காந்தித் தாத்தா வாங்கித் தந்த சுதந்திரம்
யாழ்ப்பாணம் டவுனுக்கு செல்லும் போதெல்லாம் யாழ் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள அந்த முதியவரின் சிலையை நான் அடிக்கடி கண் வெட்டாமல் பார்த்துக் கொள்வது வழக்கம். வளைந்த முதுகுடன் கோலை ஊன்றி அவர் நிற்கும் அழகு அந்தச் சின்னஞ் சிறு வயதிலேயே ஒரு வித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது தாத்தாவுடன் அவரது கையைப் பிடித்துக்கொண்டு டவுனுக்குச் செல்லும்போது அவரைப் பற்றிக் கேட்டேன். அவர்தான் காந்தித் தாத்தா இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் என்றார் தாத்தா. அன்றிலிருந்து யாழ்ப்பாணம் டவுன் என்றதும் எனக்கு காந்தித் தாத்தாவும் நினைவுக்கு வந்து விடுவார். அதன் பின்னர் எனது மாமா ஒருவர் காந்தியடிகளின் கதையைச் சொன்னதாக ஞாபகம்.
ஒரு முறை எனது தந்தையார் இந்தியாவுக்குச் சென்றபோது காந்தி மகான் கதை என்ற நூலை எனக்கு வாங்கி அனுப்பியிருந்தார். அஹிம்சை என்ற சொல்லை முதன் முதலாக காந்தியடிகளின் வரலாற்றைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் விடுதலைக்கு காந்தியடிகளின் அஹிம்சைதான் காரணம் என நான் படித்த பாடசாலைகளிலும் கற்பிக்கப் பட்டது. கத்தியின்றி இரத்தமின்றி போராடிய காந்தியடிகளின் போராட்டமும் இந்திய விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்கும் எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தின..
காந்தியடிகளின் அஹிம்சைக் கோட்பாட்டைப் காட்டி இந்தியத் தேசிய வாதிகள் ஈழப் போராட்டத்தை சிறுமைப் படுத்திப் பேசி வருகிறார்கள். மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் போரடி வெற்றி பெற்றது போன்று ஈழத்தமிழர்களும் போராட முடியாத என அவர்கிளின் மேல் மட்டங்களிலிருந்து குரல்கள் இன்றளவும் ஒலிக்கின்றன.
அஹிம்சை உண்மையிலேயே ஒரு நாட்டுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்து விடுமா?
உண்மையில் அஹிம்சை என்பது மக்களுக்கு ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமே தவிர விடுதலைக்கு ஒரு போதும் வழி சமைத்துக் கொடுக்காது. இலெனின், ஹோசமின், ஃபிடல் கஸ்ட்றோ போன்று உலகப் போராட்ட வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்தவர்கள் அனைவரும் நடத்தியது வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்களே. ஆஹிம்சைப் போரட்டத்தை எதிரிகள் நசுக்கக்கூடத் தேவையில்லை கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும் அது பல ஆண்டுகள் நீடித்து வெற்றி பெறாமலே போய்விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
அப்படி என்றால் இந்தியா எப்படி வெற்றி பெற்றது?
இந்தியாவின் முதல் விடுதலைப்போர் 1857 ஆம் ஆண்டு நடைபெற்றதாக இந்திய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே 1755 ஆம் ஆண்டு திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வாலைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்த புலித்தேவன் என்ற தமிழ் மன்னன் வெள்ளையனே வெளியேறு என்ற வீர முழக்கத்தை எழுப்பினான். விடுதலையின் முதல் குரல் புலித்தேவனிடமிருந்துதான் ஒலித்தது. அவனைத் தொடர்ந்து வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் போன்றவர்கள் விடுதலைப் போரில் ஈடுபட்டார்கள். இவர்கள் நடத்திய போராட்டங்கள்; அனைத்தும் இரத்தம் சிந்திய ஆயுதப் போராட்டங்களே. இவர்களின் போராட்டங்கள் 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியுடன் முடிவுற்றது. அது மட்டுமல்ல இவர்கள் யாரும் இந்திய உணர்வுடன் போராடவில்லை. ஏங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த வீரபாண்ய கட்டப்பொம்மனை எடுத்துக் கொள்வோம். கட்டப்பொம்மன் யார்? திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற சிறு பகுதியை ஆண்டு வந்த குறுநில அரசன். அவனுக்கு இருந்த கவலை தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி வெள்ளையர்கள் கைக்கு போய்விடக்கூடாது என்பது மட்டுமே.
