Tuesday, 6 April 2010

சாய்ந்த கோபுரங்கள் 19

சைவமும் தமிழும்

"எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைகொண்டு ஆராய்வோம், கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழையிருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான்... பெரியபுராணத்தில் கூறப்படும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளதுதான் எனக்கூறினால் சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்பந்தம்முண்டென்று கூறுவதைத் தவிர வேறென்ன செய்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம் திருத்தவேண்டியதுதான். சைவத்திலும் அப்படியேதான்" - - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்

அப்போது எனக்கு சுமார் ஏழு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். சைவ சமயப் பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை விரும்பிப் படிப்பது வழக்கம். அதுவும் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு முன் அவற்றைப் படித்துக் கட்டுவதில் சற்று கூடுதல் விருப்பம். ஏனெனில் பாடப் புத்தகங்களில் இல்லாத சைவம் தொடர்பான மேலதிகக் கதைகளை அவர்கள் சுவைபடச் சொல்லுவார்கள். ஒரு நாள் வீட்டிலிருந்த எனது உறவினர் ஒருவரிடம் அவ்வாறு படித்துக்காட்டிக் கொண்டிருந்தேன். அவரும் சைவத்தைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் சைவ சமயம் நல்ல சமயம் என்றால் கெட்ட சமயம் எது தாத்தா என கேட்டேன். அவர் சமணம் என பதிலளித்தார். அவரது பதில் அந்த வயதில் எனக்குள் எந்த விதமான மாற்றுக் கருத்தையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இன்று அவர் போன்றவர்களால் தூற்றப் பட்ட சமணம் எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளை தமிழர்களுக்கு கற்பித்திருக்கிறது என்பதனை நினைத்துப் பார்க்கிறேன்.

நம்மில் பலர் பக்தி, சமயநம்பிக்கை போன்ற வட்டத்திற்குள் வாழ்பவர்கள். பக்தியும் சமயநம்பிக்கையம் உணர்ச்சியின் பாற்பட்டவை. அதன் விளைவாக தன் சமயமே சிறந்தது என்ற கருத்தும் அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்களின் சமய நூல்களில் கூறப்பட்டவைகளை எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அனைத்து சமயத்தினருக்கும் இது பொருந்தும். சமய நூல்கள் மீது விமர்சனங்களை வைத்தால் சீறி விழுவார்கள். அந்த அடிப்படைவாதம்தான் சகிப்புத்தன்மையற்ற வெறியாக ஒரு சிலருக்கு மாறுகிறது. இந்த வட்டத்திற்குள்ளிருந்து விடுபட்டு சமயச் சார்பு அற்று, அறிவுத் தளத்திலிருந்து நாம் சமயங்களை ஆராய்ந்தால் பல உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியும். நாம் தழுவியிருக்கும் சமயங்களில் உள்ள குறைபாடுகளும் நமக்கு புரியும். அப்படி ஒரு தளத்திலிருந்து தமிழர் தழுவிய சமயங்களை ஆராய்ந்த போதுதான் ஒர் உண்மையைத் தெரிந்து கொண்டேன்.

சைவமும் தமிழும் என்றும் சைவம்தான் தமிழை வளர்த்தது என்றும் நம்மில் பலர் பெருமையாக முழங்குகின்றனர். தமிழின் இனிமையை மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சைவப் புலவர்கள் தங்கள் பாடல்களில் உணர்த்தியிருக்கின்றனர் என்பது உண்மைதான் ஆனால் அவர்களின் நோக்கம் சைவத்தை உயர்த்தும் பொருட்டு இருந்ததேயன்றி தமிழை உயர்த்தும் பொருட்டு அல்ல. உண்மையில் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியச் சிறப்பிற்கும் இலக்கணச் செழுமைக்கும் சமணத்துறவிகள் ஆற்றிய பங்கு அளப் பெரியது. சமணர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பிற்குக் காரணம் அவைகள் சைவ இலக்கியங்கள் போன்று தனிப்பட்ட சமய உயர்வை வெளிக்காட்டமால் மொழி நலன், சமூக நலன் போன்றவற்றை வெளிக்காட்டி நிற்பதேயாகும். சமணம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளுக்கு முன் தமிழர்களின் சமயம் எது என்பதைப் பார்ப்போம்.

