திராவிடம்
திராவிடம் எனும் கோபுரம் சாய்ந்து விட்டது ஆனால் பெரியார் என்ற கோபுரம் சாயவில்லை இன்னும் என் மனதில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
பெரியாராலும் அண்ணாவாலும் கைவிடப்பட்ட தேசியம்தான் திராவிடத் தேசியம்.
தமிழ் நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமல்ல ஈழத் தமிழர்களிடமும் திராவிடம் தொடர்பான மயக்கம் இருந்து வருகிறது. தங்கள் எழுத்துக்களில் தமிழர்களைக் குறிக்கும் இடங்களில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். திராவிடம் எனும் சொல் தமிழ்ச் சொல் அல்ல. தமிழைக் குறிக்க பயன் பட்ட வடமொழிச் சொல்லே அது. இது பற்றிய உண்மைகளை அறிய முன்பு திராவிடத்தின் மீது எனக்கு ஒரு மிகப் பெரிய மயக்கம் இருந்தது. திராவிட இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களாக விளங்கிய பெரியார் மீதும் அண்ணா மீதும் ஏற்பட்ட ஈடுபாட்டால் அவர்கள் பேசிய பகுத்தறிவு, பெண் விடுதலை, சமூக நீதி போன்றவற்றின் பாதிப்பால் அவர்களின் அரசியல் வெளிப்பாடான திராவிடமும் என்னைக் கவர்ந்து கொண்டது.
பொதுவாக தமிழ்ச் சொல் வடமொழியில் திரிவாகும் போது உயிர்மெய்எழுத்து மெய்எழுத்தாக நின்று அதனுடன் ‘ர’ எனும் எழுத்து சேர்ந்து கொள்ளும் எடுத்துக் காட்டாக
பயணம் என்ற தமிழ்ச் சொல்லில் ‘ப’ என்ற உயிர் மெய் எழுத்து ப் என்ற மெய் எழுத்தாக நின்று அதனுடன் ர சேர்ந்து ப்ரயாணம் ஆகி பின் தமிழ் உச்சரிப்புககு ஏற்றவாறு பிரயாணம் என திரிபுற்றது. மதங்கம் மிருதங்கம் ஆனதும், பவளம் பிரவாளம் ஆனதும் இவ்வாறே. இதன் முறையே தமிழ் என்ற சொல் த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம் என்று திரிவடைந்து பின்னர் திராவிடம் ஆனது. ஆம் தமிழர்களைக் குறிக்க ஆரியர்கள் பயன் படுத்திய சொல்லே திராவிடர் என்பதாகும். உண்மை இவ்வாறு இருக்க இடைப் பட்ட காலத்தில் இதற்கு வேறு ஒரு பொருள் கற்பிக்கப் பட்டது. ஆரியக் கலப்பால் தமிழிலிருந்து திரிபுற்ற தெலுங்கு, கன்னடம், மலையளம் போன்ற மொழிகளைப் பேசுவோர் திராவிடர் என்ற வட்டத்திற்குள் கொண்டு வரப் பட்டனர்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comperative Grammer of Dravidian Languages) என்ற ஆங்கில நூலை எழுதிய கால்டுவெல் என்பவரிடம் இருந்தே மேற்குறிப்பிட்ட கருத்து முதன்முதலாகத் தோற்றம் பெறுகிறது. அறிஞர் கால்டுவெல் அவர்கள் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் தமிழின் பெருமையை உலகறிய வைத்தது என்பதை மறுக்க முடியாது. அது வரைக்கும் சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ் இயங்க முடியாது என இடைத் தரகர்களான ஆரியப் பார்ப்பனர்கள் கட்டி விட்ட கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது கால்டுவேல் அவர்களின் ஆய்வுதான். தமிழ் தனித்து இயங்கும் வல்லமை பெற்ற உயர் தனிச் செம்மொழி என அவரது ஆய்வு முழுமையாக ஒப்புக் கொண்டது. அதேசமயம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு ஒரு குறியீடு தேவையாயின் அதை திராவிடம் என வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இவரது கருத்தை பின்னாளில் திராவிட இயக்கம் தனது அரசியல் தேவைக்காக பயன் படுத்திக் கொண்டது.