அதேபோன்று வடபுலங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப் போராட்டங்களை மேற்கொண்ட ஜான்சி ராணி லட்சிமிபாய், ராணா பிராதாப்சிங் போன்றவர்களும் தங்கள் நாட்டு உணர்வுடன் போரிட்டார்களேயன்றி இந்திய உணர்வுடன் அல்ல. 1755 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் 1945 இல் நேதாஜி மறையும்போதும் கனன்று கொண்டுதான் இருந்தது. இவ்வாறு தனித்தனியே நடந்த போராட்டங்களையே பிற்காலத்தில் காந்தியடிகள் ஒன்றாக இணைத்து இந்தியத் தேசியப் போராட்டமாக மாற்றினார். 1920 ஆம் ஆண்டிலிருந்து இந்திய விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையின் கீழ் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இருந்தாலும். இந்திய விடுதலைக்கு அவரது அஹிம்சை காரணமில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை.
அஹிம்சை இந்தியவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது உண்மை என்றால் பிரிட்டனின் கொலனி ஆதிக்கத்தில் இருந்த இலங்கை, பர்மா (தற்போது மியான்மார்), மலேசியா போன்றவற்றின் விடுதலைக்கும் அஹிம்சையா காரணம்?
உண்மையில் காந்தியடிகள் ஒரு மிதவாதத் தேசியவாதியாகவே தன்னை வெளிக்காட்டி நின்றார். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரிடம் காணப்படவில்லை. அவரது போராட்டம் பிரித்தானியாவுக்கு அழுத்தத்தையோ தலையிடியையோ கொடுக்கவில்லை. தேசியத்தை தெய்வீகத்துடன் இணைத்து ஆன்மீக அரசியல் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இரபிந்திரநாத் தாகூர் காந்தியடிகளிடம் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு, தேசியம் வேறு தெய்வீகம் வேறு எனவே இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டார். ஆனால் காந்தியடிகளோ அதைக் கேட்காமல் ராமராச்சியம் காண வெளிக்கிட்டார்.. எனவே அவரது ஆன்மீக அரசியல் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டது என்று சொல்வது நகைப்புக்குரியது
இந்திய விடுதலைக்கு எது உண்மையான காரணம் என்பதை John Kenneth Galbraith என்ற கனடிய-அமரிக்க பொருளாதார அறிஞர் தனது A Journey Through Economic Time என்ற நூலில் விரிவாக அலசுகிறார். கொலனியாதிக்கத்தில் உள்ள நாடுகளில் நடந்த போராட்டத்தை மறுத்து பொருளாதாரமே இந்திய விடுதலைக்கு அடிப்படைப் காரணம் என்று கூறுகிறார்.
அவரது கருத்து வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது மிகச் சரியாகவே தென்படுகிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் தொடங்கி அரசுகள் வரை அனைத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது பொருளாதாரக் காரணிகளே. இந்தியா, இலங்கை, பார்மா போன்ற நாடுகளை அடிமை கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கொம்பனி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலையாய நோக்கம் ஆசிய நாடுகளைச் சுரண்டி தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான். வணிக நோக்கில் வந்தவர்கள் அடுத்து நாடுகளை அடக்கியாளத் தொடங்கினார்கள்.
1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் தென்பட்டன. அமரிக்காவும் சோவியத் யூனியனும் மிகப் பெரிய வல்லரசாக மாறத் தொடங்கின. இரு வல்லரசுகளுக்குமிடையில் பனிப்போர் தொடங்கியது. அதுவரைக்கும் சூரியன் மறையாத பேரரசு என்ற இறுமாப்புடன் இருந்த பிரிட்டன், இரண்டாம் உலகப்போரில் நேரடியாக பங்கெடுத்ததன் விளைவால் பாரிய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. எனவே தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுத் தேவை பிரிட்டனுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தனது நாட்டிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இந்தியா என்ற மிகப் பெரிய நிலப்பரப்பை நிர்வாகம் செய்ய முடியவில்லை. இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுக்க அவர்கள் முடிவுசெய்கிறார்கள். இதுதான் இந்திய விடுதலையில் ஒளிந்திருக்கும் உண்மைக் காரணம்.
எனவே காந்தித் தாத்தாவால் சுதந்திரம் கிடைத்தது என்ற கருத்து மிகைப் படுத்தப் பட்டது என்பது மட்டுமல்ல வரலாற்றுக்கு முரணானதும் கூட..
Subscribe to:
Post Comments (Atom)

இந்த கருத்து சமீபத்தில் வந்த மதராசப்பட்டினம் என்ற படத்திலும் கூறப்பட்டிருந்த்தது, அவர்கள் காந்தி என்ற பெயரை பயன்படுத்தாமல் இதே காரணத்தை கூறினார்கள்.
ReplyDeleteகாந்தி தாத்தா- அஹிம்சை இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததோ இல்லையோ, தனி மனிதனாக பல கொடுமைகளிற்கு மத்தியிலும் அஹிம்சையை கைவிடாத உயர்ந்த மனிதர் அவர்!