இதுதான் தமிழர்களின் சமயம் என்று நாம் எதனையும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கால கட்டத்திலிலும் அவர்கள் ஒவ்வொன்றை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கடவுள் மனிதனைப் படைத்தானா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இத்தனையாயிரம் கடவுள்களையும் மனிதன்தான் படைத்தான் என்பதை மறுக்க முடியாது. தாங்கள் வாழ்ந்த மரபு, நாகரிகம், பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்களின் கடவுள்களும் இருந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொண்டால்; அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்ததால் பெண்தெய்வ வழிபாடே முதன்மை வகித்தது. தமிழர்களின் மிகத் தொன்மையான வழிபாடாக நாம் இதைக் கருதலாம். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இதையே கொற்றவை எனக் குறிப்பிடுகின்றன. இன்று நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் நூல்களில் மிகவும் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முருகன், கொற்றவை, திருமால், ஞாயிறு போன்ற தெய்வங்களை தமிழர் வழிபட்டனர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

உண்மை என்னவென்றால் அதில் சிவ வழிபாடு எந்த இடத்திலும் இல்லை. தொல்காப்பியத்தில் உள்ள "சேயோன் மேய மைவரை உலக" என்ற வரியில் வரும் சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் அந்த வரி சிவனைக் குறிக்கவில்லை. அது முருகனைக் குறிப்பதாகாகும். முருகன் சிவனின் மகன்தானே ஆதலால் அவரும் சைவக் கடவுள்தானே என சிலர் நினைக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. அதில் குறிஞ்சி நில மக்களின் தலையாய தொழில் வேட்டையாடுவது. அவர்களின் தெய்வமாகவே முருகன் என்பவர் குறிப்பிடப் பட்டிருக்கிறார். பிற்காலத்தில் புனையப் பட்ட புராணங்கள் எங்கிருந்தோ வந்த வாதாபி கணபதிக்கு அவரை தம்பியாக்கியது போல்தான் முருகன் சிவனுக்குப் பிள்ளையாக்கப்பட்டார். சிவனைப் பற்றிய குறிப்புகள் முதன் முதலாக கடைச் சங்ககாலத்து நூல்களில்தான் குறிப்பிடப் படுகிறது. இருப்பினும் அப்போது சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவம் என்ற பெயரில் ஒரு சமயம் இயங்கவில்லை.

அடுத்து தமிழர் வழிபாடுகளில் நடுகல் வழிபாடு மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது. களத்தில் வீரச் சாவை தழுவிக் கொண்ட மறவர்களின் நினைவாக நடுகல் நடும் வழிபாட்டையே இது குறிக்கிறது. ஆனால் அந்த வழிபாடுகள் சமய மரபுகளாக அடையாளம் காணப்படவில்லை.

சங்க இலக்கியங்களை மிக நுணுக்கமாக ஆராயும் பொழுது பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் கபாலிகம், வைதீகம், ஆசிவகம் என மூன்று வகையான சமயங்கள் குறிப்பிடப் படுகின்றன. இதில் ஆசிவகம் எனப்படுவது தமிழர்கள் தழுவிய சமயங்களில் மிகத் தொன்மையான சமயமாக கருதப் படுகிறது. ஆம் சைவத்தை தமிழர்கள் தழுவிக்கொள்ளும் முன்பே ஆசிவகத்தை பெருவாரியான தமிழர்கள் தழுவிக்கொண்டு விட்டார்கள். கடவுள் மறுப்பு, வருணாசிரம எதிர்ப்பு, வேத எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளைக் கொண்ட ஒன்றாகவே ஆசிவகம் விளங்கியிருக்கிறது. ‘அண்ணலம் பெருந்தவத்து ஆசிவகம்’ என சிலப்பதிகாரமும் கூறுகிறது. ஒரு காலத்தில் தமிழர்களால் போற்றித் தழுவப்பட்ட ஆசிவகம் இன்று அழிந்து போய்விட்டது.