இந்த இடத்தில் இன்னுமொன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழர்களிடமிருந்து திராவிட மயக்கம் விடுபடவேண்டும் என்பது நியயாமானதுதான் ஆனால் திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் தந்தை பெரியாரைக் கொச்சைப் படுத்தும் செயல்கள் ஒரு சில தமிழ்த் தேசியவாதிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. பெரியார் தமிழ்த் தேசியம் பேசாமல் எதற்காக திராவிடம் பேசினார் என அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. சாதியம், மதவாதம், இந்திய வல்லாதிக்கம் போன்றவற்றை விட்டு விட்டு திராவிடத்தை எதிர்ப்பது சீறி வரும் பாம்புகளை அலட்சியம் செய்து விட்டு செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பாகும். ஆம் திராவிடத்தேசியம் என்றைக்கோ காலவதியாகிவிட்டது. இன்று பெயரளவில் திராவிடத்தைக் கொண்டிருக்கும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் கூட ஈழத்தமிழர் ஆதரவு காவிரி தொடர்பான கர்நாடக எதிர்ப்பு நிலை என தமிழ்த்தேசியத்தையே தங்கள் தளமாக கொண்டிருக்கின்றன.
பெரியாரும் அண்ணாவும் திராவிடத் தேசியம் பேசியது தவறு என்றால் தமிழ் பற்றாளர்களான வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்றவர்கள் தமிழ்த் தேசியம் பேசமல் இந்தியத் தேசியம் பேசியதையும் மாபெரும் தவறாகவே கருதவேண்டும். உண்மையில் அப்படி ஒரு குற்றச் சாட்டை இன்றைய காலத்தில் இருந்து கொண்டு அவர்களின் மேல் சுமத்த முடியாது. செப்பு மொழி பதினெட்டு இருந்தால் சிந்தனை எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும்?! என்று விழித்துக் கொண்ட தமிழன் கேட்கும் கேள்விக்கு நாம் பாரதியைப் பொறுப்பாக்க முடியாது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை விரட்ட அனைத்து மக்களையும் ஒன்று திரட்டும் நோக்கோடு போராடிய காலத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட இந்திய உணர்வை நாம் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பின் குரலாக இந்தியத் தேசியம் இல்லை. அதுவே தேசிய இனங்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஏகாதிபத்திய வடிவமாகவே மாறியுள்ளது.
அதைப்போலவே வடவர்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள திராவிடம் என்ற சொல்லை பெரியார் அண்ணா போன்றவர்கள் பயன் படுத்தினார்கள். 1925 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறிய தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களின் சமூக விடிவுக்காக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அன்றைய காலத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்காக தென் இந்திய நலவுரிமைச் சங்கம் என்ற ஓர் அமைப்பு இயங்கிவந்து. ‘ஜஸ்டிஸ்’ (வுhந துரளவiஉந) என்ற ஆங்கில நாளிதழை வெளியிட்டு வந்ததால் ‘ஜஸ்டிஸ் பார்டி’ (தமிழில் நீதிக் கட்சி) என அழைக்கப் பட்டது. 1938 ஆம் ஆண்டு பெரியார் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் தனது சுயமரியாதை இயக்கத்தை நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. இவ்வாறுதான் திராவிட இயக்கம் உருப்பெற்றது.
1938 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற விடுதலைக் குரல் பெரியாரால் எழுப்பப் படுகிறது. திராவிட நாடு திராவிடருக்கே என்று எழுப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின் 1940 இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநாட்டின் போது திராவிட நாடு திராவிடருக்கே என மாற்றப் படுகிறது.
தமிழ் நாட்டை திராவிட நாடு என பெரியார் ஏன் மாற்றினார்? இது தமிழர்களை ஏமாற்றிய செயல் அல்லவா என கேள்வி எழலாம். அப்போது தமிழ் நாட்டுடன் ஆந்திராவின் பெரும் பகுதியும், கன்னடம் கேரளம் அகியவற்றின் சில பகுதிகளுமாகச் சேர்ந்து சென்னைத் தலைமாகாணம் என அழைக்கப் பட்டது. அதையேதான் பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே என்றார். பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே என்றவுடன் அவரோடு இருந்த தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் தமது மாற்றுக் கருத்தைத் தெரிவித்தனர். குறிப்பாக தெலுங்கர்களின் ஆதிக்கம் நீதிக்கட்சியில் அதிகமாக இருந்தது. தெலுங்கர்கள் தமிழர்கள் அல்ல. ஆனால் திராவிடர் என்ற அறிஞர் கால்டுவேல் கருத்தின் படி அவர்கள் அதில் அடங்கிவிடுவார்கள். அதன் பின்தான் பெயர் மாற்றப் படுகிறது. ஆனால் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாகி சென்னைத் தலைமாகாணத்திலிருந்து ஆந்திரம், கன்னடம், கேரளம் போன்றவைகள் வெளியேறியவுடன் தனித்து நின்ற தமிழ்ப் பகுதிகளுக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று பெரியார் கோரிக்கை விடுக்கிறார். அது வரைக்கும் திராவிட நாடு கோரிய பெரியார் அன்றிலிருந்து அதைத் தூக்கிப் போட்டு விட்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். தனது விடுதலை நாளேட்டில் தங்கள் கட்சியின் கொள்கை முழக்கமாக இருந்த திராவிட நாடு திராவிடருக்கே என்ற பதத்தை மாற்றி தமிழ் நாடு தமிழருக்கே என்று எழுதினார். இறுதிவரைக்கும் அதிலிருந்து அவர் விலகவில்லை.