இங்கே கோபுரங்கள் சாய்ந்தாலும் அதன் கட்டுமான கற்கள் தனியாகவே ஒளிர்கின்றது!
நல்ல கட்டுரை, இதை வாசித்த பின் என்னில் எழுப்பப்பட்ட கோபுரங்களை நோக்கி என் சிறகுகளும் விரிகின்றன!
இந்திய விடுதலைக்கு காந்தியடிகள் காரணம் இல்லை என்பதை வெளிக்கொணர்வதே எனது நோக்கம்!
ReplyDeleteஆனால் காந்தியடிகள் மிக நல்ல மனிதர்! தனிப் பட்ட முறையில் அவர் மீது என் போன்றவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது! அவரது வழிமுறைகள் நடைமுறை வாழ்விற்கு ஒத்துவராமல் இருக்கலாம்! அதேசமயம் காந்தியம் அற்புதமான கொள்கை! யாராவது எங்களை அடித்தால் ஒன்று திருப்பி அடிப்போம் அல்லது பின்வாங்கி ஓடுவோம்! காந்தியம் எப்படித் தெரியுமா திருப்பி அடிக்கவும் கூடாது பயந்து பின்வாங்கவும் கூடாது! ஒரு விதத்தில் அது முட்டாள் தனமாக இருக்கலாம்! அதேசமயம் கோழைத்தனமும் அல்ல! எதிரிகளை ஆன்மரீதியாக வலுவிழக்க அவர் பயன் படுத்திய ஆயுதம்தான் அஹிம்சை!
இந்திய விடுதலைக்கு அவர் காரணம் அல்ல ஆனால் அஹிம்சையால் அவர் இன்னொன்றைச் செய்தார்!
பிரிவினையின் போது, மனித உயிர்கள் ஏராளமாக இருதரப்பிலும் கொன்று குவிக்கப் பட்டன! வகுப்புவாத வெறியை முதலில் வளர்த்தவர்கள் இந்துத் திவிரவாத தலைவர்கள்தான்! இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதை ஒத்துக் கொள்ளவதில் தவறில்லையே!
வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்த தீப்பு சுல்தான் போன்றவர்கள் முஸ்லீம்கள்தான்! சாரே ஜகான்சே அச்சா என்ற பாடல் பல திரைப்படங்களில் ஒலித்து பாத்திருப்பீர்கள் அதை எழுதிய முகமது இக்பால் ஒரு முஸ்லீம்! இப்படி ஒற்றுமையாக இருந்தவர்களிடத்தில் இது இந்து தேசம் என்று அவர்களுக்கு எதிராக வகுப்புவாத வெறியை விதைத்தது இந்துத் தீவிரவாத தலைவர்கள்தான்! அதன் பின் முஸ்லீம் அடிப்படைவாதிகள்பல கொடுமைகளை இழைத்தார்கள் என்பது உண்மைதான்! ஆனால் அதைத் தொடக்கி யவர்கள் இந்து அடிப்படைவாதிகள்தான்!
பிரச்சனை என்று வந்தவுடன் இரு தரப்பிலும் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது! இருப்பினும் பிரச்சனையைத் தொடக்கியவர்கள்தானே குற்றவாளிகள் இல்லையா?
ஈழத்தில் தமிழர் தரப்பிலிருந்தும் பல தவறுகள் நடந்திருக்கின்றன! ஆனால் பிரச்சனையைத் தொடக்கியவர்கள் சிங்களவர்கள்! பாதிக்கப் பட்டவர்கள் தமிழர்கள் ஆகையால் குற்றவாளி சிங்களமே!
அது போல்தான் இந்தியாவில்! பிரச்சனையைத் தொடக்கியது இந்தத்துவம்! (தனிப்பட்ட நம்பிக்கை அவரது விருப்பம் காந்தியடிகளுக்கு இல்லாத நம்பிக்கையா!)அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் முஸ்லீம்களே!
இந்தி இடத்தில் காந்தியடிகளின் பங்கு வியப்புக்குரியது!
1947 அவர் கல்கத்தா மாநகரத்தில் நவகாளி என்னும் இடத்திர் தங்கியிருக்கிறார்! கொலை வெறியோடு இரு தரப்பினரும் அலைகின்றனர்! காந்தி வருகிறார் இருதரப்பினரின் ஆயுதங்களும் கீழே விழுகின்றன! அதே கால கட்டத்தில் பல இடங்களில் பிணங்கள் குவிகின்றன! காந்தி இருந்த இடத்தில் ஒரு உயிரும் போகவில்லை! இது அவரின் அஹிம்சைக்குக் கிடைத்த வெற்றிதானே!