தமிழர்களின் மதமாக வருணிக்கப் படும் சைவம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நிறுவனப் படுத்தப் படுகிறது. பெருவாரியான தமிழர்கள் அதற்குப் பின்னர்தான் அதனைத் தழுவிக் கொண்டார்கள். ஆசிவகத்திற்குப் பின்னும் சைவத்திற்கு முன்னும் இருந்த இடைப்பட்ட காலத்தில் பெருவாரியான தமிழர்களால் தழுவப்பட்டு மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த இரு பெரும் சமயங்கள்தாம் பௌத்தமும் சமணமும். பௌத்தத்தையும் சமணத்தையும் பின்னாளில் வந்தவர்கள் மதமாக வரித்துக் கொண்டாலும் உண்மையில் அவை மதங்கள் அல்ல. அவை கடவுளை அடிப்படையாகக் கொள்ளாமல் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. வன்முறைக்கு எதிரானவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தமும் சமணமும் தமிழர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவியது. மணிமேகலை, குண்டலகேசி போன்றவைகள் தமிழில் தோன்றிய பௌத்த இலக்கியங்களே. தமிழ்க் காப்பியமான மணிகேலைக்கு நிகரான ஒரு பௌத்த நெறிக் காப்பியம் வேறு எந்த மொழிகளிலும் இல்லை எனலாம்.

பௌத்தத்தைக் காட்டிலும் தமிழோடு மிக அதிகமாக தொடர்புற்றிருந்த ஒன்றாக சமணம் கருதப் படுகிறது. தமிழர்கள் மத்தியில் சைவம் எழுச்சிபெறத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பார்த்தால் அதன் காலம் சுமார் 1400 ஆண்டுகள், ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தனிப்பெரும் சமயமாக சமணம் விளங்கியிருக்கிறது. தமிழ் மொழிக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்கள் சமணத் துறவிகளே. தமிழ் மொழியின் இலக்கணங்களை எல்லாம் வகுத்தவர்களும் அவர்கள்தாம். இன்று தமிழர்களால் போற்றப் படும் பெருவாரியான நூல்களைப் படைத்தவர்களும் அவர்களே.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் போன்ற தமிழ் இலக்கிய கருவூலங்களில் சமணர்களின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. தமிழ் தேசியக் காப்பியம் என மீனாட்சிசுந்தரானார், ம.பொ.சி., அண்ணா, கலைஞர், கழக கைலாசபதி மற்றும் பல தமிழறிஞர்களால் போற்றப் பட்ட சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி. அதே ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணத் துறவி. இன்று நாம் தமிழ் மொழிக்கு எந்த இலக்கணத்தை பயன் படுத்துகிறோமோ நன்னூல் எனும் அந்த தமிழ் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் ஒரு சமணர். நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என திருக்குறளோடு இணைத்துப் போற்றப் படும் நாலடியாரை எழுதிய நூற்றவரும் சமணத்துறவிகளே. ஐம்பெருங் காப்பியங்களைப் போல் ஐஞ்சிறுங்காப்பியங்கள் தமிழில் உள்ளன அவையாவன உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி. இவை ஐந்தையும் படைத்தவர்கள் சமணர்களே. மேலும் வளையாபதி, ஏலாதி, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், பெருங்கதை என அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் பட்டியல் நீளுகின்றன.

இவ்வளவு ஏன் தமிழர்களின் மாபெரும் செல்வமான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் தழுவியிதும் சமணமாகத்தான் இருந்திருக்க முடியும் என தமிழாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சென்ற நூற்றாண்டின் சிறந்த தமிழாராய்ச்சியாளர்களில் ஒருவரான எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் வள்ளுவர் சமணரே என தனது ஆய்வுகளில் நிறுவியுள்ளார். அவரது கருத்தை ஒட்டி சமகால கட்டுரையாளரும் தீவிர இடது சாரி முற்போக்காளராகக் கருதப் படும் அ.மார்க்ஸ் மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் வள்ளுவர் சமணரே என்பதை அண்மையில் நிறுவியிருக்கின்றனர்.

