருப்பையே அழிக்க நினைத்தவர்கள்! ஆம் உண்மை! பெரியார், அண்ணா போன்றவர்கள் களம் இறங்கிப் போராடியதால் தமிழ் நாடு பிழைத்தது!
உண்மையான சுயாட்சித் தத்துவத்தைக் கடைப்பிடித்து ஒரு ஐக்கிய இந்திய ஒன்றியமாக அது இருந்திருந்தால் நம்மைப் போன்றவர்கள் இந்தியாவை நேசித்திருப்போம்! இல்லாத படியால் எதிர்க்கின்றோம்!