சென்னையை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள தெலுங்கர்கள் எடுத்த முடிவை கண்டித்து பெரியார் 07-01-1953 அன்று வெளியாகிய விடுதலை நாளேட்டில் பின்வருமாறு எழுதுகிறார்.
“ஆந்திரர்களுக்கு இந்த விஷயங்களில் பொறுப்புள்ளதும், குறிப்பிட்டதுமான ஒரு யோசனையோ, இலட்சியமோ இல்லை என்பதாகவே தெரிய வருகிறது. ஆந்திராவின் தலைநகரம் சென்னையில் எதற்காக இருக்க வேண்டும்? இப்போது ஆந்திர நாடு அமைப்பு என்கிற பிரச்சினை ஒரு விடுதலைப் பிரச்சினையேயொழிய, பாகப் பிரச்சினை அல்ல. எப்படியெனில், சென்னை ராஜ்யம் 4 மொழிவாரிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நான்கில் ஒன்றுதான் ஆந்திரா. இப்பொழுது ஆந்திரா தான் மற்ற மூன்றையும் விட்டு விலகிக் கொள்கிறது. ஆகவே, இந்த விலகிக் கொள்ளுதல், சென்னை ராஜ்யத்திலிருந்து விடுதலை பெறுதல் என்பது அர்த்தமாகும்.
விடுதலை செய்து கொண்டு போகிறவர்கள், விடுதலை செய்து கொண்டு போக வேண்டுமே தவிர, மறுபடியும் ஒன்றாக இருக்க வசதி கேட்பது பொருத்தமற்ற காரியமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பிடிக்காமல், ஒருவர் வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டு, அதே அடுப்பிலே நானும் சமையல் செய்துகொள்ளுகிறேன் என்றால் அது கலகத்துக்கு வசதி செய்வதாகுமே தவிர - வாழ்க்கைக்கு வசதியாகாது. அன்றியும், ஒரு ராஜ்யத்திற்குள்ளாக இன்னொரு ராஜ்யத்தின் தலைநகரம் இருப்பது நிர்வாகத் துறையில் நிர்வாகக் குறைவும், ராஜதந்திரக் குறைபாடும் ஏற்படும்.
அதுபோலவே, பொது கவர்னர், பொது அய்க்கோர்ட் இருப்பது என்பதும் அரசியல் சட்டப்படி அனுமதிக்க முடியாததாகும். வேறு வழியில் அனுமதி ஏற்படுத்திக் கொள்ளுவதானாலும் வீண் போட்டிக்கும், நிர்வாகக் கேட்டுக்கும் இடமாகும். சில நாளைக்காவது சர்க்கார் நிர்வாகக் காரியாலயம் சென்னையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதும் அர்த்தமற்றதேயாகும். இவைகளை யெல்லாம் ஒன்றாகவோ - ஒன்றிலேயோ இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் எதற்காகப் பிரிய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் தொல்லை ஏற்படும்படி செய்ய வேண்டும் அல்லது, தந்திரமான வழியில் ஆக்கிரமிப்புச் செய்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, வேறு உண்மையான எண்ணம் ஒன்றும் இருக்க முடியாது என்பதுதான் எனது கருத்து.”
பெரியார் பார்ப்பனர்களை மட்டுமல்ல தமிழனுக்கு எதிராகா செயல்பட்ட தெலுங்கர்கள் மலையாளிகள் கன்னடர்களையும் எதிர்த்திருக்கிறார்.
1960 ஆம் ஆண்டு இந்திய வரை படத்தை பெரியார் தீயிட்டுக் கொளுத்தும்போது தமிழ் நாடு நீங்கலான வரைபடத்தையே கொளுத்தினார். ஆந்திராவும் கன்னடமும் கேரளாவும் அதில் அடங்கியிருந்தன.