சமணம் தமிழ் மண்ணில்தோன்றிய மார்க்கம் அல்ல. அது தோன்றியது வடநாட்டில்தான். ஆகையால் தமிழ் இலக்கியங்களை படைத்தவர்களும் தமிழ் மண்ணிற்கு அந்நியமானவர்கள் என்று நாயன்மாரல் விதைக்கப் பட்ட கருத்தை நம்புகிறவர்கள் இன்றும் உள்ளனர். அந்தச் சமணர்கள் வேறு யாருமிலர் பச்சைத் தமிழர்களே! இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அவதானிக்கலாம். சைவர்களால் படைக்கப் பட்ட இலக்கியங்களில் சமணத்திற்கு எதிரான காழ்புணர்ச்சி பல இடங்களில் காணப் படுகிறது. பெரிய புராணத்தில் அது மிக அதிகமாகவே காணப் படுகிறது. சமணத் துறவிகளிகளின் படைப்புக்களிலோ அவை இருக்கவில்லை.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் சமயப் பொதுவுடமை அங்கே நிலவுகிறது. தன் சமயத்தை புகழ்ந்து இன்னொரு சமயத்தை இகழும் தன்மை இளங்கோவடிகளிடத்தில் காணப்படவில்லை. சமண சமயத்தைச் சேர்ந்த கண்ணகிக்கு சைவ சமயத்தை சேர்ந்த சேரன் செங்குட்டுவன் சிலை எழுப்பினான் அதிலும் தமிழைப் பழித்த கனகன், விசயன் என்ற வடநாட்டு மன்னர்களை போரிட்டு வென்று, இமயத்தில் இருந்து கல்லெடுத்து அதனை தமிழைப் பழித்த தருக்கர்களின் தலையில் சுமக்க வைத்து கண்ணகிக்கு சிலை எழுப்பினான் என்ற செய்தியை இளங்கோவடிகள் வருணிக்கும்போது சமய உணர்வுகள் பின் தள்ளப் பட்டு தமிழ் உணர்வே மேலோங்கி நிற்கின்றது.

தேவாரம் திருவாசகம் போன்றவற்றை நாம் சைவ இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியும். ஆனால் சிலப்பதிகாரம், நன்னூல், சீவக சிந்தாமணி போன்ற நூல்களை நாம் சமண இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியாது. அவற்றை சமண இலக்கியங்கள் என்று சொல்வதைக் காட்டிலும் சமணத் துறவிகள் படைத்த தமிழ் இலக்கியங்கள் என்பதே சரியானது. சமணம் கற்பித்த அன்பு, அறம், சமத்துவம் போன்ற கொள்கைகளை அவர்கள் தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தினாலும் அவை சமூக நன்மையின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டிருக்கின்றனவே தவிர தனிப் பட்ட சமய உயர்வைக் குறிக்கவில்லை. சைவர்களின் இலக்கியங்கள் பக்தி மார்க்கத்திற்குள் முடங்கிவிட்டன. அறிவியல், அணுவியல், கணிதம், மருத்துவம் என சமணர்களின் இலக்கியங்கள் பல கூறுகளைத் தொட்டது. நீதியியல் எனப் படும் புது இயல் அவர்களால்தான் தமிழுக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. புலால் உண்ணுவதும் மது அருந்துவதும் பரத்தையர் தொடர்பும் சங்க இலக்கியங்களில்கூட கண்டிக்கப் படவில்லை அவற்றைக் கடுமையாகக் கண்டித்தவர்கள் சமணத் துறவிகளே.

தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு சமணத்தின் பங்கு அளப்பெரியது. பிறப்புக்கு ஒரு நீதி என்ற வைதீக மதம் (இந்த வைதீக மதம்தான் பின்னாளில் இந்து மதமாக நீட்சி பெற்றது.) கற்பித்த வேதாந்தங்களை மறுத்து கல்வியை அனைவருக்கும் சமமாக்கியவர்கள் அவர்களே. ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவதைப்போல் சமணத் துறவிகள் கல்வியையே தானமாக வழங்கினார்கள். அச்சு இயந்திரம் இல்லாத அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதுவது என்பது மிகக் கடினமாக பணியாகும். நேரமும் பொருளும் மிக அதிகமாக விரயமாகும். இருப்பினும் ஆயிரக்கணக்கான பிரதிகளை கைகளாலேயே எழுதி அவற்றை பலருக்கு தானமாக வழங்கினார்கள். கல்வி கற்கும் இடத்தை இன்றும் நாங்கள் பள்ளிக்கூடம் என்கிறோம் அந்தப் பள்ளி என்ற சொல் சமணத் துறவிகள் தங்கியிருந்த மடமாகிய ‘பள்ளி’ என்பதில் இருந்து வந்த ஒன்றாகும். அதனைப்போன்று ஓளடததானமும் அவர்களால் வழங்கப்பட்டு வந்தது. தங்களது மடங்களில் இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார்கள். இவ்வாறு தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்குடன் வாழ்ந்த சமணம் இன்று தமிழகத்தில் அற்ப சொற்ப எச்சங்களுடன்தான் எஞ்சி நிற்கின்றது. ஈழத்தில் அதுவும் இல்லை. இதன் மாபெரும் வீழ்சிக்கு என்ன காரணம்?

நடைமுறை வாழ்விற்கு சற்றும் பொருந்தாத கடுமையான துறவறத்தை வலியுறுத்தியதுதான் காரணம் என பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. சமணம் இல்லறத்தை துறவறத்திற்கு இணையாக சேர்த்துப் போற்றிய ஒரு மார்க்கம். அ.மார்க்ஸ், கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்களின் கருத்துப்படி வள்ளுவரை ஒரு சமணராகக் கருதுவோமானால் அவரது காமத்துப்பாலானது கண்களால் ஏற்படும் பார்வை மயக்கத்திலிருந்து உடலால் ஏற்படும் கலவி மயக்கம் வரை இல்லற வாழ்வின் எந்த சுகத்தையுமே விட்டு வைக்கவில்லை. திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியானது காதல் இன்பம் சொட்டும் ஒரு காவியம். அது உள இன்பத்தை மட்டும் விளக்கவில்லை உடல் இன்பத்தையும் சேர்த்துத்தான் விளக்குகிறது. சமணத் துறவிகள் வெள்ளாடை அணிந்து வந்தனர். அவர்களிலும் மிகக் குறிப்பிட்ட சிலரே துறவறத்தின் அதி உச்ச நிலையாக, ஆடைகூட மிகை என அதனையும் துறந்தனர். நமது தமிழ்ப் புலவர்களான இளங்கோவடிகள், திருத்தக்கதேவர், பவணந்தி முனிவர் போன்றவர்கள் அப்படி ஓர் அதி உச்சத் துறவை மேற்கொண்டார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. மற்றும்படி சமணத்தைத் தழுவியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் துறவே சரணம் என்று வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. திருமணம் முடித்து குடும்பம், குழந்தைகள், காதல், பாசம், ஆடல், பாடல் என வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துச் சென்றவர்கள்தாம்.

அப்படியானால் சமணத்தின் வீழ்ச்சிக்கு என்னதான் காரணம்? அது திட்டமிட்டு அழிக்கப் பட்டது என்பதுதான் உண்மை. அந்த அழிப்புப் படலங்கள்தான் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளன. சைவத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்காக சமணத்தைத் தழுவியிருந்த எண்ணாயிரம் தமிழர்கள் துடிக்கத் துடிக்க கழுவில் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப் பட்டனர். சமணர்கள் மட்டுமல்ல அவர்களது இலக்கியக் கருவூலங்கள் அனல் புனல் வாதம் என்ற பெயரில் அழித்தொழிக்கப் பட்டன. இவை பெரிய புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள். அவற்றுள் குறிப்பிடப்படாமல் துடைத்துத் தள்ளப்பட்ட சமணர்களும் அவர்களின் இலக்கியங்களும் ஏராளம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நாலடியார் போன்றவைகள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம்.