தான் இறப்பதற்கு முன் அவர் பேசிய இறுதி உரையின்போது, என் தமிழனுக்கு என்னால் விடுதலையை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என அவர் வேதனையால் முனகியது தமிழ் நாட்டு விடுதலை தொடர்பான அவரது வேட்கையையே வெளிக்காட்டி நிற்கிறது. பெரியாரின் விடுதலை முழக்கமானது தமிழ் நாடு எனத் தொடங்கி பின் திராவிட நாடு என மாறி அதன் பின் இறுதியில் தமிழ் நாடு என்றே முடிகிறது.
பெரியாரை விட்டு அண்ணா வெளியேறிய பின் அண்ண முன்வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கை என்பது வேறு. தனது பிரிவினைக் கொள்கையை அண்ணா இவ்வாறு விளக்குகிறார் :
“தமிழர், தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூற வந்த போது, தமிழர் என்றால் தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம். வெறும் மொழி மட்டுமல்ல தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்பதை விளக்கி வந்தோம். தமிழ்நாடு தமிழருக்கே என்றபோது பொருளாதாரம் என்ற துறைகளிலே முறையே, ஆரியர், வெள்ளையர் வடநாட்டார் என்பவர்களால் பாழாக்கப் படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி இந்த நிலை மாறினால் மட்டுமே தமிழ் நாடு வளமாக வாழ முடியும். இதற்கு தமிழ் நாடு தனி அரசுரிமை பெற வேண்டும் என்பதையும் விளக்கினோம்.
தமிழர் தனி இனம், தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள் என்பதை மேலும் ஆராயும்போது, ஆந்திரரும் கேரளரும் இதேபோன்ற நிலை கொண்டவர்களே, இவர்களும் ஆரியத்துக்குப் பலியானவர்கள். வடநாட்டுப் பொருளாதாரத்துக்குப் பலியானவர்கள் என்பதையும் எடுத்துக் காட்டி அவர்களும் தங்கள் நாட்டை, பார்ப்பனியர் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்றும் கூறினோம். கூறினதோடு கூட்டு முயற்சி செய்ய வேண்டும் என்றோம். கூட்டு ஆட்சி நடத்தலாம் என்றோம்.”
அண்ணாவின் கோட்பாடானது தமிழ் நாடு டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடையே வேண்டும். அதைப்போலவே ஆந்திரம் கன்னடம், கேரளம் போன்றவைகளும் விடுதலையடையவேண்டும் இவை நான்கும் சேர்ந்து தங்களுக்குள் ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இதைத்தான் அண்ணா திராவிட நாடு என்றார். அண்ணாவின் திராவிட நாட்டிற்குள் தமிழ் நாடு தனது இருப்பை இழக்கவில்லை நான்கு தேசியங்களுக்குள் அதுவும் ஒரு தேசியமாக, டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற தேசியமாக இருப்பதை மறுக்க முடியாது.
தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த தேவிகுளம் பீர்மேடு என்கிற தாலுகாப் பகுதிகளை மலையாளிகள் அபகரித்தபோது குளமாவது மேடாவது எல்லாம் நம்ம இந்தியாவிக்குள்ளதானே வருகிறது என இந்தியத்தேசியம் பேசிய தமிழர்களைப்போல் நம்ம திராவிடத்திற்குள்தானே வருகிறது என்று அண்ணா அலட்சியமாக இருந்து விடவில்லை. களமிறங்கிப் போராடினார்.
இந்தியத் தேசியம் பேசிய சில தமிழ்த் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தை இந்தியத் தேசியத்திற்குள் அடகு வைத்தது போல் பெரியாரோ அண்ணாவோ தமிழ்த் தேசியத்தை திராவிடத்திற்குள் அடகு வைக்க வில்லை.
அக்காலங்களில் பெரியாரின் விடுதலை நாளேட்டிற்கு அண்ணா தலையங்கங்கள் எழுதும்போது தமிழ்நாடு தமிழருக்கே என எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் திராவிட நாடு திராவிடருக்கே என்று எழுதுவார். ஆரியத்திற்கு எதிரான ஒரு வலுவான ஆயுதமாகவே பெரியார் அண்ணா போன்றவர்கள் திராவிடத்தை உயர்த்திப் பிடித்தார்கள். அரசியல் தளத்தில் அண்ணா திராவிடம் என்ற சொல்லை பயன் படுத்தியிருந்தாலும் கலை இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் அவர் முன்வைத்த தமிழ்த் தேசிய கருத்துக்கள் போற்றுதலுக்குரியது. வட நாhட்டாரின் புராண இதிகாசக் கதைகளை நாடாகமாக வெளிக் கொணர்ந்த அன்றைய காலத்தில் தனது ‘ரங்கூன் ராதா’ போன்ற நாடகங்கள் வழியாக பாதிக்கப் பட்ட தமிழர்களின் அவல வாழ்க்கையை வெளிக் கொணர்ந்தவர் அண்ணா. தமிழ்ப் புலவர்களின் வீடுகளில் மட்டும் முடங்கிக் கிடந்த திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் பாமரத் தமிழனின் பள்ளியறை வரைக்கும் கொண்டு சென்றது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை மறுக்க முடியாது. மகாபாரதத்தின் கதையில் இலயித்துக் கிடந்த தமிழனிடம் மணிமேகலையின் சிறப்பை புரிய வைத்தவர்கள் அன்றைய தி.மு. கழகத்தினர்தான். இராமனின் பெருமைகளையும் அருச்சுனனின் வீர தீரங்களையும் பேசி வந்த தமிழர்களிடம் சேரன் கணைக்கால் இரும்பொறை, சேரன் செங்குட்டுவன், கரிகால் பெருவளத்தான், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்ற புறநானுற்றுத் தமிழர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பேசி எது தமிழனின் வீரம் என புரிய வைத்தவர்களும் அவர்கள்தான்.
1956 ஆம் ஆண்டு இந்தியத் தலைமை அமைச்சர் நேரு அவர்களால் தட்சிணப் பிரதேசம் என்றொரு திட்டம் கொண்டு வரப் பட்டது. தமிழ் நாடு மற்று கன்னடம் கேரளம் போன்றவற்றை உள்ளடக்கி ஒரு பிரதேசமாக மாற்றுவதுதான் நேருவின் திட்டம். மேலோட்டமாகப் பார்த்தால் பெரியார் அண்ணா போன்றவர்கள் முன்வைத்த திராவிட நாடு போன்றே இதுவும் தோற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்திற்கு பெரியார் அண்ணா போன்றவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப் கிளம்புகிறது. தட்சிணப் பிரதேசம் என்பது தமிழர்களுக்கு தற்கொலைக்குச் சமம் என பெரியார் வெகுண்டார் பெருமளவில் போராட்டம் வெடித்தது. இறுதியில் திட்டம் கைவிடப் பட்டது. உண்மையில் தமிழ் நாட்டுடன் ஆந்திரம் கேரளம் போன்ற பகுதிகளை இணைக்கும் ஒன்றுதான் திராவிடம் என்றால் பெரியரோ அண்ணாவோ இதை எதிர்த்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. தட்சிணப் பிரேதேசத்தில் தமிழ்த் தேசியம் தன்னுடைய இருப்பை இழக்கிறது. திராவிட நாட்டில் தமிழ் நாடும் ஒரு தேசமாக விளங்குகிறது. எனவே பெரியாரோ அண்ணாவோ திராவிடம் பேசி தமிழர்களை ஏய்த்தனர் என்ற குற்றச் சாட்டில் உண்மை இல்லை. இருப்பினும் திராவிடத் தேசியம் தமிழ்த் தேசியத்தின் தேவையால் காலவதியாகிவிட்டது. ஆம் பெரியாராலேயே கைவிடப் பட்ட தேசியம்தான் திராவிடத் தேசியம். பேராசிரியர் சுபவீ அவர்கள் குறிப்பிடுவதைப் போல் திராவிடத் தேசியம் மறைந்து தமிழ்த் தேசியம் முகிழ்ந்தது வளர்ச்சியை நோக்கிய பாதையே!
எனவே திராவிடம் என்பது தமிழர்களைக் குறிக்கும் வடசொல்லேயன்றி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் தமிழரோடு சேர்த்துக் குறிக்கும் சொல் அல்ல. திரிபுற்ற அந்தச் சொல்லை பயன் படுத்தாமல் தமிழ் தமிழர் என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்தது.
சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்தவர்கள் திராவிடர்கள் என்று குறிப்பிடுவதை விட அதை அமைத்தவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுவதுதானே தமிழர்களுக்குச் சிறப்பானது.
இடைப் பட்ட காலத்தில் என் மனதில் உருவாகிய திராவிடம் என்ற கோபுரமும் சாய்ந்து விட்டது. ஆனால் பெரியார் என்ற கோபுரம் சாயவில்லை இன்றும் என் மனதில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

திராவிடம் என்ற கோபுரமும் என்றோ சாய்ந்து விட்டது. ஆனால் பெரியார் என்ற கோபுரம் சாயவில்லை இன்றும் ௨ன் மனதில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது என்றால் அது ௨௨னது மனபிரமை.
ReplyDelete