சமணப் பள்ளிகள் இடிக்கப் பட்டன, அவர்களது நிலபுலன்கள் கவரப்பட்டன, யானைகளைக் கொண்டு அவர்களது தலைகள் இடறப்பட்டன. சமணத்தை அழிப்பதற்கு சைவம் எவ்வாறு ஆவேசத்துடன் இருந்திருக்கிறது என்பதை சைவ அடியார்களின் பதிகங்களே நமக்கு சான்று தருகின்றன.

"பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணற் கற்பழிக்கத் திருவுளமே" - திருஞான சம்பந்தர்

"அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் சிரங்களை சிந்தவாது செயத் திருவுள்ளமே" - திருஞான சம்பந்தர்

"குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண சாக்கிப்பேய்’’ - சுந்தர மூர்த்தி நாயனார்

"புலையறம் பேசும் புத்த சமணர்களின் தலையறுக்க வேண்டி நின் தாழ் பணிந்தேனே". - சேக்கிழார்

"விருது பகரும் வெஞ்சொல் சமணர் வஞ்சகச் சாளுக்கியர்" - மாணிக்கவாசகர்


சமணத்தின் மீது சைவம் காட்டிய இத்தகைய காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம்? சமணம் வேதங்களையும் யாகங்களையும் அடியோடு மறுத்துரைத்ததுதான் காரணம். அப்படி மறுத்துரைப்பதற்கு அவைகளில் என்னதான் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவற்றுள்தான் எல்லாமே இருக்கிறது. வேதங்கள் பிறவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தன, உழைக்கும் மக்களை உதறித்தள்ளி உழைக்காமல் பூணூலையும் தர்ப்பைப் புல்லையும் காவித்திரியும் கூட்டத்திற்கு முழு உரிமைகளையும் அளித்தன. யாகங்களில் வளர்க்கப்படும் ஓமத்தீயில் உயிர்கள் வெட்டிப் பலியிடப் பட்டன. சைவம் இவைகளை ஏற்றுக் கொண்டது. சமணம் இவைகளைக் கண்டித்தது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் சமணம் துடைத்துத் தள்ளப்பட்டது.

சமணம் ஒருவேளை தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்திருக்குமேயானால் அது கற்பித்த சமத்துவத்தின் விளைவாக தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லாமல் போயிருந்திருக்கக் கூடும். ஏனெனில் சுமார் 14 நூற்றாண்டுகளாக தமிழ் மண்ணில் தழைத்தோங்கியிருக்கும் சைவம் சாதியத்திற்கு எதிராக எந்த விதிகளையும் வகுக்கவில்லை. பிறிவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பனியத்தை அது ஏற்றுக் கொண்டது. ஆதனால்தான் இந்து மதம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது போல் சைவமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. சைவம் பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டதால் சைவமும்; வேதமதமாகிய இந்து மதமும் ஒன்றென்றோ அல்லது வரலாற்று அடிப்படையில் இரண்டிற்கும் தொடர்பு உண்டு என்றோ கூறமுடியாது. வேதமதத்தை எதிர்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் சைவம் எதிர்த்ததால் அதுவும் இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்று என்று கதை கட்டி விடப் பட்டது. பின்னாள்களில் அதற்கு ஏற்றவாறு புராணக் கதைகளும் புனைந்து விடப்பட்டன.

என்னதான் சைவம் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பன மேலாதிக்கமானது சைவத் திருமுறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழனின் தாய் மொழியை புறந்தள்ளி புரியாத மொழியான சமஸ்கிருதத்தில் பூசை செய்யும் அவலம் தொடர்கின்றது. சைவம் பார்ப்பனியத்தையும் பிறவி ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான் என்பதை தமிழறிஞரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பலோட்டியவருமான வ.உ.சிதம்பரனார் அவர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார். வ.உ.சி. பின்வருமாறு கூறுகிறார்.

"எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைகொண்டு ஆராய்வோம், கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழையிருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான்... பெரியபுராணத்தில் கூறப்படும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளதுதான் எனக்கூறினால் சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்பந்தம்முண்டென்று கூறுவதைத் தவிர வேறென்ன செய்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம் திருத்தவேண்டியதுதான். சைவத்திலும் அப்படியேதான்"

வ.உ.சி நாத்திகரல்ல சைவப் பராம்பரியத்திலிருந்து வந்தவர்தான். சைவத்தின் குறைகளை அவரும் வெளிக்காட்டியுள்ளார்.

சைவம் உயிர்க் கொலைகளை அன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறியும்போது நம்மில் பலர் அதிர்ச்சி அடையவே செய்வார்கள் ஏனெனில் இன்றைய காலத்தில் சைவம் என்றால் அது மச்சம் மாமிசம் தவிர்த்த ஒன்றாகவே கருதப்படுகிறது. புலாலை கடுமையாக மறுக்கும் ஒன்றாகவே அது இன்று காட்டப்பட்டு வருகிறது. சைவத்திற்குள் இந்த மறுமலர்ச்சி எப்படி ஏற்பட்டது?

சமணத்தின்மீது சைவம் மேற்கொண்ட கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து சமணத்தைத் தழுவியிருந்த பல தமிழர்கள் சைவர்களாக மாறினர். இருப்பினும் அவர்கள் சமணக் கொள்கைகளைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கைகள் நாளடைவில் சைவத்திற்குள் புகுந்தன. மிகைப் படுத்தப் பட்ட செய்தியாகத் தோன்றினாலும் அதுதான் உண்மை. ஏனெனில் சங்க காலத்தில் தமிழர்களால் வணங்கப் பட்ட முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்றவைகள் உணவாகப் படைக்கப் பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஊன் உண்ணாமை என்பது சமணம் வகுத்த கொள்கையே. கொல்லாமை என்பது பௌத்தம் மற்றும் சமணத்தின் உயிர் நாடிக் கோட்பாடுகள். அதிலும் கொல்லாமையோடு சேர்த்து ஊன் உண்ணாமையையும் மிக அதிகமாக வலியுறுத்தியது சமணம் மட்டுமே. மேலும் பௌத்தத்தைக் காட்டிலும் சமணம் பல ஆண்டுகள் தொன்மையானது. இதிலிருந்து இந்தக் கோட்பாடானது சமணம் கற்பித்த ஒன்றுதான் என்பது தெளிவாகிறது.

மேலும் ஒரு உண்மையை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. காய்கறி உணவானது சமணம் செழிப்புற்றிருந்த காலத்தில் சைவ உணவு என அழைக்கப் படவில்லை. அப்போது மரக்கறி உணவானது ஆருகத உணவு என்றே அழைக்கப் பட்டது. இந்த ஆருகதம் எனப்படுவது சமணத்தின் மற்றுமொரு பெயர் ஆகும். சைவ இலக்கியங்கள் சமணர்களை அருகர் எனப் பழித்ததும் இதே பொருளில்தான். இதே மரக்கறி உணவை இன்றும் ஒரு சிலர் ஆராத உணவு என்று அழைப்பதை நாம் அறியலாம். இது ஆருகாதம் என்பதின் திரிபேயாகும்.

இவ்வாறு தமிழர் வாழ்வில் அவர்தம் கல்வி, இலக்கியம், பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் சமணத்தின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

சைவம்தான் தமிழரின் சமயம் என்று ஆண்டாண்டு காலம் கூறி வந்த கருத்தை மறுத்துரைப்பதால் சமணம்தான் தமிழரின் சமயம் என நாம் இங்கு கூற வரவில்லை. தமிழரின் அடையாளத்தை நாம் சமயத்தோடு பிணைத்து விடக் கூடாது என்பதைதான் இங்கு எடுத்து இயம்புகின்றோம். தமிழர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமயத்தை அவர்கள் பின் பற்றி இருக்கிறார்கள். அவ்வாறு பின் பற்றிய சமயங்களில் சமணத்தின் பங்கு போற்றுதலுக்குரியது. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதிய கிறிஸ்தவப் பாதிரியாரும் மேலை நாட்டு அறிஞருமான கால்டுவேல் அவர்கள் பின்வருமாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

‘சமணர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம்’.

1 comment: